Published:Updated:

``மனிதர்கள் உயிர் வாழ யானைகள்தான் முக்கியம்!" - யானைகள் குறித்த கருத்தரங்கில் தகவல்

யானை

``மனிதர்கள் உயிர் வாழ யானைகள்தான் முக்கியம்!" - யானைகள் குறித்த கருத்தரங்கில் தகவல்
``மனிதர்கள் உயிர் வாழ யானைகள்தான் முக்கியம்!" - யானைகள் குறித்த கருத்தரங்கில் தகவல்

யானைகள் அழிந்தால் காடு, ஆறு, தண்ணீர் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாத நிலை ஏற்படும். எனவே, யானைகளைப் பாதுகாக்க அதன் வாழிடம், வழித்தடங்களைக் காக்க வேண்டும் என கருத்தரங்கில் வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ராஜபாளையம் வன உயிரின சங்கம் சார்பில் யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கம்  நடைபெற்றது. முன்னதாக வத்திராயிருப்பில் இருந்து தொடங்கிய யானை நல உலா ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் வழியாக ராஜபாளையத்தை வந்தடைந்தது. அப்போது வழியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்தரங்கில் யானைகள் வனத்தட ஆராய்ச்சியாளர் ராம்குமார் பேசும்போது, யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 21-ம் தேதி கோயம்புத்தூரில் இந்தப் பயணம் தொடங்கியது. மேட்டுப்பாளையம், ஊட்டி, முதுமலை, வால்பாறை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. யானைகள் தன் உணவுத் தேவைக்காகவும், தண்ணீருக்காகவும் ஆண்டொன்றுக்கு 300 முதல் 800 சதுர கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இதனால் குறைந்தது இரண்டு வனப்பகுதிகளுக்காவது செல்லும். இந்த இரண்டு வனங்களையும் இணைக்கும் பாதையைத்தான் வழித்தடம் என்கிறோம். நாளொன்றுக்கு 20 மணி நேரம் நடக்கும். இந்தியாவில் மொத்தம் 101 வலசை பாதைகளும், தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 16 வலசை பாதைகளும் உள்ளன.

குட்டியாக இருந்தபோது பயன்படுத்திய பாதைகளையே அவை பாரம்பர்யமாக பயன்படுத்தி வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை நிலமாற்றத்தால் தற்போது நிறைய மாறிவிட்டது. தென்னிந்தியாவில் காடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அவை வழித்தடங்கள் இணைத்துக் கொண்டிருக்கிறது. யானைகள் இல்லையென்றால் காடு இல்லை. ஆறு இல்லை. விவசாயிக்கு தண்ணீர் இல்லை. விவசாயம் இல்லை. மனிதன் வாழவே முடியாது. யானைகளைக் காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் அதன் வழித்தடங்களையும், வாழ்விடங்களையும் காப்பாற்ற வேண்டும். யானை இருந்தால்தான் மனிதர்களும் வாழ முடியும்” எனத் தெரிவித்தார்.

யானைகள் ஆராய்ச்சியாளர் ஆறுமுகம் பேசும்போது, ``யானைகள் மிகுந்த அறிவாளி விலங்குகள். ஆக்ரோஷமாக அந்த விலங்கு மனிதர்களோடு எளிதில் நண்பனாகிவிடும். 35 பேரை கொன்ற ஒரு யானை வாய் பேச முடியாத, காது கேளாத 12 வயது சிறுவனிடம் கட்டுப்பட்ட நிகழ்வும் இங்கே நடந்துள்ளது. வழித்தடம் அருகே வசிப்பவர்களுக்கு கொஞ்சம் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

யானைகள் நல மருத்துவர் கலைவாணன் பேசும்போது, ``யானைகள் முக்கியமா? மனிதர்கள் முக்கியமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மனிதர்கள் உயிர் வாழ யானைகள்தான் முக்கியம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். யானைகள் உப்பை அதிகமாக விரும்பி உண்ணும். காட்டில் எங்கே தாது உப்பு இருந்தாலும் தன்னுடைய மோப்ப சக்தியால் அதைத் தோண்டி எடுத்து சாப்பிடும். பின்னர் அதை பிற உயிரினங்களும் சாப்பிடும். சில நேரங்களில் காட்டுக்குள் விவசாயிகள் வைத்திருக்கும் உப்பை சாப்பிட வருகிறது. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்படுகிறது. 10,000 ஆண்டுகளுக்கு முன் பனிப்பகுதியில் வாழ்ந்த மொரிசீரியம் என்ற 3 அடி உயர விலங்குதான் யானைகளின் மூதாதையர். ஆனால், பனிமலைகள் உருகியதால் அந்த இனம் அழிந்துபோனது. அதன் எச்சமாக கிடைத்த எலும்பை ஆய்வு செய்தபோது அதில் காசநோய்க்கான கிருமி இருந்தது. வன உயிரினங்களுக்கான நோய் தாக்கம் என்பது மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை தான்.

ஆலமரத்தின் அடியில் லட்சக்கணக்கான விதைகள் இருந்தாலும் அவை செடியாக முளைக்காது. ஆனால், பறவைகளும், விலங்குகளும் உண்டு எச்சமாக வெளியேற்றும்போது பாறைகளில் கூட மரம் முளைக்கிறது. கடுக்காய் மரத்தின் கீழ் கிடக்கும் விதைகள் செடியாவதில்லை. ஆனால், மான் அவற்றை வாயில் வைத்து துப்பினால் அது முளைக்கிறது. வன உயிரினங்கள்தான் இயற்கையை சமநிலையோடு வைத்திருக்கும். இயற்கையைப் பாதுகாக்க யானை, புலிகளைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் பிடித்துச் செல்லும் வன விலங்குகளை குழந்தைகளைப் போலவே பராமரிக்கிறோம். மனிதர்கள் இல்லாமல் வன உயிரினங்கள் வாழும். ஆனால், வன உயிரினங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது” எனத் தெரிவித்தார்.