Published:Updated:

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

50 தாய் முயல்கள்... மாதம் 80 குட்டிகள்...பண்ணைத்தொழில்

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப் பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன. 

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத்தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும். சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத்தொழில்களை வெற்றிகரமாகச் செய்துவரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச் சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

இந்த இதழில் குறைந்த நிலப்பரப்பில் முயல்களை வளர்த்து நல்ல லாபம் ஈட்டி வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணி குறித்துப் பார்ப்போம். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசூர் என்கிற ஊரில் இருக்கிறது அன்னை முயல் பண்ணை. ஒரு காலை வேளையில் முயல் கூண்டுகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்த வெண்ணியைச் சந்தித்துப் பேசினோம்.

“எனக்குச் சொந்தமா ஒரு ஏக்கர் நிலமிருக்கு. அதுல பெரிசா விவசாயம் செய்ய முடியலை. டெய்லரிங்தான் என்னோட தொழில். எனக்குச் சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஆசை. அதனால, ஆட்டுப் பண்ணை ஆரம்பிச்சேன். பத்து ஆடுகள்ல ஆரம்பிச்சு 150 ஆடுகளாகப் பெருக்குனேன். ஆனா, சரியாப் பராமரிக்காததால், கோமாரி மாதிரியான நோய்கள் தாக்கி, 40 ஆடுகளுக்கு மேல இறந்துடுச்சு. அதனால, பண்ணையில இருந்த மொத்த ஆடுகளையும் விற்பனை செஞ்சுட்டேன். அடுத்து மாட்டுப்பண்ணை வெச்சேன். அதுவும் சரிப்பட்டு வரலை. இனிமே, முறையான பயிற்சி எடுத்துக்கிட்டுதான் கால்நடை வளர்ப்புல இறங்கணும்னு முடிவு செஞ்சேன்.

அதுக்கப்புறம், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் கே.வி.கே-வில் முயல் வளர்ப்பு பத்தி பயிற்சி எடுத்துக்கிட்டேன். பயிற்சி கொடுத்த பேராசிரியர் முத்துச்சாமி, ‘ஆரம்பத்துல பத்து முயல்களை மட்டும் வாங்கிப் பண்ணை ஆரம்பிங்க. அதுல அனுபவம் கிடைச்சதும் பண்ணையை விரிவுப்படுத்துங்க’னு சொன்னார்.

அவர் சொன்ன மாதிரி 2008-ஆம் வருஷம் 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். முயல்கள் இணைசேர்ந்து 4 முயல்கள் ஒரே நேரத்துல குட்டி போட்டுச்சு. மொத்தம் 24 முயல்குட்டிகள் கிடைச்சது. அதெல்லாம் வளர்ந்த பிறகு, அதுமூலமாகக் குட்டிகள் கிடைக்க ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் கொஞ்சம் நம்பிக்கை கிடைச்சதும், 2012-ஆம் வருஷம் சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில முயல் பண்ணை ஆரம்பிச்சேன். கறிக்காகவும் வளர்ப்புக்காகவும் நிறைய பேர் எங்கிட்ட முயல் வாங்க ஆரம்பிச்சாங்க.

நானும் மக்கள் கூடுற இடங்கள்ல வெச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். தொழில் நல்லா சூடுபிடிச்சுட்டுக்கிட்டு இருந்த சமயத்துல 2015-ஆம் வருஷம் சென்னையில வந்த வெள்ளத்தால பண்ணையில ரொம்ப நஷ்டமாகிடுச்சு. அதனால, சொந்த ஊருக்கே திரும்பிப் பண்ணையை ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன வெண்ணி தொடர்ந்தார்.

“இங்க வந்ததுகப்புறம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்துல சந்தை வாய்ப்பு, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை பத்தின பயிற்சிகளை எடுத்துக்கிட்டு, இங்கேயே பண்ணை ஆரம்பிச்சேன். இப்போ கையில, 50 பெண் முயல்கள், 21 ஆண் முயல்கள், 170 குட்டி முயல்கள் இருக்கு. எல்லாமே வெளிநாட்டைச் சேர்ந்த ரகங்கள்தான். இந்த ரகங்களைத்தான் கால்நடைத்துறை பரிந்துரை செய்றாங்க.

நான், நியூசிலாந்து வெள்ளை, சோவியத் சின்சில்லா, வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட் மற்றும் நியூசிலாந்து கறுப்புனு வளர்த்துட்டுருக்கேன்.இங்க பிறக்குற முயல் குட்டிகளை மூணு மாசம் வரை வளர்த்து விற்பனை செஞ்சுடுவேன். ஆரம்பத்துல வியாபாரிகள் என் பண்ணைக்கு வந்து முயல்களை வாங்கிட்டுருந்தாங்க. இப்போ நுகர்வோரும் நேரடியாவே வந்து வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. தினமும், வீடுதேடி வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க.

என்கிட்ட முயல் இல்லைனா, தேடி வர்றவங்களுக்கு வேற பண்ணைகள்லயாவது வாங்கிக் கொடுத்துடுவேன். அதனால, ரெகுலர் கஸ்டமர்கள் நிறைய கிடைச்சுட்டாங்க.

பாண்டிச்சேரியில் இருக்குற சில ஹோட்டல்களுக்கு ரெகுலரா இறைச்சிக்காக முயல் கொடுத்துட்டுருக்கேன். கேரள வியாபாரிகளும் வந்து என்கிட்ட முயல் வாங்குறாங்க. அதனால, எனக்கு விற்பனைக்குப் பிரச்னையே இல்லை’’ என்ற வெண்ணி வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு பெண் முயல் ஒரு முறைக்கு 5 குட்டிகள்ல இருந்து 8 குட்டிகள்வரை போடும். இணை சேர்ந்ததிலிருந்து 28-30 நாள்கள்ல பெண்முயல் குட்டி போடும். எங்கிட்ட இருக்குற 50 பெண் முயல்கள் மூலமா மாசத்துக்கு 85 குட்டிகள்ல இருந்து 90 குட்டிகள்வரை கிடைச்சுட்டுருக்கு.

சில சமயங்கள்ல பிறக்குற குட்டிகள்ல ஒண்ணு, ரெண்டு இறந்து போறதுக்கு வாய்ப்பு இருக்கு. எப்படியும் மாசத்துக்கு 80 குட்டிகளுக்கு மேல தேறி வளர்ந்து வந்துடும். குட்டிகளை மூணு மாசம் வரை வளர்த்து விற்பனை செஞ்சுடுவேன். வளர்றப்பவே சுறுசுறுப்பா இருக்குற குட்டிகளை வளர்ப்புக்காகவும், மந்தமா இருக்குற குட்டிகளைக் கறிக்காவும் பிரிச்சுடுவேன்.

மூணு மாசம் வளர்த்தா ஒவ்வொரு குட்டியும் 2 கிலோ அளவுக்கு மேல எடை வந்துடும். அந்த வகையில 80 முயல்கள் மொத்தம் 160 கிலோவுக்கு மேல இருக்கும். ஒரு கிலோ உயிர் எடைக்கு 320 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்தக்கணக்குல 80 முயல்களை விற்பனை செய்றப்போ 51,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், மருந்து, போக்குவரத்துனு மாசம் 6,500 ரூபாய் வரை செலவாகிடும். செலவு போக, மாசம் 44,700 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் மாசம் 45,000 ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும்” என்ற வெண்ணி நிறைவாக,

“முயல் வளர்க்க 600 சதுரஅடி இடம் இருந்தாப் போதும். முறையான பயிற்சி எடுத்துக்கிட்டு வளர்க்க ஆரம்பிச்சா இந்தளவு குறைஞ்ச இடத்துலயே மாசம் 45,000 ரூபாய் சம்பாதிக்க முடியும். டெய்லரிங் வேலை பார்த்துட்டு இருந்த நான், முயல் வளர்ப்பு மூலமா இன்னைக்கு ஒரு பண்ணை முதலாளியா மாறிட்டேன்” என்று சொல்லி விடைகொடுத்தார். 

தொடர்புக்கு, வெண்ணி, செல்போன்: 83445 03888

துரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

காற்றோட்டம் அவசியம்!

மு
யல்களைப் பராமரிக்கும் முறைகள் குறித்துப் பேசிய வெண்ணி, “காலையில எட்டு மணிக்கு முட்டைக்கோஸ் தோல், கேரட், ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, வேலிமசால்னு கிடைக்கிறதைப் பசுந்தீவனமாக் கொடுத்துடுவேன். அதனால, சாயங்காலம் வரை முயல்கள் சுறுசுறுப்பா இருக்கும். ஒரே வகையான இலையைத் தினமும் கொடுக்காம மாத்தி மாத்திக் கொடுப்பேன். சாயங்காலம், ஒரு முயலுக்கு 100 கிராம் அளவுல அடர்தீவனம் கொடுப்பேன்.

தினமும் கொட்டகையைச் சுத்தப்படுத்தணும். கூண்டோட அடிப்பகுதியில இருக்குற மீதமான உணவுகள், முயல்களோட கழிவுகள் எல்லாத்தையும் அப்புறப்படுத்திடணும். தீவனம் வெக்கிற கிண்ணங்களைச் சுத்தமாகக் கழுவிட்டுதான் அதுல தீவனத்தை வைக்கணும். தண்ணீருக்கு நிப்பிள் இருக்குற குழாய்களை அமைச்சுருக்கேன். அதனால, தண்ணீர் இருக்குதோ இல்லையோனு கவலைப்பட வேண்டியதில்லை.

பெண்முயல் ஆறு மாச வயசுல பருவத்துக்கு வரும். ஆண்முயல் ஒன்பது மாச வயசுல பருவத்துக்கு வரும். கூண்டோட ஓரத்துக்குப் போய், காலை வெச்சு சுரண்டிக்கிட்டே இருக்குறது, கத்திக்கிட்டே இருக்குறது, அமைதி இல்லாம அலையுறது மாதிரியான அறிகுறிகளை வெச்சுப் பெண்முயல் பருவத்துக்கு வந்ததைக் கண்டுபிடிக்கலாம். பருவத்துக்கு வந்த பெண் முயலையும், ஆண்முயலையும் தனிக் கூண்டுல விட்டு இரண்டு நாள்கள் கழிச்சுப் பிரிச்சுடுவேன். இணை சேர்ந்ததிலிருந்து 28-30 நாள்கள்ல பெண் முயல் குட்டி போட்டுடும். குட்டி போடுறதுக்கு ரெண்டு நாள்களுக்கு முன்னால, முயல் தன்னோட ரோமங்களை உதிர்த்து, அதுமேலதான் குட்டி போடும். ரோமங்களை உதிர்க்க ஆரம்பிக்கும்போதே குட்டி போடப்போறதைக் கண்டுபிடிச்சுடலாம்.

எட்டு குட்டிக்கும் அதிகமாகப் பிறந்தால் குட்டிகளைப் பிடிச்சு நாமதான் தாய் முயல்கிட்ட தாய்ப்பால் குடிக்க வைக்கணும். இல்லாட்டி முதல்ல குடிக்கிற குட்டிகளே மொத்தப்பாலையும் குடிச்சு, மத்த குட்டிகளுக்குப் பால் கிடைக்காமப் போயிடும். அதேமாதிரி சில சமயங்கள்ல தாய் முயல் ஒழுங்காகப் பால் கொடுக்காது. அந்த மாதிரி சமயங்கள்லயும் நாமதான் பால் குடிக்க வைக்கணும்.

குட்டிகள் பிறந்த 12-ஆம் நாள்ல கண் திறக்கும். அதுவரை குட்டிகளுக்குக் குளிர் தாக்காத மாதிரி பராமரிக்கணும். பிறந்த 22-வது நாள்வரை, தாய் முயல் பால் கொடுக்கும். அதுக்கு மேல குட்டிகள் இலைதழைகளைச் சாப்பிட ஆரம்பிச்சுடும். குட்டிகளை 45-ஆம் நாள் தாய்கிட்ட இருந்து பிரிச்சுடணும். குட்டிகளைப் பிரிச்சதும் தாய் முயல் பருவத்துக்கு வந்துடும். அதுக்கப்புறம் ஆண் முயலோட இணை சேர்க்கலாம். தாய் முயலுக்கு 30 நாள்கள் கர்ப்ப காலம். குட்டிகளோட இருக்குறது 45 நாள்கள். மொத்தம் 75 நாள்கள். அதுக்கப்புறம்தான் இணை சேரும். சராசரியாப் பார்த்தா மூணு மாசத்துக்கு ஒரு தடவை பெண்முயல் குட்டி போடும். இந்த இடைவெளி கொடுத்து இணை சேர்த்தாத்தான் தாய் முயலும் பிறக்குற குட்டிகளும் ஆரோக்கியமா இருக்கும்.

முயல்களுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுத்துடுவேன். பசுந்தீவனத்தோடு வேப்பிலையைக் கலந்து கொடுத்தாலும் குடற்புழுக்கள் வெளிய வந்துடும். முயல்களுக்குச் சொறி நோய் வந்தால், வேப்பெண்ணெயில் உப்பைக் கலந்து தடவிவிட்டா சரியாகிடும். செரிமானக் கோளாறுகள் வந்தா தென்னங்குருத்துக் கொடுப்பேன்.

தாய் முயல்கிட்ட இருந்து பிரிச்சுக் கொண்டு வந்த குட்டிகளைத் தனித்தனி கூண்டுல அடைச்சுத் தீவனம் கொடுக்க ஆரம்பிச்சுடுவேன். முயல்களை நான்காவது மாசத்துக்கு மேல்தான் ஆண், பெண் அடையாளம் பார்க்க முடியும். அந்த வயசு வந்ததும் ஆண், பெண் முயல்களைத் தனித்தனியாப் பிரிச்சுடணும். தேவைக்கு அதிகமா ஆண் முயல்களை வளர்க்க வேண்டியதில்லை. ரெண்டு பெண் முயலுக்கு ஒரு ஆண் முயலுங்கிற விகிதத்துல இருந்தாப் போதும். அந்தளவுல பராமரிச்சு தேவையில்லாத ஆண் முயல்களைக் கழிச்சுடணும். அதேமாதிரி வயசான பெண் முயல்கள், கருப் பிடிக்கிறதுல பிரச்னை இருக்குற பெண் முயல்கள்னு அப்பப்போ கழிச்சுடணும். அப்போதான் எப்பவும் சரியான விகிதத்துல குட்டிகள் கிடைச்சுட்டே இருக்கும். இல்லாட்டி தேவையில்லாம தீவனம் கொடுத்துப் பராமரிக்கிற மாதிரி ஆகிடும். ஆண் முயல்களை வெளிப் பண்ணைகள்ல இருந்துதான் நான் வாங்கிட்டு வர்றேன். நம்ம பண்ணையில பிறந்த ஆண் முயல்களை வளர்த்து இணை சேர்த்தா மரபணுக் கோளாறுகள் வரும்” என்றார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

காதைப்பிடித்துத் தூக்கக் கூடாது!

“மு
யல்களைக் காதைப் பிடிச்சு தூக்கவே கூடாது. முயலோட காது நரம்புகள் ரொம்ப மெல்லிசா இருக்கும். அதனால, இடுப்பைப் பிடித்துத்தான் தூக்குறது நல்லது. 

முயலைத் தூக்குறப்போ ரோமங்கள் உதிரும். அந்த ரோமங்கள் முயலோட சுவாசப்பாதைக்குள் போச்சுன்னா நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு. அதனால, தேவையில்லாம முயல்களைத் தூக்கவே கூடாது” என்கிறார், வெண்ணி.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

அடர்தீவனம்!

ம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத்தவிடு 25 கிலோ, வேர்க்கடலைப் பிண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ, உணவு உப்பு 0.5 கிலோ என்று எடுத்துக் கொண்டு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்தால் அடர்தீவனம் தயார்.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

அறிவியல் முறையில் முயல் வளர்ப்பு!

கா
ஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த கால்நடை மரபியல் மற்றும் இனவிருத்தித்துறைப் பேராசிரியர் ராஜேந்திரனிடம் முயல் வளர்ப்புக் குறித்துப் பேசினோம். அறிவியல் ரீதியாக முயல் பண்ணை அமைக்கும் முறை குறித்து ராஜேந்திரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

“முயல் வளர்ப்புக் கூண்டுகள், 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒன்றரை அடி உயரம் என்ற அளவில் இருக்க வேண்டும். கூண்டுக்குள் 2 அடி நீளத்துக்கு ஓர் அறையெனப் பிரித்துக் கொள்ளலாம். ஓர் அறையில் இரண்டு முயல்களை விடலாம். சினையில் இருக்கும் முயலைத் தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். கூண்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெப்பத்துக்குட்படுத்திக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

வளர்க்க ஆரம்பிக்கும்போது, நான்கு மாத வயதுள்ள முயல்களைத்தான் வாங்க வேண்டும். இந்த வயதில் முயல்கள் ஒவ்வொன்றும் ஒன்றரை கிலோ அளவு எடை இருக்க வேண்டும். முயல்களைக் கூண்டுகள் அல்லது மரத்தால் அமைக்கப்பட்ட பெட்டிகளில் வளர்க்கலாம். அவற்றில் தீவனம் வைக்கவும், தண்ணீர் வைக்கவும் முறையாக அமைப்புகள் இருக்க வேண்டும். பண்ணையைச் சுற்றிக் குளிர்ந்த சூழல் இருக்க வேண்டும். தரைப்பகுதி சிமென்ட் தளமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும். கொட்டகைக்குள் பாம்பு, எலி போன்றவை புகுந்துவிடாமல் இருக்குமாறு சுவர்கள் அமைக்க வேண்டும்.

அறை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தால், முயல்களை வாத நோய் தாக்கக்கூடும். அதனால், அதற்கேற்றவாறு  பராமரிக்க வேண்டும். பொதுவாக முயல்கள் குளிர்காற்றைத்தான் விரும்புகின்றன. ஆனால், மலைப்பகுதிகளில் முயல் வளர்ப்பு ஏற்றதல்ல. முயல் பண்ணைகளில் அதிகளவு ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் முயல்களுக்கு நோயை ஏற்படுத்தலாம். சுத்தமான, புகையற்ற காற்று முயல்களுக்கு அவசியம். அதனால், பண்ணையைச் சுற்றி மரங்கள் இருப்பது நல்லது.

பிறந்த 30-45 நாள்களில் தாயிடமிருந்து குட்டி முயல்களைப் பிரிக்கலாம். அந்தச்சமயத்தில் குட்டிகளுக்கு அதிகளவில் நார்ச்சத்தும் குறைந்த அளவில் ஸ்டார்ச் உள்ள தீவனத்தையும் அளிக்க வேண்டும். அவற்றின் செரிமானத்தன்மை அதிகரித்த பிறகு ஸ்டார்ச் நிறைந்த தீவனங்களை அளிக்கலாம். நல்ல உற்பத்தித் திறன் பெற நன்கு செரிக்கக்கூடிய அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய தீவனங்கள் கொடுக்க வேண்டும்.

முயல்களுக்குத் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவளிக்க வேண்டும். காலை ஏழு மணி மற்றும் மாலை ஐந்து மணிக்கு அடர்தீவனம் அளிக்க வேண்டும். மாலை நேரத்தில் பசும்புற்களைக் கொடுக்கலாம். கூண்டின் தரையிலிருந்து 5-8 சென்டிமீட்டர் உயரத்தில் தீவனத் தொட்டி இருக்க வேண்டும்.

இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தும் ஆண் முயலுக்குக் குறைந்தது 8 மாத வயது ஆகி இருக்க வேண்டும். ஆண்முயல், 3 ஆண்டுகள்வரை இனவிருத்தித்திறன் கொண்டிருக்கும். ஆண் முயலை வேறு பண்ணைகளிலிருந்துதான் வாங்க வேண்டும். ஆண் முயல்களுக்குப் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். ஆண் முயல்களைத் தனித்தனிக் கூண்டுகளில்தான் வைக்க வேண்டும். பெண் முயல்களையும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இனவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும்.

அதிகாலை அல்லது மாலை நேரங்களில் இனச்சேர்க்கை செய்யவிடுவது நல்லது. பருவத்துக்கு வந்த பெண் முயல்களை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஓரிரு நிமிடத்தில் ஆண்முயல் ‘கிரீச்’ என்ற சப்தத்துடன் ஒரு புறமாகவோ பின்புறமாகவோ விழும். இதுவே சரியான இனச்சேர்க்கை ஆகும். சரியாக இனச்சேர்க்கை ஆகும் வரை, 3-4 நாள்கள் ஆண்முயலின் கூண்டுக்குள்ளேயே பெண் முயலை விட்டு வைக்க வேண்டும்.

சினைத் தருணத்தில் முயல்களுக்கு அதிகப் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் தேவை. பெண் முயல்கள் அடிக்கடி கருத்தரித்துக் குட்டி ஈன்றுக்கொண்டே இருப்பதால், இவற்றுக்கு அதிகக் கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. குட்டிகளுக்குப் பாலூட்டவும் அதிகச் சத்துகள் தேவைப்படுகின்றன. முயல்கள் இரவில்தான் குட்டி ஈனுகின்றன. குட்டி ஈனும்போது அவற்றைத் தொந்தரவு செய்யக் கூடாது. 7-30 நிமிடங்களுக்குள் குட்டி ஈன்றுவிடும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள்வரை ஈனலாம். குறைவான அளவுக் குட்டிகளை ஈனும் தாய் முயல்களைக் கழித்துவிட வேண்டும். சில சமயங்களில் குட்டி ஈனும்போது மருத்துவ உதவி தேவைப்படலாம். தாய் முயலுக்குத் தேவையான அளவு உணவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் சுரக்கும்

குட்டிகளை நீண்ட நாள்கள் பால் குடிக்க அனுமதித்தால், உடல் பெருத்து நோய்கள் உண்டாகலாம். குட்டி ஈன்ற 21 நாள்களுக்குத் தாய் முயல்களில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். பிறகு குறைய ஆரம்பித்துவிடும். அடுத்த முறை சினைக்கு வந்தவுடன் பால் சுரப்பு நாளங்கள் மீண்டும் அதன் வேலையைத் துவக்கிவிடும். ஆறுமாத வயதுக்குப் பிறகுதான் இணை சேர்க்க வேண்டும். இணைசேர்ந்து குட்டி ஈன்ற பின்னர், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் குட்டிகளைப் பிரிக்கலாம். அதன் பிறகு அடுத்த நாளேகூட இணை சேர்க்கலாம். குட்டிகளைப் பிரிக்காமல் இணை சேர்க்கக் கூடாது.

குட்டிகள் பிறந்த முதல் 12 நாள்கள்வரை பால் மட்டுமே அவற்றுக்கு உணவு. எனவே குட்டிகள் அனைத்தும் நன்கு பால் குடிக்கின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாம்தான் குட்டிகளைப் பிடித்துப் பால் ஊட்ட வேண்டும். தேவைப்பட்டால், மாட்டுப் பாலைக் காய்ச்சி, ஆற வைத்து 10 மில்லி அளவு குட்டிகளுக்குக் கொடுக்கலாம்.

13-ஆம் நாளிலிருந்தே குட்டிகளுக்குச் சிறிது சிறிதாகப் புற்கள், தீவனங்களைக் கொறிக்கக் கொடுத்துப் பழக்க வேண்டும். 21 நாள்களுக்குப் பிறகு குட்டிகள் பாலைக் குறைத்துக் கொண்டு தீவனங்களைக் கொறிக்க ஆரம்பித்துவிடும். தாயிடமிருந்து பிரித்த உடனேயே பசும்புற்கள், காய்கறிகள் மற்றும் அடர் தீவனங்களைக் கொடுக்க வேண்டும்” என்ற ராஜேந்திரன் நிறைவாக,

“மக்கள் குறைவான கொழுப்புக் கொண்ட மாற்று இறைச்சியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், முயல்களுக்கான சந்தை வாய்ப்பு இப்போதுதான் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. முயல் வளர்ப்புக் குறித்த பயிற்சிகள், அந்தந்த மாவட்ட கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தரப்படுகிறது. ஒரு தாய்முயல் ஓர் ஆண்டுக்கு 25 குட்டிகள் ஈனும். அந்த 25 குட்டிகள்மூலம் மாதம் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 20 தாய் முயல்கள் இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். குறைந்த முதலீட்டில் அதிகமான லாபம் பார்க்க ஏற்றத் தொழில்களில் முயல் வளர்ப்பு முக்கியமானது” என்றார்.

தொடர்புக்கு, ராஜேந்திரன், செல்போன்: 98841 59547

முயல் இனங்களின் வகைகளும் பண்புகளும்!

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

சோவியத் சின்சில்லா

இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இது 5 கிலோ எடைவரை இருக்கும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் ரகம். இதன் ரோமங்கள் கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

சாம்பல் நிற ஜெயின்ட்

இதுவும் சோவியத் குடியரசு நாடுகளைச் சேர்ந்த இனம், இது 5 கிலோ எடைவரை இருக்கும். இதன் ரோமம் அடர்த்தியாகக் குழியுடன் காணப்படுவதால் இது ‘குழிமுயல்’ எனத் தவறாகக் கருதப்படுகிறது. இது ரோமம் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

நியூசிலாந்து வெள்ளை

இது இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. உரோமங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். கண்களின் நிறம் சிவப்பாக இருக்கும். இது 5 கிலோ எடைவரை இருக்கும். இது இறைச்சி மற்றும் ரோமத்துக்காக வளர்க்கப்படுகிறது.

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 7 - மாதத்துக்கு ரூ. 45,000 லாபம்!

வெள்ளை நிற ஜெயின்ட்

இதுவும் சோவியத் குடியரசின் இனம் ஆகும். இது தோற்றத்தில் நியூசிலாந்து வெள்ளை போன்றே இருக்கும். ஆனால், உடல் சற்று நீளமாகக் காணப்படும்.