கோவை மாவட்டம் ஆனைக்கட்டிப் பகுதியில் கடந்த 18 வருடங்களாகச் சுற்றித்திரிந்த இரண்டு ஒற்றைக் காட்டு யானைகளுக்கு, அந்தப் பகுதி மக்கள் சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயரிட்டு அழைத்துவந்தனர். பல்வேறு நெருக்கடிகளாலும், ஆக்கிரமிப்பாலும் யானைகள் வனத்தை விட்டு வெளியில் வருவது வாடிக்கையாகிவிட்டது. அப்படி யானைகள் வரும்போது, மோதல்களும் நடைபெறும். ஆனால், சின்னத்தம்பி யானை பொதுமக்கள் யாரையும் தாக்கியது இல்லை. 18 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் இருந்ததால் அங்குள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 2 யானைகளையும் செல்ல பிள்ளைகளாகவே அன்பு காட்டி வந்தனர். ஊருக்குள் வந்தால் அங்கே போகாதே, பயிர்களைச் சேதம் செய்யாதே என்று மக்கள் விடுக்கும் அன்பு கட்டளைகளை விநாயகன் மற்றும் சின்னத்தம்பியும் ஏற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் யானை வலசைப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்த செங்கல் சூளை அதிபர்களின் சூழ்ச்சியால் இரண்டு யானைகளாலும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 18-ம் தேதி விநாயகன் முதுமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜனவரி 25-ம் தேதி சின்னத்தம்பியைப் பிடித்து வரகளியாறு பகுதியில் விட்டனர். ஆனால், சில நாள்களிலேயே மீண்டும் தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி சின்னத்தம்பி அங்கிருந்து வெளியில் வந்துவிட்டான். நூறு கி.மீ தூரத்துக்கு மேல் நடந்து, பல்வேறு கிராமங்களை கடந்தும் சின்னத்தம்பி யாரையும் தாக்காமல், தன் இனத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் அநீதியைச் சட்டசபையிலிருந்து நீதிமன்றம் வரை பேசவைத்தான்.
ஆனால், விளை நிலங்களைச் சேதப்படுத்துவதால் சின்னத்தம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கியாக மாற்ற வனத்துறை முடிவு செய்தது. இதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதல் கட்டமாக சின்னத்தம்பி யானையைப் பிடித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வனத்துறைக்கு உத்தரவிட்டது. இதனால், சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டு, வரகளியாறு பகுதியில் கூண்டில் அடைக்கப்பட்டது. அங்கு, சின்னத்தம்பி யானைக்கு, வளர்ப்பு யானைகளுக்கான ஆரம்பகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பாகன்கள், ``சின்னத்தம்பி யானையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம், உடுமலைப்பேட்டையில் நேரிலும் பார்த்தோம். இது மற்ற காட்டு யானைகளிலிருந்து வேறுபட்டுள்ளது. இதன் குணம் முற்றிலும் வித்தியாசமானது. எந்த ஒரு சூழலிலும் பொதுமக்களை இந்த யானை தாக்க முயற்சி செய்யவில்லை. மனிதர்கள் கூறுவதை, புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் சின்னத்தம்பிக்கு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். கூண்டில் இருந்தாலும், எங்களுடைய பேச்சைக் கேட்டு நாங்கள் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்துகொள்கிறது. அதற்கு தற்போது எங்கள் கைகளால் உணவை வழங்கி வருகிறோம். தடாகம் பகுதியில் எப்படி மக்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்ததோ, அதேபோல் தற்போது எங்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்கிறது. வழக்கமாகக் காட்டு யானைகளை, வளர்ப்பு யானையாக மாற்றுவது, எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும், ஆனால் சின்னத்தம்பி யானை, எங்களது பேச்சை கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்தம்பி இப்போது எங்கள் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டான். தற்போது, எங்களின் பேச்சை கேட்டு உணவை எடுத்து உண்பது போன்ற ஆரம்பகட்ட பயிற்சிகள் தமிழ், உருது, மலையாள மொழிகள் மூலம் வழங்கி வருகிறோம்” என்றனர்.
வனத்துறை அதிகாரிகள், ``யானை நலமுடன் இருக்கிறது. வனத்தில் இருக்கும்போது எப்படி இருந்ததோ, அப்படியேதான் தற்போதும் உள்ளது. அதன் எடை குறையவில்லை. வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை வழங்கி வருகிறோம். வாரத்துக்கு இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்துவருகிறோம். தடாகம் மக்களை மட்டுமல்ல டாப்சிலிப் மக்களையும் விரைவில் நண்பர்களாக்குவான் இந்தச் சின்னத்தம்பி” என்று நெகிழ்கின்றனர்.
சின்னத்தம்பி, மனிதர்களுக்குச் செல்லத்தம்பியாக இருக்கலாம். ஆனால், சின்னத்தம்பி கேட்பது தன் வாழ்விடத்தைத்தான். எனவே, சின்னத்தம்பிக்குப் பயிற்சி அளிப்பதை விட, அதிக முக்கியத்துவம் கொடுத்து யானைகளின் வாழ்விடத்தையும், வழித்தடங்களையும் மீட்க வேண்டும்.