Published:Updated:

800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!
பிரீமியம் ஸ்டோரி
News
800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

கால்நடை

“நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் கொடுக்குற தொழில்தான். ஆனால், நம்ம கவனம் முழுமையா இருக்கணும். கோழிகளை வாங்கி அடைச்சு, தீவனம் கொடுத்து வளர்த்தா முட்டை போடும். அடை வெச்சா குஞ்சு பொறிச்சிடும்னு மேம்போக்கா இருந்தா, நிச்சயம் கோழி வளர்ப்பு தோல்வியில்தான் முடியும். கோழிப்பண்ணை ஆரம்பிச்சா, முதல் வருமானம் பார்க்கக் குறைஞ்சது எட்டு மாசங்கள் ஆகிடும். இதைப் புரியாம பண்ணை ஆரம்பிச்சோம். வருமானம் கிடைக்கலைனு ரெண்டு மூணு மாசத்திலயே சிலர் பண்ணையை மூடிடுறாங்க. முழு ஈடுபாட்டோடு கவனமா செய்றவங்க நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம். அதுக்கு நானே உதாரணம்” என்று தேர்ந்த அனுபவத்துடன் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் வசந்தவேல்.

800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

வேடசந்தூர் தாலூகா, வடமதுரை அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வசந்தவேல். இவர் தனியார் கல்லூரியில் ‘டெக்ஸ்டைல் டெக்னாலஜி’ படித்து வருகிறார். கல்லூரியில் படித்துக்கொண்டே குடும்பத்தினரோடு இணைந்து கோழி வளர்ப்பை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு விடுமுறை நாளில் கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தவேலைச் சந்தித்தோம். “விவசாயக்குடும்பம்தான் எங்களுடையது. எனக்குக் கால்நடை வளர்ப்புல ஆர்வம் அதிகம். முன்னாடி ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கத்தான் முயற்சி பண்ணினேன். அதுக்குத் தேவையான அளவு தண்ணீர் வசதி இல்லாததால, சூழ்நிலைக்கேத்த மாதிரி கோழிப்பண்ணை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். ஆரம்பத்துல பத்து கோழிகளை வாங்கிட்டு வந்து பண்ணை ஆரம்பிச்சேன். இப்போ மூணு வருஷமாச்சு. அப்படியே கோழிகள் பெருகி இன்னைக்குப் பெரிய பண்ணையாகிடுச்சு. பெருவிடை, சிறுவிடை ரகங்களைத்தான் வளர்க்குறேன். இது ரெண்டுமே சண்டைக்கு ஏற்ற ரகங்கள். பெருவிடை, சிறுவிடை, கட்டமூக்கு விசிறிவால் ரகங்கள்ல சேவல்கள் அதிகமா இருக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

இங்க இயற்கை முறையிலதான் கோழிகளை வளக்குறேன். கோழிகளுக்காக ஒரே ஒரு கொட்டகைதான் இருக்கு. அதுவும் ராத்திரியில தங்குறதுக்கு மட்டும்தான். எங்களுக்கு இங்க ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல முழுக்கக் கோழிகள் மேயும். கோழிகளுக்காகவே போன தடவை மக்காச்சோளமும் கம்பும் போட்டிருந்தேன். இந்தத் தடவை மழை இல்லை. தண்ணியும் குறைஞ்சுட்டதால, எதையும் விதைக்கலை.

ஆனாலும், கோழிகள் காடுகள்ல மேய்ஞ்சு மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைச் சாப்பிட்டுக்குது. செடி, கொடிகள்ல இருந்து தேவைப்படுற இலைகளையும் சாப்பிட்டுக்குது. இப்படி முழுக்க இயற்கை முறையிலதான் கோழிகள் வளருது. இனப்பெருக்கத்துக்கான சேவல்களை மட்டும் தனியாகக் கட்டிவெச்சு வளர்க்குறேன். 

800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

எங்கிட்ட இருக்குற தரமான சேவல்களைப் பயன்படுத்திதான் குஞ்சுகளை உற்பத்தி பண்றேன். தேவைப்படுறவங்களுக்கு அவங்க விரும்புற சேவலைப் பெருவிடைகோழிகளோடு இணை சேர்த்து குஞ்சுகளை உற்பத்தி செஞ்சுக் கொடுக்குறேன். சேவலோட நிறம், வால் இதையெல்லாம் வெச்சு சேவலைத் தேர்ந்தெடுப்பாங்க” என்ற வசந்தவேல், கொஞ்சம் தீவனத்தை அள்ளிக் கையில் வைத்துக்கொண்டு ஒரு சத்தம் கொடுத்தவுடன் மேய்ந்து கொண்டிருந்த கோழிகள் அனைத்தும் அவரை நோக்கி வந்தன.

“இங்க இருநூத்தம்பது உருப்படிகளுக்கு மேல இருக்குது. இது இல்லாம என்னோட மூணு அண்ணன்களோட தோட்டத்துலயும் ஒவ்வொரு கோழிப்பண்ணை இருக்கு. அதையும் நான்தான் பார்த்துக்குறேன். அந்தப் பண்ணைகள்லயும் இதே மாதிரி மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். குஞ்சுகள், வளர்ற கோழிகள், தாய்க்கோழிகள், சேவல்கள்னு நாலு பண்ணைகள்லயும் சேர்த்து மொத்தம் 800 கோழிகளுக்கு மேல இருக்கு. நாலு பண்ணைகள்லயும் கோழி விற்பனை, முட்டை விற்பனை எல்லாத்தையும் நான்தான் பார்த்துக்குறேன். சென்னை சுத்துவட்டாரப் பகுதிகள்ல அதிகம் இருக்குற கட்டை மூக்கு விசிறிவால், சண்டைக்குப் பயன்படுத்துற மயில் சேவல், சங்ககிரிப் பகுதி ரகமான கருங்கண் கருங்காலி, காலில் முள் இருக்குற பொள்ளாச்சி ரகம், காகப்பூதி சேவல்கள், கோழிகளைத்தான் அதிகம் பேர் விரும்பி வாங்குறாங்க. நான், சேவல்களைச் சண்டைக்குப் பழக்குறதில்லை. குஞ்சுகளாத்தான் கொடுப்பேன். வாடிக்கையாளர்களோட தேவையைப் பொறுத்து முட்டை, குஞ்சு, கறிக்கான கோழி, சேவல்னு விற்பனை செய்றேன்” என்றார், வசந்தவேல்.

800 கோழிகள்... மாதம் ரூ. 50,000 லாபம்! - படித்துக்கொண்டே பண்ணை நடத்தும் இளைஞர்!

நிறைவாக வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த வசந்தவேல், “ஒரு முட்டை 80 ரூபாய்னு இனப்பெருக்கத்துக்காக மாசம் 300 முட்டைகள்வரை விற்பனை செய்றேன். 10 நாள் வயசுள்ள குஞ்சுகளை ஒரு குஞ்சு 120 ரூபாய்னு கொடுக்குறேன். கறிக்கான கோழிகளை உயிர் எடையா கிலோ 450 ரூபாய்னு கொடுக்குறேன்.

பெரிய சேவல்களை நிறம், மூக்கு, கால்னு உடல் குறிகளை வெச்சு விலை வைப்பேன். ஒரு சேவல் 5,000 ரூபாய்ல இருந்து 20,000 ரூபாய் வரை விலைபோகும். முட்டைகள், கோழிகள், சேவல்கள் விற்பனை மூலமா சராசரியா ஒரு மாசத்துக்கு 1,50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், வேலையாள் சம்பளம், பராமரிப்பு எல்லாம் சேர்த்து 1,00,000 ரூபாய் வரை செலவாகிடும். நாலு பண்ணைகள்லயும் சேர்த்து மாசம் 50,000 ரூபாய் வரை லாபமா நிக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார்..

தொடர்புக்கு, வசந்தவேல், செல்போன்: 63816 28484.

ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

கோழி வளர்ப்பு... கவனம்!

“ஆ
ரம்பக் காலத்துல குறைவான அளவு கோழிகள்லதான் பண்ணையை ஆரம்பிக்கணும். சிறுவிடைக் கோழிகளை வெச்சு முதல்ல தொடங்கலாம். இதுல முட்டை நிறைய கிடைக்கும். சிறுவிடைக் கோழிகள் ஒரு கிலோ எடைதான் இருக்கும். மழை, வெயிலுக்கு ஒதுங்குற அளவுக்கு ஒரு கொட்டகை இருந்தால் போதும். கொட்டகைக்கு அதிகச் செலவு செய்ய வேண்டியதில்லை. நாட்டுக்கோழிகளை அடைச்சு வைக்காம, வெளியில நடமாடவிட்டு வளர்த்தாதான், இனப்பெருக்கம் நல்லா நடந்து கோழிகள் பெருகும்” என்கிறார், வசந்தவேல்.

சளித்தொல்லையைப் போக்கும் மூலிகைகள்!

கோ
ழிகளுக்கான வைத்திய முறைகள் குறித்துப் பேசிய வசந்தவேல், “கோழிகளுக்கு எல்லாக் காலத்துலயும் வர்ற நோய் சளி. கோழிகளுக்குக் காய்ச்சி ஆற வெச்ச தண்ணியைக் கொடுத்தா, சளி பிடிக்காது. தண்ணியில கொஞ்சம் மஞ்சள்தூளைக் கலந்து கொடுத்தா, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வேப்பிலை, கீழாநெல்லி, குப்பைமேனி, தொட்டாச்சிணுங்கி நாலையும் வேரோடு பிடுங்கி காயவெச்சு அரைச்சு பொடிச்சுக்கணும். இந்தப்பொடியைத் தண்ணியில கொஞ்சம் கலந்து கொடுத்தா சளி பிடிக்காது.

வெயில் காலத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கும். அதுக்கான தடுப்பூசி போடணும். புதுசாப் பண்ணை வைக்குறவங்க, எல்லா நோய்க்கும் அலோபதி மருந்துகள், தடுப்பூசிகளைப் பயன்படுத்துறதுதான் நல்லது. கொஞ்சம் அனுபவம் கிடைச்ச பிறகு நாட்டு மருந்துகளைப் பயன்படுத்திக்கலாம். அப்போதான் இழப்புகளைக் குறைக்க முடியும்” என்றார்.