Published:Updated:

600 நாட்டு மாடுகள்; 60 குதிரைகள்... களைகட்டிய கொங்கு கால்நடைத் திருவிழா!

600 நாட்டு மாடுகள்; 60 குதிரைகள்... களைகட்டிய கொங்கு கால்நடைத் திருவிழா!
News
600 நாட்டு மாடுகள்; 60 குதிரைகள்... களைகட்டிய கொங்கு கால்நடைத் திருவிழா!

``24 மாடுகளும் 1 காங்கேயம் காளையும் வச்சசுருக்கேன். யார் சொன்னாலும் அடங்காத இந்தக் காளை, என்னோட அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படும். தினமும் 300 ரூபாய்க்கு தீவனம் வாங்கிக் கொடுப்பேன். இனபெருக்கம் மட்டுமல்லாம உழவுக்கும் பயன்படுத்துவோம்."

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் சமத்தூரில், கொங்கு நாட்டுக் கால்நடை மற்றும் வேளாண் திருவிழா பிப்ரவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை, வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. 50,000-க்கும் மேற்பட்ட மக்களின் வருகையோடு நிகழ்ந்த இவ்விழாவில் உள்ளூர், வெளியூர் என ஏராளமான மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கிய பிறகு நாட்டு மாடுகள் வளர்ப்பு மீது மக்களும், இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மை மேம்பாடு, மாதிரி வேளாண் பண்ணை, வேளாண் செயலி கருத்தரங்குகள் என விவசாயத்தில் தொடங்கி நாட்டுப் புற கலைநிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தய வண்டிகள், 600 நாட்டு மாடுகள், 42 நாட்டு எருமைகள், 64 நாய்கள், 112 சேவல்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் என நாட்டு இனங்களை ஒரே சேர மக்கள் பார்வைக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைத்திருந்தது, இவ்வேளாண் கால்நடை திருவிழா.

அலையாய் வந்திருந்த மக்கள் கூட்டம், திமிறிக் கொண்டிருக்கும் காளைகளையும், உத்வேகத்துடன் குதித்துக்கொண்டிருந்த குதிரைகளையும், நாட்டு நாய்களையும் ரசித்துக்கொண்டிருக்க, இன்னொரு புறம் கால்நடைகளுக்கான அழகு போட்டி நடந்து கொண்டிருந்தது. ராயல் என்பீல்ட் பைக்கும், மாட்டு வண்டியும் சிறந்த போட்டியாளருக்கான பரிசாக மேடைமீது நிற்க வைக்கப்பட்டிருந்தன. வானவராயர் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் தன்னார்வலர்களும் பரபரப்பாக மக்களை ஒருங்கிணைத்தும் போட்டிகளை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருந்தனர்.

விழாவின் முக்கியத்துவம் குறித்து விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணனிடம் பேசினோம். ``இத்திருவிழாவை 2015-ல் தொடங்கினோம். சென்ற நான்கு வருடமாகக் கால்நடைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். இந்த முறை வேளாண்மை சார்ந்த அரங்குகள், மாதிரிப் பண்ணை போன்றவற்றைச் சேர்த்திருக்கிறோம். மாடித்தோட்டம் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் தாவர வளர்ப்பு முறைக்கும் மக்களிடம் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இன்றைய சூழலில் நாட்டு இனக் கால்நடைகளை வளர்ப்பது சிரமம், அப்படி வளர்ப்பவர்களை ஊக்குவிப்பது அவசியம்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விழாக் குழுவின் உள்ளூர் தன்னார்வலரான ராசுக்குட்டி விழா பற்றிப் பேசும்போது, ``பழைமையின் முக்கியத்துவத்தையும் , நாட்டு மாடுகளின் அவசியத்தையும் பறை சாற்றும் விதமாக இவ்விழாவை அமைத்துள்ளோம். இங்கு வளர்க்கப்பட்டிருக்கும் வேளாண் மாதிரிப் பண்ணையானது வானவராயர் விவசாயக் கல்லூரி மாணவர்களின் ஆறு மாத உழைப்பு. 2015-ல் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் 300-க்கும் குறைவான நாட்டு மாடுகள்தான் இருந்தன. தற்போது கணக்கெடுப்பில் 35,000 க்கும் அதிகமான நாட்டு மாடுகள் இருக்கிறது. நாட்டு மாடுகளே A2 பால் தருவதுடன் நிலத்தை உழுதல், இனப்பெருக்கம் மற்றும் இயற்கையாக மண் வளத்தைக் காக்கவும் பயன்படுகின்றன. 98 வகைகளுக்கு மேற்பட்டு இருந்த நாட்டு மாடுகள் தற்போது 30 வகைகளாகக் குறைந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் மாடுகளை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் விவசாயத்தை நாம் காப்பாற்றலாம். காங்கேயம், காங்கிரேஜ், ஹலிக்கர், கிர், புளியகுளம், தர்பார்க்கர், சாஹிவால், ஓங்கோல், பர்கூர், தஞ்சாவூர் குட்டை, புங்கனூர் குட்டை, உப்பளச்சேரி போன்ற நாட்டு மாடுகளை விவசாயிகள் அழைத்து வந்திருப்பதைப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது" என்றார், முக மலர்ச்சியுடன்.

சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை, மண்டை போன்ற நாட்டு நாய்கள் அழகு போட்டியில் கலந்துகொண்டன. ஜோடிக் காளை(ஆண், பெண்), பூச்சிக் காளை, காரி, செவலை, குதிரை, சண்டைக் கிடாய் , சேவல் என 12 வகையாகப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆட்டுக் கிடாய்களுக்கான அழகு போட்டியில், குணம், இனம், வளர்ப்பு முறை குறித்து, கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்த பின்னரே தேர்வுக்கு அனுப்பப்பட்டது. குதிரைகளுக்கான போட்டிக்கு உயரம், நீளம், வயது, பராமரிப்பு போன்றவை கணக்கிட்ட பின்னர் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு, நொக்ரா, பஞ்ச கல்யாணி, குமைத், கறுப்புச்சட்டை போன்ற பல்வேறு நிறமுடைய 60 இன்ச் உயரமுள்ள குதிரைகளும் இடம்பெற்றன. செம்மறி ஆட்டுக்கிடாய், எருமை, சேவல், நாய் போன்றவற்றிற்கும் அழகு போட்டிகள் நடத்தப்பட்டன. 

கம்பீரமான திமிலையும் அன்பு நிறைந்த கண்களையும் கொண்ட காங்கேயம் மயிலைக் காளையை வைத்திருந்த விவசாயி கருப்புசாமியிடம் பேசினோம். ``24 மாடுகளும் 1 காங்கேயம் காளையும் வச்சசுருக்கேன். யார் சொன்னாலும் அடங்காத இந்தக் காளை, என்னோட அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படும். தினமும் 300 ரூபாய்க்கு தீவனம் வாங்கிக் கொடுப்பேன். இனபெருக்கம் மட்டுமல்லாம உழவுக்கும் பயன்படுத்துவோம். இதோட வலிமைக்கும், அன்புக்கும் வேற எந்த மாடும் ஈடாகாது. கடந்த 4 வருஷமா இந்த விழாவுக்கு என் காளையை அழைச்சிட்டு வர்றேன். பார்க்கிறவங்க சிலிர்த்துப்போற அளவுக்கு அழகா இருக்குறதால, அதிகமான ஆட்கள் போட்டோ எடுத்துக்குறாங்க" என்கிறார்.

வெள்ளை நிறக் குதிரை, கால்களை மேலே தூக்கி நடனமாடியதைப் பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர். வரிசையாக கம்பீரத் தோற்றத்துடன் நிற்கும் காளைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வலிமையுடன் சண்டையிட்ட கிடாய்களும், குதிரைகளும் தாம் நிகழ்வின் பிளஸ்!