Published:Updated:

`மயக்க மருந்து வரட்டும்னு காத்திருக்கேன்!’ 10 மணி நேரம் போக்கு காட்டிய ஊட்டி கரடி

நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் பகுதி அருகே நுழைந்த கரடி சுமார் 10 மணி நேரத்துக்குப் பிறகு மயக்க மருந்து செலுத்தி மீட்கப்பட்டது.

`மயக்க மருந்து வரட்டும்னு காத்திருக்கேன்!’ 10 மணி நேரம் போக்கு காட்டிய ஊட்டி கரடி
`மயக்க மருந்து வரட்டும்னு காத்திருக்கேன்!’ 10 மணி நேரம் போக்கு காட்டிய ஊட்டி கரடி

ட்டியில் வழக்கமாக இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். அதுவும் இப்போது குளிர்காலம்; இரவில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும். வனங்களில் கடும் வறட்சி என்பதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, கரடி, காட்டுமாடு என ஊருக்குள் வந்துசெல்கின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஊட்டி நகரை ஒட்டியுள்ள வனத்திலிருந்து ஒற்றைக் கரடி, வழிதவறி நகரின் மையப்பகுதிக்கே வந்துவிட்டது. மாரியம்மன் கோயில், மெயின் பஜார் என இஷ்டம்போல் சுற்றித்திரிந்தது. புதிய விருந்தாளியாக வந்த கரடியைப் பார்த்த நகரில் உள்ள நாய்கள், கூட்டமாகச் சேர்ந்து குரைத்து விரட்டியுள்ளன. பயந்து ஓடிய கரடி கோயில் எதிரே இருந்து, குடியிருப்புப் பகுதியில் தஞ்சம் புகுந்துவிட்டது.

அதிகாலை, மக்கள் நடமாடத் தொடங்கியதும் கரடியைப் பார்த்து அலறி அடித்து ஓடத் தொடங்கிவிட்டனர். கரடியும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் பாலாஜி என்பவரது வீட்டின் பின்புறம் தடுப்பு சுவர் அருகே அமைதியாகப் படுத்துக்கொண்டது. உடனே வனத்துறையினரும் வந்து சேர்ந்தனர். வழக்கம்போல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளும் மற்ற இடங்களில் செய்வதுபோல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவுசெய்தனர். அங்குதான் பிரச்னை ஆரம்பித்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன கால்நடை மருத்துவர் பணியிடம் நிரப்பப்படாமல் இங்கு காலியாகவே உள்ளது. வனவிலங்குகள் மீட்பு, சிகிச்சை என்றால் அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை அழைத்து சமாளித்துக்கொண்டிருந்தனர். ஆனால், இது அப்படியல்ல; கரடிக்குத் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி மயக்கமடையச் செய்து, பின்னர் கூண்டுக்கு மாற்ற வேண்டும்.

அதன் உடல்நிலை, வயது, எடை போன்றவற்றை யூகித்து மயக்க மருந்தின் அளவை முடிவு செய்ய வேண்டும். மருந்தின் அளவு கூடினாலும் இறக்கும் நிலை ஏற்படும்; குறைந்தாலும் பயத்தில் மனிதர்களைத் தாக்க முற்படும். ஒரு முடிவாக அனுபவமுள்ள கால்நடை மருத்துவர் மனோகரனை அழைத்துவர முடிவுசெய்தனர். அவர் கோவையில் இருந்தார். அதிகாலையே தொடங்கிய மீட்புப்பணிக்கு, கரடி முதல் காவல்துறை வரை சுமார் 10 மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து கடுப்பாகினர். இடையில் ஆட்சித்தலைவர் இன்னோசன்ட் திவ்யாவும் கரடி மீட்பு குறித்து பார்வையிட்டுச் சென்றார்.

மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தார் கால்நடை மருத்துவர் மனோகரன். பின்னர் அவசர அவசரமாக களநிலவரங்களை அறிந்துகொண்டு மயக்கமருந்தை நிரப்பி துப்பாக்கியுடன் தடுப்பு சுவர் மறைவில் நின்று குறிபார்த்து சுட்டு மயக்கமருந்தைச் செலுத்தினார். அதுவரை அமைதியாய்ப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கரடி பயங்கர சத்தத்துடன் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது. கரடியின் திடீர் ஆக்ரோஷத்தைக் கண்டு, தடுப்புசுவருக்கு அருகில் நின்ற அனைவரும் ஓட்டம் எடுத்தனர். சற்று நேரத்தில் கரடி கண்களை மட்டும் திறந்தவாறு அரை மயக்கத்தில் அமைதியாகப் படுத்துக்கொண்டது. பின்னர், பாதுகாப்பு உடையுடன் கரடி அருகில் சென்ற வன ஊழியர்கள் கரடியின் கை கால்களைக் கட்டி முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட கூண்டில் ஏற்றி, உடலில் ஏதும் காயங்கள் உள்ளதா எனப் பார்த்து சிகிச்சை அளித்தனர். கரடி பிடிபட்ட செய்தியை அறிந்த ஏராளமான மக்கள் கரடியைக் காணும் ஆர்வத்தில் கூட்டமாக வரத் தொடங்கிவிட்டனர். உடனடியாக வனத்துறை வாகனத்தில் ஏற்றி வனப்பகுதியில் விடுவிக்க முதுமலைக்குக் கொண்டு சென்றனர்.

இது குறித்து கோவை மண்டல வனப் பாதுகாவலர் (பொறுப்பு) சீனிவாஸ் ரெட்டி கூறுகையில், ``ஊட்டி நகருக்குள் வந்தது சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடியாகும். உடலில் காயங்கள் ஏதுவும் இல்லை. ஆரோக்கியமாக உள்ளது. ஊட்டி நகரைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது நகரின் வெளிப்பகுதிகளில் உலா வருவது வழக்கம். இந்தக் கரடியும் அதேபோல் வழிதவறி நகருக்குள் வந்துள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கரடி, முதுமலைப் புலிகள் காப்பகத்துக்குள் விடுவிக்கப்படும்’’ என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கிவரும் நிலையில் காயமடையும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க, குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகக்கூடிய விலங்குகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வன கால்நடை மருத்துவரின் பங்கு அத்தியாவசியமானதாகும். ஆனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவர் பணியிடம் கடந்த ஒராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. கூடலூர், ஊட்டி பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் ஊட்டி நகருக்குள் வந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அனுபவமிக்க கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் கோவையிலிருந்து மண்டல கால்நடை இயக்குநர் வரவழைக்கப்பட்டே கரடி பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனத்துறைக்கென்று தனியாக வன கால்நடை மருத்துவர் தனியாக இல்லாதது வன உயிரின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.