Published:Updated:

``ஊருக்குள்ள போய்வர இப்பவும் குதிரை வண்டிதாங்க!" - இப்படியும் ஒரு வங்கி மேலாளர்

குதிரை வண்டிகளை பார்ப்பதே அரிதாகிவிட்ட சூழ்நிலையில் இன்னும் அன்றாடப் பயன்பாட்டிற்காக குதிரை வண்டிகளையே பயன்படுத்தி வருகிறார் இவர். மேலும் நாட்டுக்குதிரை ரகங்களைப் பாதுகாப்பதற்கான பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

``ஊருக்குள்ள போய்வர இப்பவும் குதிரை வண்டிதாங்க!" - இப்படியும் ஒரு வங்கி மேலாளர்
``ஊருக்குள்ள போய்வர இப்பவும் குதிரை வண்டிதாங்க!" - இப்படியும் ஒரு வங்கி மேலாளர்

யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், இயற்கை குறித்த விழிப்புணர்வு புள்ளியில் பல இளைஞர்கள் ஒன்றிணைந்து களத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்படி ஓர் இளைஞராக வலம் வருகிறார் பாலசுப்பிரமணியன். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மேலாளராக இருக்கும் இவர், 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். வங்கி தவிர, மற்ற விஷயங்களுக்குச் சென்று வர நாட்டுக்குதிரை பூட்டிய வண்டியில்தான் பயணிக்கிறார். தனது ஊரைச் சுற்றியுள்ள பலரையும் நாட்டுக்குதிரைகளை வாங்க வைத்து, இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை குறைத்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தேனூரைச் சேர்ந்தவர்தான் பாலசுப்பிரமணியன். சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் நிரந்தரமாகத் துயில் கொள்ளும் வானகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்குக் குதிரை வண்டியிலேயே பயணம் செய்து வந்தார். கூடவே, 13 சிறுவர்களை மிதிவண்டிகளில் பயணிக்க வைத்து, அழைத்து வந்தார். நடுவில் உள்ள 10 கிராமங்களில் இயற்கை விவசாயம், நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்தல், குதிரை வண்டி பயன்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை எடுத்துச் சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். வானகத்தில் உள்ள நம்மாழ்வார் சமாதியில் தனது குழுவினரோடு இருந்த பாலசுப்ரமணியனிடம் பேசினோம்.

``நான் எம்.எஸ்.டபுள்யூ சமூகப்பணி படிச்சுருக்கேன். இப்போ, தேனூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிளையில மேலாளரா இருக்கேன். எங்களுக்குப் பூர்வீகம் தென்னூர். எங்கப்பா கார் டிரைவரா இருந்தார். எங்க தாத்தா காலத்துல விவசாயம் பார்த்திருக்காங்க. அதுக்குப் பிறகு, நிலத்தை வித்துட்டு, எங்கப்பா டிரைவராயிட்டார். எனக்கு இருபத்தஞ்சு வயசில் இருந்தே, பிற்காலத்தில் விவசாயம் பார்க்கணும்னு ஆசை. ஆனா, சொந்தமா நிலம் இல்லை. அதனால், படிச்சுமுடிச்சுட்டு, ஐ.சி.ஐ.சி.ஐயில் வேலைக்குச் சேர்ந்தேன். முதல்ல தஞ்சாவூர்லதான் வேலை கிடைச்சுச்சு. 2013-ம் ஆண்டு போல, நம்மாழ்வார் அய்யா பத்தி உறவினர் ஒருவர் சொன்னார். அவரைப் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சதும், இயற்கை விவசாயம் செய்தே தீருவதுன்னு முடிவு பண்ணினேன். இதற்காக, 2015-ல் வானகத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். 2016-ம் ஆண்டு தேனூருக்கு பணி மாறுதல்ல வந்தேன். அங்க 5 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, இயற்கை முறையில எள், கொள்ளு, உளுந்து, கடலை, சீரகச்சம்பா, காட்டுயானம், கருங்குறுவைன்னு பயிர் செஞ்சேன். பத்துக்கும் மேற்பட்ட வகையான காய்கறிகள், கீரைகளையும் பயிர் செஞ்சேன். இதனால், எங்களுக்கு நஞ்சில்லா உணவும், உணவுக்காக மாசாமாசம் செலவழிச்ச பணமும் கிடைச்சுச்சு. இதற்கிடையில் எழிலரசிக்கும் எனக்கும் திருமணமாச்சு. எங்களுக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்றுன்னு இரண்டு பிள்ளைங்க பிறந்தாங்க. என் மனைவியும் நான் செய்யுற இயற்கை விவசாயத்துல ஒத்தாசை பண்ணுனாங்க.

இதற்கிடையில், தேனூரை இயற்கை எழில் கொஞ்சும் ஊரா மாத்துறத்துக்காக, ஊர் மக்களையும், இளைஞர்களையும் ஒன்றிணைச்சேன். அதுக்காக, 'தேனூர்- 2010'ன்னு பேர் வச்சு செயல்படுறோம். அதன்மூலமாக 4,000 பனைவிதைகளை ஊர் முழுக்க விதைச்சுருக்கிறோம். தவிர, வீடு வீடா போய் 1400 மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை அப்படியே மரமாக்க வச்சுருக்கோம். தற்சார்பு வாழ்வை இன்னும் செம்மைப்படுத்த நினைச்சேன். அதுக்காக, 2016லேயே அந்தியூர் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைகளுக்குப் போய் ஆறு நாட்டு ரக குதிரைகளான மட்டக்குதிரைகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். 4 நாட்டு மாடுகளையும் வாங்கி வளர்த்தேன்.

இன்னைக்கு இயற்கை பேரிடர்களுக்கு முதன்மையான காரணமா இருப்பது, பூமி வெப்பமயமாதல் பிரச்னைதான். அதுக்கு நாம் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் வாகனங்களும் ஒரு காரணம். அதனால் 30 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க இந்தக் குதிரை பூட்டிய வண்டியையே பயன்படுத்த ஆரம்பிச்சேன். திருமணம், உறவினர்கள் வீடுகளுக்குப் போக, கோயில், சந்தைக்கு விளைபொருள்களை ஏற்றிப் போகன்னு பல விஷயங்களுக்கும் நான் இந்தக் குதிரை வண்டியையே பயன்படுத்துகிறேன். ஆரம்பத்தில்  வங்கிக்கும் இந்தக் குதிரை வண்டியில்தான் போய் வந்தேன். அதுல சில நடைமுறை பிரச்னைகள் இருந்ததால், வங்கி வேலைக்கு மட்டும் டூவீலர்ல போய் வர்றேன். 

அதோடு, 'நாட்டுமாடுகளை காப்பது போல, நாட்டுக்குதிரைகளையும் காக்க முற்படணும்'னு விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு வர்றேன். என்னால ஈர்க்கப்பட்டு, எங்க ஊர்லேயே அஞ்சு பேர் இப்போ குதிரை வாங்கி இருக்காங்க. இதைத்தவிர, தமிழ்நாடு முழுக்க குதிரை மீது ஆர்வம் உள்ள 250 நபர்கள் ஒன்றிணைந்து, குதிரையைக் காப்பது பற்றிய முன்னெடுப்பை செஞ்சுக்கிட்டு இருக்கோம். பள்ளிகள்தோறும் போய், குதிரைகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிச் சொல்லிட்டு வர்றோம். குதிரைச் சவாரி சம்பந்தமான அத்தனை நல்ல விஷயங்களையும் இளையதலைமுறையிடம் கொண்டு போறோம். குதிரை ஒன்றுக்குத் தினமும் ஆகும் பராமரிப்புச் செலவு வெறும் 50 ரூபாய்தான். ஆனா, அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

வானகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி, பத்து ஊர்கள்ல இதைப்பத்தி அதிகம் பேசினோம். மக்களும் ஆர்வமா கேட்டுக்கிட்டாங்க. 'எங்கே குதிரைகள் கிடைக்கும்?'னு பல இளைஞர்கள் விவரம் கேட்டுக்கிட்டாங்க. வங்கிப் பணிக்கு இன்னும் அஞ்சு வருஷத்துல முழுக்குப் போட்டுட்டு, அதன்பிறகு முழுமையா இயற்கை விவசாயத்துல இறங்கிடலாம்னு இருக்கேன். 'சூழல்'ங்கிற பெயர்ல ஒரு அமைப்பு ஆரம்பிச்சு, அதன்மூலமா தமிழ்நாடு முழுக்க இயற்கை சார்ந்த பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க வழி ஏற்படுத்தலாம்னு இருக்கோம்.

பனையில் இருந்து பொருள்கள் செய்ய விவசாயிகளுக்குக் கற்றுத்தருதல், தற்சார்பு வாழ்க்கைக்கு மக்களை திருப்புதல்ன்னு நான் இயற்கை சார்ந்து பயணிக்க நிறைய விஷயங்கள் வரிசைகட்டி நிக்குது. ஒவ்வொண்ணா சாதிக்கணும், நம்மாழ்வார் காட்டிய வழியில் போய்!" என்றார் முத்தாய்ப்பாக.