Published:Updated:

"கருஞ்சிறுத்தை ஊருக்குள்ளயே வராது!" - காட்டுயிர் கலைஞரின் அனுபவம்

"கருஞ்சிறுத்தை ஊருக்குள்ளயே வராது!" - காட்டுயிர் கலைஞரின் அனுபவம்
"கருஞ்சிறுத்தை ஊருக்குள்ளயே வராது!" - காட்டுயிர் கலைஞரின் அனுபவம்

நீலகிரி மாவட்டத்தில் கருஞ்சிறுத்தை எப்போதாவதுதான் கண்ணில் படும். மற்ற விலங்குகளைப் போல ஊருக்குள் வந்துவிடாத அதிசய உயிரினம். கருஞ்சிறுத்தை என்கிற ஓர் இனம் பிறப்பதில்லை. மாறாக, அவை வளர்பருவத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.

லக்கை தீர்மானிக்க முடியாத பயணத்திற்குச் சொந்தக்காரர்கள் புகைப்படக்காரர்கள். பயணிக்கிற வழியில் தென்படுகிற ஆல மர விழுதில் ஆரம்பித்து, மழைக்கு ஒதுங்கும் மழைத் துளி வரை ரசித்து ரசித்து படமெடுப்பார்கள். காட்டுயிர்ப் புகைப்படம் எடுப்பவர்கள் புலி, சிறுத்தை, கரடி என அவை வரும் வரை விடியவிடிய காத்துக்கொண்டிருப்பார்கள். அதில் அப்படி என்ன இருக்கிறதெனக் கேட்டால் ``உன்னால் புரிஞ்சிக்க முடியாது நண்பா” எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். விநாடிகள் நிமிடங்கள் குறித்த கவலைகள் எல்லாம் புகைப்பட கலைஞர்களுக்கு இருப்பதில்லை. யாருக்கும் கிடைக்காத ஒரு காட்சியை எப்படியும் படமெடுத்து விடவேண்டும் என்கிற நோக்கில் பயணிக்கிற பல புகைப்படக்காரர்களில் சந்திரசேகரும் ஒருவர்.

கோத்தகிரியைச் சொந்த ஊராகக் கொண்டவர் சந்திரசேகர். நீலகிரியின் பல பகுதிகளுக்கும் சென்று விலங்குகள் பறவைகள் பூச்சிகள் எனப் பல உயிரினங்களை அதன் இயல்போடு புகைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு காட்டெருமை குத்தி தூக்கிவீசியதில் தன்னுடைய குடல் பகுதியை இழந்தவர். குடலுக்குப் பதிலாக அவரது உடலில் இப்போது குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரவு நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், வனப்பகுதியையொட்டிய பகுதிகளிலும் பல மணி நேரங்களாகக் காத்திருக்கிறார். பகல் நேரங்களில் கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி தேயிலைத் தோட்டங்களுக்கும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து விடுகின்றன. கரடியைப் பொறுத்தவரை கோத்தகிரியில் நகர்ப்புறங்களில் கூட சுற்றித்திரிகின்றன. அவ்வப்போது புலிகள் கூட குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்திருக்கின்றன. ஆனால், கருஞ்சிறுத்தையை அவ்வளவு எளிதில் காடுகளுக்குள்ளேயே கூட பார்க்க முடியாது. நீலகிரி மாவட்டத்தில் கருஞ்சிறுத்தை எப்போதாவதுதான் கண்ணில் படும். மற்ற விலங்குகளைப் போல ஊருக்குள் வந்துவிடாத அதிசய உயிரினம். கருஞ்சிறுத்தை என்கிற ஓர் இனம் பிறப்பதில்லை. மாறாக, அவை வளர்பருவத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. எல்லா விலங்கினங்களின் உடலிலும் மெலனின் (Melanin) எனும் ஒரு நிறமி இருக்கிறது. தோல், கண்கள், முடி போன்றவற்றுக்குத் தேவையான கறுப்பு நிறத்தை, சமன்பட்ட அளவுகளில் கொடுப்பதுதான் இந்த நிறமிகளின் வேலை. நமது உடலில் தேவையான இடங்களில், தேவையான அளவு கருமை இருப்பதற்குக் காரணம் இந்தக் கரு நிறமிதான். பிக்மென்ட் அதிகளவு இருக்கும் நிறமி, இயற்கையான நிறத்திலிருக்கும் தோலின் மீது முழுவதும் கறுப்பு நிறம் போர்த்திவிடுகிறது. சில சிறுத்தைகளின் உடலில் அதிகளவு இருக்கும் கருநிறமிகளின் தாக்கத்தால் அதன் உடல் முழுவதும் கருமை படர்ந்துவிடுகிறது. நிறமிகள் இல்லாமல் இருக்கிற விலங்குகள் வெள்ளையாக இருப்பதற்கும் இதுவே காரணம். இதனால்தான் கருஞ்சிறுத்தைகள் உருவாகின்றன.

கரடி, சிறுத்தை, புலி, செந்நாய், யானை போன்ற விலங்குகளைப் பல இடங்களிலும் புகைப்படம் எடுத்த சேகரால் கருஞ்சிறுத்தையை படம் எடுக்க முடியவில்லை. பல ஆண்டுகளாகப் பல இடங்களுக்கும் படக்கருவி எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஆனால், எந்த இடத்திலும் கருஞ்சிறுத்தை தென்படவே இல்லை. இதற்கிடையில் தவளைகள் குறித்து உள்வாங்க ஆரம்பிக்கிறார். இரவு நேரங்களில் தவளைகளின் சத்தம், அதன் உடலமைப்பு, அதன் உணவு எனப் பல குணாதிசயங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

இதற்கிடையில் கோத்தகிரிக்கு அருகில் உள்ள அளக்கரை என்கிற பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவதாக அகால் சிவலிங்கம் என்பவர் சேகரிடம் கூறியிருக்கிறார். அகால் சிவலிங்கம் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் காட்டுயிர்ப் புகைப்படக்காரர்களின் வழிகாட்டியாக இருக்கிறார். அகால் சிவலிங்கம் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து போகிற எல்லா வகையான பறவைகள் குறித்த தகவல்களையும் கைக்குள் வைத்திருக்கிறார். எந்த மாதத்தில் எங்கு, என்ன பறவை இருக்கும் என்பதில் அனுபவம் பெற்றவர். நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற புகைப்படக்காரர்களின் முதல் தேர்வு சிவலிங்கம். அவர் கூறிய இடத்தில் பல நாள்களாகச் சிறுத்தைக்காகக் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 தேதி பல ஆண்டுகளாகத் தேடிய கருஞ்சிறுத்தை இருப்பது தெரிய வருகிறது. அன்றைய தினம் சேகரின் பிறந்த நாள் என்பதால் கூடுதல் உற்சாகத்தோடு கிளம்புகிறார். அன்றைய மாலை 4:30 மணிக்கு கருஞ்சிறுத்தை இருக்கிற இடத்திற்கு வந்துவிடுகிறார். கருஞ்சிறுத்தையைப் பார்த்தவர்கள் எல்லோருக்கும் கூடுதல் ஆச்சர்யம் என்னவென்றால் கருஞ்சிறுத்தையுடன் ஆண் சிறுத்தை ஒன்றும் சேர்ந்து படுத்திருந்தது. சேகரோடு சேர்த்து பலரும் கருஞ்சிறுத்தையை படம் எடுத்திருக்கிறார்கள்.

``காடுகளுக்குள் சென்று புகைப்படம் எடுக்க வேண்டுமென ஆசை. ஆனால், இருக்கிற சூழ்நிலையில் காடுகளுக்குள் செல்ல முடியாது என்பதால் வனத்தை விட்டு வெளியே வருகிற விலங்குகள் பறவைகள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுக்கிறேன். எனக்குத் தெரிந்து நீலகிரியில் இருக்கிற எல்லா விலங்குகளும் குடியிருப்புப் பகுதிக்குள் சாதாரணமாக வந்து செல்கின்றன. அதில் கரடி புலி சிறுத்தை போன்ற விலங்குகள் எந்தவித அச்சமும் இன்றி வனத்தைவிட்டு வெளியே வந்து செல்கின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு காட்டு எருமைகளை ஆச்சர்யமாகவும் பயத்துடனும் பார்த்தவர்கள் இன்று கரடியைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். விலங்குகள் குறித்த பயம் குறைந்து வருகிறது. இந்தப் பட்டியலில் கருஞ்சிறுத்தையைச் சேர்க்க முடியாது. கருஞ்சிறுத்தை காடுகளை விட்டு வெளியே வராத விலங்கு. அவ்வளவு எளிதில் வனத்திற்குள்ளும் பார்க்க இயலாது. அதைப் புகைப்படம் எடுக்க வேண்டுமென்பது ஒவ்வொரு காட்டுயிர் புகைப்படக்காரரின் ஆசை. நான் பார்த்தது பெண் கருஞ்சிறுத்தை. அதன் இனப்பெருக்கக் காலத்திற்காக ஆண் சிறுத்தையுடன் சுற்றி வரும் பொழுதுதான் எங்களுக்குக் காணக்கிடைத்தது” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு