காலத்தின் சுழற்சியில் நம் பொழுதுபோக்கை அப்டேட் செய்துகொண்டே செல்கிறோம். ஆனால், எப்போதும் மாறாத, ரசனையின் ஆதி அடையாளமாக இயற்கை இருக்கத்தான் செய்கிறது. தற்பொழுது விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், செடிகள் வளர்ப்பது, மாடித்தோட்டம் அமைப்பது, பறவைகள் வளர்ப்பு என்று இயற்கை சார்ந்த செயல்பாடுகளை பிடித்தமான பொழுதுபோக்காகப் பலர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டை என்ற கிராமத்தில் வாழும் அரபாத். தனது பண்ணையில் கோழிகள், புறாக்கள், வண்ண மீன்கள் என்று பறவைகள் வளர்ப்பில் ஈடுபடும் வரும் `அரபாத்'தைச் சந்தித்துப் பேசினோம். நம்மைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.
``நான் டிப்ளோமா வரை படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே கோழி, புறா மேல கொள்ளை பிரியம். சின்ன வயசுல கோழி, புறானு பல உயிரினங்கள் வளர்க்கணும்னு ஆசைப்படுவோம். அதைச் செய்யணும்னு கூட நினைப்போம். அந்த மாதிரிதான், பக்கத்து வீட்ல கோழி வளர்ப்பாங்க. நான் அதை வேடிக்கை பார்ப்பேன். நாமளும் இதுமாதிரி வளர்க்கணும்னு தோணுச்சு. அதனால முடிவு செஞ்சு இறங்கிட்டேன். என் வீட்டுப் பக்கத்துலயே அதுக்கான இடங்களை தேர்வு செஞ்சேன். அப்புறம் புறா, கோழிகளை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அடுத்ததா மீனையும் வாங்கிட்டு வந்து வளர்த்துக்கிட்டிருக்கேன். இதுங்களை வளர்க்குறது மட்டும் என்னோட வேலை கிடையாது. நான் மளிகைக் கடை நடத்திக்கிட்டு இருக்கேன். அதனால, என் ஆசைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் மட்டும்தான் பறவைகளை வளர்க்கிறேன்.
சிறுவடை, பெருவடை வகை கோழிகளைத்தான் பெரும்பாலும் வளர்க்கிறேன். சிறுவடைங்குறது கிராமங்கள்ல சாதாரண வீடுகள்ல வளர்க்குற கோழிகள். பார்க்க அசல் நாட்டுக்கோழி மாதிரி இருக்கும். பெருவடை கோழி கொஞ்சம் உயர் ரக கோழி. சண்டைக்கோழி மாதிரி பெருசா வால் நீண்டிருக்கும். மற்ற கோழி வகைகளை விட இந்த இரண்டுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனாலதான் இதைத் தேர்ந்தெடுத்து வளர்க்கிறேன். வெயில் காலங்கள்ல நோய் தாக்கும் அபாயம் இருக்குது. அப்போ கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கணும். அரிசி, கம்பு போன்ற பொருள்களைத்தான் உணவா கொடுக்கிறேன். மற்றபடி, இயற்கையாக மேய்ச்சல்தான். சிறுவடை கோழிகள் 400 ரூபாயிலிருந்து கிடைக்குது. ஆனா, பெருவடை கோழியின் விலை குறைந்தபட்சம் 1,000 ரூபாய் இருக்கும்.
சிறுவடை ஒரு முறைக்கு 10 முட்டைக்கு மேல் போடும். பெருவடை 8 முட்டை வரைதான் போடும். ஒரு முறை முட்டை போட்டா, ஒன்றரை மாசம் வரை இடைவெளி எடுக்கும். ஒரு கோழியின் மூலம் மாதத்திற்கு 100 ரூபாய் கிடைக்குது. இப்போ என்கிட்ட 30 பெட்டை கோழிகள் இருக்கு. முட்டை, கோழியும் தனியா கேட்குறவங்களும் இருக்குறாங்க. நல்ல வருமானம் கிடைக்குது. நான் பொழுதுபோக்குக்கு வளர்க்குறதால அதை முறையா கணக்குப் பார்க்குறது கிடையாது.
இதுதவிர, வெளிநாட்டுக் கோழிகளையும் வளர்க்குறேன். அது ஒரு கோழி 3,000 ரூபாய். இந்தக் கோழியை அழகுக்காக வளர்க்குறவங்க உண்டு. கறிக்காகச் சாப்பிடுறவங்களும் இருக்குறாங்க. புறா, லவ் பேர்ட்ஸ் பறவைகளும் இருக்கு. காலையில கூண்டைத் திறந்து விட்டா, பறந்து போய் தீவனம் எடுத்துக்கும். சாயங்காலம் வந்து அடையும். அந்த நேரத்துல ஏதாவது தானியத்தை விசிறி விட்டா போதும். ஒரு ஜோடிக்கு தினமும் 150 கிராம் தானியம் தேவைப்படும். ராகி, சோளம்னு எதையாவது கொடுப்போம். இதுங்களால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. 45 நாளுக்கு ஒரு முறை புறா அடைக்கு உக்காரும். ஒரு தடவை அடை உக்கார்ந்தா 2 முட்டை. வருஷத்துக்கு 16 முட்டை. அதாவது ஒரு ஜோடி மூலமா வருஷத்துக்கு 16 குஞ்சுகள் கிடைக்கும். அதுகளை ஒரு மாசம் வரைக்கும் வளர்த்து வித்துடுவோம்.
புறாக்கள் மென்மையான சுபாவம் கொண்ட பறவைகள். சின்ன அதிர்ச்சியைக்கூட அதனால தாங்கிக்க முடியாது. கழுகு, காகம் மாதிரியான பறவைகளே புறாக்களை உணவா மாத்திக்குது. அதனால புறா இனம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டு வருது. வண்ண மீன்கள், மீன் தொட்டிகள் விற்பனை செய்யும் கடையும் வச்சிருக்கேன். புறா, மீன் எல்லாம் சின்னப் பசங்க ஆர்வமா வாங்கிட்டுப் போறாங்க. என் வீட்டு இடத்துக்குள்ள எல்லாத்தையும் வச்சிருக்கேன். அதனால சரியா பராமரிக்க முடியுது. பறவைகள் வளர்க்க ஆர்வம் இருப்பவர்களுக்கு இது போதும். புறா, கோழி இதையெல்லாம் தனி வேலையா எடுத்துச் செய்யாம, மளிகைக் கடை வேலை போக, கிடைக்கிற இடைவெளியிலதான் செய்ய முடியுது. இடம் கம்மியா இருக்குறதால இந்த அளவுக்கு மட்டும்தான் என்னால பராமரிக்க முடியும். அதனால எண்ணிக்கையைக் கூட்டுறதில்லை. அப்பப்போ வித்து பணமாக்கிக்குவேன். விற்பனைக்கும் அலைய வேண்டியதில்லை. இங்கேயே வந்து வாங்கிக்கிறாங்க. இதையெல்லாம் வளர்குறது மனசுக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருது" என்றார்.