Published:Updated:

தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட 96 ஆமைக் குஞ்சுகள்!

தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட 96 ஆமைக் குஞ்சுகள்!
தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட 96 ஆமைக் குஞ்சுகள்!

தனுஷ்கோடியில் மண்டபம் வன உயிரின காப்பக அலுவலர்களால் கடந்த ஜனவரி மாதம் சேகரிக்கப்பட்ட 105 ஆமை முட்டைகளில் இருந்து  பொறிக்கப்பட்ட 96 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கடலின் தூய்மைக் காப்பாளனாக விளங்குவது கடல் ஆமைகள். இந்தியாவில் பச்சை ஆமை, அலுங்காமை உள்ளிட்ட 5 வகையான ஆமை இனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பரப்பில் ஏராளமான கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாகத் தனுஷ்கோடி தொடங்கி தூத்துக்குடி இடையே உள்ள கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஆமைகள் குஞ்சு பொறிப்பதற்காக இப்பகுதியில் உள்ள கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தினால் ஆமைகள் முட்டையிட வரத்துவங்கிய நிகழ்வு வழக்கத்தைவிடக் காலதாமதமாக தொடங்கியது. இம்முறை மண்டபம் உட்பட்ட 9 கடலோரப் பகுதிகளில் 8,909 முட்டைகளும், கீழக்கரை வனச்சரகத்தில் 2,432 முட்டைகளும், தூத்துக்குடி வனச்சரக பகுதியில் 748 முட்டைகளும் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் உருவாக்கப்பட்ட குஞ்சு பொறிப்பகங்களில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று மண்டபம் வனச்சரகப் பகுதிக்கு உட்பட்ட தனுஷ்கோடி பகுதியில் 105 முட்டைகளில் இருந்து 96 ஆமைக் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு கடலில் விடப்பட்டன. இதேபோல் கடந்த வாரம் கீழக்கரை வனச்சரக அலுவலர்கள் 126 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். இதுகுறித்து மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறுகையில், ``கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே சிறு அளவிலான எண்ணிக்கையே குறைந்துள்ளது என்ற போதும் இந்த ஆண்டும் 20,000 முட்டைகள் வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.