Published:Updated:

அழிவின் விளிம்பில் வரையாடுகள்... காரணம் யார்?

அழிவின் விளிம்பில் வரையாடுகள்... காரணம் யார்?
அழிவின் விளிம்பில் வரையாடுகள்... காரணம் யார்?

ஒரு காலத்தில் ஆரல்வாய் மொழி கணவாயிலிருந்து பந்திப்பூர் காடுகள் வரையிலும் பரவி இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் இவை பெருமளவில் அழிக்கப்பட்டன.

யற்கை எப்போதுமே நம்மை வசீகரித்து மயக்கி விடுகிறது. பசுமை போர்த்தி விரிந்த மலைகளுக்குள் எத்தனை எத்தனை வியப்புகள் காத்திருக்கின்றன நமக்கு. இயற்கை நமக்கு எந்த அளவுக்கு பசுமையைக் காட்டி மயக்குகிறதோ, அந்த அளவுக்கு வெண்ணிறப் பனி முகடுகளாலும் நம்மை மயக்கும் வல்லமை கொண்டது. இந்த இயற்கைக்குள் வசிக்கும் உயிரினங்கள் பல போராட்டங்களைக் கடந்துதான் தனது வாழ்வியலை தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அப்படித் தகவமைத்துக் கொள்ள முடியாமல் அழிந்து போகும் உயிரினங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போதும் அழிவின் விளிம்பில் நின்று தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் வரையாடு.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் வரையறுத்துக்கொண்டு வாழும் இந்த வரையாடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. மலைப்பகுதியில் உள்ள உச்சிகளில் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்டது, வரையாடுகள். பொதுவாகவே உலகில் சிறு சிறு மாற்றங்களோடு பல எண்ணற்ற ஆட்டினங்கள் இருக்கின்றன. உயர்ந்த மலை முகடுகள், பாறை இடுக்குகள், வயல் வெளிகள் எனப் பல இடங்களில் ஆடுகள் காணப்படுகின்றன. ஆனால், ஆட்டினங்களில் வரையாட்டிற்கு ஒரு சிறப்பு உண்டு.

செங்குத்தான இடங்களில் இருக்கும் பாறை இடுக்குகளில் வாழும் வரையாடுகள் கொஞ்சம் சறுக்கினாலும் மரணத்தைத் தழுவ நேரிடும். இவற்றின் கால்கள் பிறந்தது முதலே கடினமான பயணத்திற்குப் பழக்கப்பட்டு விடுகின்றன. இவற்றுக்குள்ளும் மோதல்கள், காதல்கள் என அனைத்தும் உண்டு. கடல் மட்டத்திலிருந்து 1200 மீ.லிருந்து 3,000 மீ உயரம் வரை தனது வாழ்விடத்தை நிர்ணயித்துக்கொள்ளும். 

இன்றைய காலகட்டத்தில் கேரள வனப்பகுதிகளிலும், தமிழக வனப்பகுதிகளிலும் மட்டுமே இவற்றைக் காண முடிகிறது. வரையாடுகள் இமயமலையில் வசிக்கும் காட்டு ஆடுகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. வரையாடுகள் நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் பொக்கிஷம்.

ஒரு காலத்தில் ஆரல்வாய் மொழி கணவாயிலிருந்து பந்திப்பூர் காடுகள் வரையிலும் பரவி இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் இவை பெருமளவில் அழிக்கப்பட்டன. அதனால் இவற்றின் வாழிடம் தனித்தனி தீவுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. தற்போது தமிழ்நாட்டில் தனித்தனி கூட்டங்களாக வாழ்ந்து வருகின்றன. காட்டு ஆடுகளை விட வரையாடு பெரிய உடலமைப்பைக் கொண்டது. வளர்ப்பு ஆடுகளுக்கும் மூதாதையர்கள் மலையில் வசிக்கும் ஆடுகள்தான். உணவுக்காக மனிதர்களைச் சார்ந்து இருந்ததால் அதனுடைய இயல்புத் தன்மையை வளர்ப்பு ஆடுகள் இழந்துவிட்டன. 

ஆண் வரையாடு பெண் வரையாட்டை விடத் தோற்றத்தில் பெரியதாக இருக்கும். அதேபோல இருமடங்கு எடை கொண்டது. இதன் கொம்புகள் பின்னோக்கி வளர்ந்திருக்கும். அதில் மெலிதான வரிவரியான அமைப்புகளும் காணப்படும். பெண் மற்றும் பருவம் அடையாத ஆண் வரையாடுகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிறக் கோடுகள் இருக்கும். இது சூழலுக்கு ஏற்றபடி தனது உடலை மறைத்துக் கொள்ளும் தன்மை உடையவை. ஆண் வரையாட்டின் வயது அதிகரிக்கும்போது, உடல் ரோமம் கறுப்பாகிக் கொண்டே வரும். நன்கு வளர்ந்த பருவமடைந்த ஆண் ஆடுகளின் முதுகிற்கு இடைப்பட்ட பகுதி வெண்மை நிறமாக இருக்கும். இத்தகைய ஆடுகளைத்தான் ஒரு காலத்தில் விரும்பி வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். வரையாடுகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 9 ஆண்டுகளாகும். ஆண் வரையாடுகள் தனியாகவே வசிக்கும். இனப்பெருக்கக் காலங்களில் மட்டும் பெண் ஆட்டுக் கூட்டங்களோடு சேர்ந்து கொள்ளும். ஆண் ஆடுகளுக்குள் இணை சேர்வதில் ஒரு போட்டியே நிகழும். போட்டியில் வென்ற ஆண் வரையாடு மட்டுமே இணைசேரும். 

வரையாடுகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்வதால் ஒரு குழுவில் உள்ள ஆண் ஆடுகள் மற்ற குழுக்களில் உள்ள பெண் ஆடுகளோடு சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் வரையாடுகளில் புதிய வரவுகளைக் (குட்டிகள்) காண முடியும். இவை புல்வெளியில் காணப்படும் புற்களையே உணவாக எடுத்துக்கொள்கின்றன. இது நீருக்காக நீர் நிலையைத் தேடி போகாது. முடிந்தவரைப் பனி நீர், தாவர ஈரப்பதம் ஆகியவற்றைக் கொண்டே வாழும். அதிக வெப்பக் காலத்தில் மலை இடுக்குகளில் வாழும் தன்மை உடையது. பிற வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும்தான் பாறை இடுக்குகளை வாழிடமாகக் கொண்டிருக்கின்றன. வரையாடுகள் கூட்டமாக ஓய்வெடுக்கும்போது, ஓர் ஆடு மட்டும் உயரமான பகுதியில் நின்று கண்காணித்துக் கொள்ளும். பெரும்பாலும் பெண் ஆடுதான் காவல் காக்கும் வேலையைச் செய்யும். ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் ஒலி எழுப்பி மற்ற ஆடுகளைப் பாதுகாப்பாக எச்சரித்துவிடும். அதிகமாகச் செந்நாய், புலிகள், சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதும் இவைதாம். 

19-ம் நூற்றாண்டில் கணக்கு வழக்கில்லாமல் வரையாடுகள் வேட்டையாடப்பட்டன. அதனால் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இன்னும் வேட்டையாடுவது கள்ளத்தனமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இவற்றிற்கு இப்போதைய பிரச்னை மனிதர்கள்தாம். மனிதர்கள் காடுகளுக்குள் சுற்றுலா செல்லும்போது, மனித உணவுகளை இவற்றிற்கு அளிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம் என்பது பெரும்பாலான பயணிகளுக்குத் தெரிவதில்லை.சமீபத்தில் நடத்தப்பட்ட அசோகா ஆராய்ச்சியில் 2030-ம் ஆண்டிற்குள் இப்போது உள்ள வரையாடுகளில் 60 சதவிகிதம் வாழ்விடப் பாதுகாப்பு இல்லாமல் அழிந்திருக்கும் என்று தெரிவிக்கிறது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, காலநிலை மாற்றம்; இரண்டு, சுற்றுலா பயணிகள். ஏதோ வரையாடுகள் மட்டுமல்ல, இன்னும் பல இனங்கள் தங்களின் வாழ்வாதாரங்களுக்காகப் போராடிக்கொண்டு அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக மீட்பது நமது ஒவ்வொருவரின் கடமை. அதைத் தவறவிட்டால் வருங்காலச் சந்ததிகள் புகைப்படங்களில் மட்டுமே அவற்றைப் பார்க்க நேரிடும்.

அடுத்த கட்டுரைக்கு