Published:Updated:

சின்னத்தம்பியிடம் என்ன சிக்கல் தெரியுமா?!

தமிழகம் முழுக்க மிகப் பெரிய விவாதங்களையும், விமர்சனங்களையும், வழக்குகளையும் உருவாக்கிவிட்டு அமைதியாகக் கரும்பு தின்றுகொண்டிருக்கிறது சின்னத்தம்பி!!  

சின்னத்தம்பியிடம் என்ன சிக்கல் தெரியுமா?!
சின்னத்தம்பியிடம் என்ன சிக்கல் தெரியுமா?!

ரு யானை செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவ்வளவு நாள்கள் ஆக்கிரமித்திருப்பது இதுவே முதல்முறை. இவ்வளவிற்கும் யானை யாரையும் துன்புறுத்தவில்லை, அட்டகாசம் செய்யவில்லை, இருந்தும் எல்லோருடைய பார்வையிலும் இருந்துகொண்டே இருக்கிறது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் யானை குறித்து அலசி ஆராய்ந்துவிட்டார்கள். ஆனால் யானை இன்னும் காடு திரும்பவில்லை. உலகத்திற்கு சின்னத்தம்பி செய்தியல்ல; ஓர் ஆவணம். 

யானைக்குப் பிடித்த உணவும் கரும்புதான். யானையைப் பிடிக்க உதவக் கூடிய உணவும் கரும்புதான். உண்மையைச் சொல்லப்போனால் காட்டு யானையாக இருக்கிற யானை கரோலில் அடைக்கப்பட்ட பிறகு ஒரு கரும்பிற்கு ஆசைப்பட்டே கும்கி யானையாக மாறுகிறது. ஆனால், சின்னத்தம்பியைப் பொறுத்தவரைக் காடுகளை முற்றிலும் மறந்தேவிட்டது. டாப்ஸ்லிப் காட்டுக்குள் விட்டும், 100 கிலோ மீட்டர்கள் நடந்து மீண்டும் ஊருக்கே சின்னத்தம்பி திரும்ப ஒரே காரணம் ஊருக்குள் கிடைத்த உணவுதான். 100 கிலோ மீட்டர்கள் கடந்து வந்த சின்னத்தம்பி நினைத்திருந்தால் தன்னுடைய உறவுகளைத் தேடி இன்னும் பல கிலோ மீட்டர்கள் நடந்து போயிருக்கலாம். ஆனால் சின்னத்தம்பி போகவில்லை. ஒரே இடத்தில் தேங்கி நிற்கக் காரணமே யானைக்குத் தேவையான உணவு, தண்ணீர் எல்லாமே உடுமலையைச் சுற்றிய பகுதிகளிலேயே கிடைத்துவிட்டது. மேலும், உடுமலை பகுதிகளில் இருக்கும் கரும்பு ஆலைகளிலிருந்து வெளியேறிய கழிவுகளில் கரும்பின் எத்தனால் இருந்ததும், ஒரு காரணமாகிவிட்டது. எதைத் தேடி மீண்டும் ஊருக்குள் வந்ததோ அது கிடைத்துவிட்டது. வனத்துறை இனி எவ்வளவு முயற்சி செய்து காட்டுக்குள் விட்டாலும் சின்னத்தம்பி மீண்டும் ஊரைப் பார்த்துத்தான் திரும்பும். 

சின்னத்தம்பியின் இயல்புகள் முற்றிலும் மாறியிருக்கிறது. கும்கி யானைகளுடன் விளையாடுகிறது, மனிதர்களை ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதெல்லாம் ``தனக்கு எல்லாம் கிடைக்கிறது” என்கிற மனநிலையின் வெளிப்பாடுதான். ஒரு வேளை  சின்னத்தம்பி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தாலோ, மனிதர்களைத் தாக்கியிருந்தாலோ வனத்துறையின செயல்பாடுகள் வேறு மாதிரியே இருந்திருக்கும். மக்களின் கோரிக்கைகளும் வேறு மாதிரி இருந்திருக்கும். சாதுவாக இருக்கிறது என்பதுதான் இப்போது எல்லோருக்கும் பிரச்னையே. சின்னத்தம்பிக்கும் அதுதான் பிரச்னை. `யானையைக் காட்டுக்கு அனுப்ப முயன்றும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுகிறது. மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி யானையைப் பிடித்து முகாமில் பாதுகாத்து பராமரிக்க இருக்கிறோம்' என வனத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. 

காட்டில் இருக்கக் கூடிய யானையின் செயல்பாடுகள், உணவு, சூழ்நிலை எதுவுமே முகாம்களில் இருக்கிற யானைகளுக்குப் பொருந்தாது. முகாம்களின் சூழ்நிலை வேறு மாதிரியாக இருக்கும். உதாரணமாகக் காட்டில் இருக்கக் கூடிய யானைக்கு மிகப்பெரிய பலமே காடுதான். உணவைத் தேடி, தண்ணீரைத் தேடி அதன் பாதையில் பயணித்துக்கொண்டே இருக்கும். மாறுபடும் காலநிலையில் எங்கே தண்ணீர் இருக்கும், உணவு இருக்கும் என்பதெல்லாம் அதன் மூளையில் பதிவாகி இருக்கும். அதை ``மென்டல் மேப்” என்று கூறுவார்கள். தாய்வழிச் சமூகம் என்பதால் வயது முதிர்ந்த பெண் யானையைப் பின்பற்றி எல்லா யானைகளும் செல்லும். இதுதான் யானையின் இயற்கை விதி. முகாம்களில் இருக்கிற யானைகளின் சூழலும் உணவும் இதற்குச் சற்றும் பொருந்தாது. முகாம்களில் யானைகளுக்கு உணவாக ராகி, அரிசிச் சாதம், கொள்ளு சாதம் என மூன்றையும் பிசைந்து உணவாகக் கொடுப்பார்கள். கூடவே கரும்பு மற்றும் வெல்லம் ஆகியவை கிடைக்கும். முகாம் யானைகள் முற்றிலும் மனிதச் சமூகத்திற்குப் பொருந்திப் போக கூடியவை. மனிதர்களுடன் வாழ்பவை. யானைகளை, மாடுகளை, வீட்டு விலங்குகள் என்கிற பெயரில் நம் உணவுமுறையைப் பழக்கப்படுத்தியதின் பயனைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம். நம்மைவிடவும் மோசமாக மிருகங்களும் அனுபவத்து வருகின்றன. 

சின்னத்தம்பிக்கு இருக்கிற பிரச்னையே இவை இரண்டிலுமிருந்து மாறுபட்டு இருப்பதுதான். சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் அடிப்படையில்தான் சின்னத்தம்பி இப்போது ஒரே இடத்தில் முகாமிட்டிருக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகச் சின்னத்தம்பி மனிதர்களுடன் இருந்திருக்கிறது. அதற்குத் தேவையான எல்லாமே அதற்குக் கிடைத்திருக்கிறது. சின்னத்தம்பி என்று இல்லை, இன்னும் வெளியே தெரியாமல் ஊருக்குள் வந்து போகிற ஒவ்வொரு யானையின் கதையும் இதுதான். 

உண்மையில் வனத்துறை மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது. சின்னத்தம்பியை உலகம் உற்று நோக்குகிறது என்பதே அவர்களின் மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்த நேரத்தில் சின்னத்தம்பியைக் கும்கிகளை வைத்துப் பிடிப்பது என்பது உண்மையில் யானையை விட வனத்துறைக்கே ஆபத்து அதிகம். பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் வனத்துறை சந்திக்க வேண்டி வரும். அதனால்தான் சின்னத்தம்பிக்குக் காவலாக இரவு பகலாக இருந்து வருகிறது. சின்னத்தம்பி விஷயம் நீதிமன்றம் சென்றது கூட மேற்கூறிய காரணங்களால்தாம். தமிழகம் முழுக்க மிகப் பெரிய விவாதங்களையும், விமர்சனங்களையும், வழக்குகளையும் உருவாக்கிவிட்டு அமைதியாகக் கரும்பு தின்றுகொண்டிருக்கிறது சின்னத்தம்பி! தனக்கு நேர்ந்த எல்லாத் துயரங்களையும் மறந்து மீண்டும் ஊருக்குள் சின்னத்தம்பி வருகிறதென்றால், யானையை யாருக்குத்தான் பிடிக்காது என்பதைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு யானைக்கு என்ன பிடிக்கும் என யோசிப்போம்.  இது சின்னத்தம்பிக்கு மட்டுமான பிரச்னை அல்ல. ஒட்டு மொத்த யானைகளுக்குமான பிரச்னை. யானைகள் குறித்து விவாதிக்க ஒரு சிறு பொறியை சின்னத்தம்பி ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த விவாதம் யானைகளுக்கான உலகை உறுதி செய்யும் வரை தொடரவேண்டும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனை...