Published:Updated:

30 வருடங்களில் மீட்ட 2,500 விலங்குகள்... விலங்குகளின் `சூப்பர்மேன்’ போரா!

அதேபோல அஸ்ஸாமின் பல பகுதிகளில் யானை நிலத்துக்குள் வருவதாகச் சொல்லி அழைக்கிறார்கள். அங்கு நேரடியாகச் சென்று பார்க்கும்போது காட்டுக்குள்தான் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். இவர்கள் காட்டுக்குள் வீட்டைக் கட்டிக் கட்டி அதைத் தொந்தரவு செய்கிறார்கள்.

30 வருடங்களில் மீட்ட 2,500 விலங்குகள்... விலங்குகளின் `சூப்பர்மேன்’ போரா!
30 வருடங்களில் மீட்ட 2,500 விலங்குகள்... விலங்குகளின் `சூப்பர்மேன்’ போரா!

ட்டு வயதில் விலங்குகளைக் காக்க ஆரம்பித்த பயணம், 30 வருடங்கள் கழித்து தற்போது 2,500 விலங்குகள் தாண்டியும் தொடர்கிறது. இப்போதும் அஸ்ஸாமில் 24x7 நேரமும் விலங்குகளுக்குப் பாதிப்பு என எப்போது அழைத்தாலும் ஓடிச் சென்று உதவுகிறார். இவரது பெயர் பினோட் போரா (Binod Borah). ஆனால், அஸ்ஸாம் மக்கள் செல்லமாக டுலு (dulu) என்று அழைக்கின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்டத்தில் கார்பி மலைப்பகுதியில் பிறந்தவர். முதன்முதலில் ஒரு யானையைக் காப்பாற்றியவர் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆமை, சிறுத்தை, கரடி, பறவைகள், பாம்புகள் என இந்த சூப்பர்மேன் காக்கும் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

இவர் டிஸ்கவரி சேனலைப் பார்த்து பாம்புகளைப் பிடிக்கக் கற்றுக்கொண்டவர். முதலில் வெறும் கரங்களுடன் பாம்புகளைப் பிடிக்க ஆரம்பித்தவர், இப்போது தகுந்த உபகரணங்களை உபயோகித்து பாம்புகளைப் பிடித்துவருகிறார். எங்கு மக்கள் அழைத்தாலும் தனது மோட்டார் சைக்கிள் உதவியுடன் உடனே விரைகிறார். 

இதுபற்றி போரா பேசும்போது, ``சிறிய வயதிலிருந்தே எனக்கு வன விலங்குகள் மீது கொள்ளைப் பிரியம். ஒரு நாள் ஊரில் நடைபெற்ற சந்தையில் வனவிலங்குகள் விற்பனை செய்வதைக் கண்டேன். அதை வாங்க என்னிடம் பணம் இல்லை. என் சகோதரரிடமிருந்து பணத்தை வாங்கி வந்து விலங்குகளை வாங்கினேன். அதை வாங்கி வந்து காட்டுக்குள் விட்டுவிட்டேன். 3-ம் வகுப்பு படிக்கும்போது பக்கத்து கிணற்றில் ஒரு யானைக் குட்டி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது என்ற செய்தி கேள்விப்பட்டு, என் அப்பாவுடன் அதைப் பார்க்கச் சென்றேன். அங்கு இருந்த மக்கள் எல்லோரும் ஒருவித நடுக்கத்துடன் இருப்பதைக் காண் முடிந்தது. உடனே நான், என் தந்தை எனச் சுற்றியிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து காப்பாற்றினோம். அப்போது வெளியில் வந்த யானைக் குட்டி எங்களைத் திரும்ப பார்த்துவிட்டு காட்டுக்குள் போய்விட்டது. அது முதலே வனவிலங்குகளை மீட்கும் ஆர்வம் வந்துவிட்டது. அப்போதிருந்து இதுவரை 2,500 வன விலங்குகளைக் காப்பாற்றியிருக்கிறேன். அதில் 400 பாம்புகளைப் பிடித்திருக்கிறேன். பாம்புகளைப் பிடிக்கச் செல்லும்போது எல்லோருக்கும் என் தொலைபேசி எண்ணைச் சொல்லிவிட்டுத்தான் வருவேன். அதேபோல சுற்றி இருக்கும் மரப்பலகைகளிலும் என் பெயரையும் நம்பரையும் எழுதிவிட்டு வந்துவிடுவேன். அனைத்து வனவிலங்குகளையும் காப்பாற்றி காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுவேன். இந்த வேலையைச் செய்து முடிக்கும்போது மக்கள் எனது பெயரை உச்சரிக்கும்போது ஏற்படும் பரவசம் சொல்லில் அடங்காது. ஒவ்வொரு விலங்குகளைப் பாதுகாப்பாகப் பிடித்து வனத்துக்குள் விடும்போது, மனதுக்கு நிறைவாக உணர்வேன். 

2013-ம் ஆண்டு கர்பி ஆங்லாங்கில் (Karbi Anglong) உள்ள மெஜிகான் (Mejigaon) எனும் கிராமத்தில் யானைக் குட்டியைப் பிடித்து நான்கு நாள்களாகக் கட்டிப்போட்டிருந்தார்கள். அவர்கள் அதைத் தெய்வம் எனக் கருதி பூஜித்துக்கொண்டிருந்தார்கள். அதை மீட்க அந்தக் கிராம மக்களிடம் பேசினேன். அவர்கள் என்னை விரோதிகள்போல பார்த்தார்கள். உடனே கயிறு மற்றும் சங்கிலிகளால் கட்டி வைத்துவிட்டனர். அந்த மாலை எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால், அன்று இரவே தப்பி ஓடி வந்து வனத்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டேன். அவர்கள் உதவியுடன் கயிறுகளால் பின்னப்பட்ட யானைக்குட்டி பலமில்லாமல் எழுந்து நின்று காட்டுக்குள் சென்றுவிட்டது. நான் காப்பாற்றிய செயல்களிலேயே இதுதான் சிறந்ததாக நினைக்கிறேன். ஒரு நம்பிக்கைக்காக நான்கு நாள்கள் யானைக் குட்டிக்காக உணவு கொடுக்காமல் வைத்திருந்தனர். அது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை
அதேபோல அஸ்ஸாமின் பல பகுதிகளில் யானைகள் நிலத்துக்குள் வருவதாகச் சொல்லி அழைக்கிறார்கள். அங்கு நேரடியாகச் சென்று பார்க்கும்போது காட்டுக்குள்தான் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். இவர்கள் காட்டுக்குள் வீட்டைக் கட்டிக் கட்டி அவற்றைத் தொந்தரவு செய்கிறார்கள். காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதால் யானைகள் உட்பட பெரும்பாலான விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. காட்டுக்குள் மனித குடியேற்றங்கள் அதிகமாவதும் ஒருவிதமான ஆபத்துதானே. இப்போது இந்தியாவில் பெரும்பாலும் யானைகள் தங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளன. எனவே, அவை உணவைத் தேடிவந்து பயிர்களை அழிக்கின்றன’’ என்கிறார் டுலு போரா.

 2015-ம் ஆண்டு விலங்குகள் புகைப்படக் கண்காட்சி ஒன்றைப் போரா ஏற்பாடு செய்கிறார். அப்போது அங்கு வரும் பலரில் ஒரு பெண் இவரிடம் அதிகமாக விலங்குகள் பற்றிக் கேட்கிறார். அதனால் அவர்மீது காதல் கொண்ட போரா, அவர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டு, அஸ்ஸாமில் உள்ள காசி ரங்கா தேசியப் பூங்காவுக்கு அருகில் வசித்து வருகிறார். வனவிலங்குகளுக்காக எப்போதும் தனது அலைபேசியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இது போக 35 பழங்குடியின வேட்டைக்காரர்களை வேட்டையைக் கைவிட்டு விவசாயத்தின் பக்கம் திருப்பியிருக்கிறார். இந்த மக்களைத் திருத்தாவிட்டால் நாளை அதிகமான விலங்குகள் கொல்லப்படும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இவர் எப்போதுமே நிலையான வருமானம் தரும் வேலையில் இருந்தது இல்லை. அதற்குக் காரணம், அடிக்கடி வனவிலங்குகளைக் காப்பாற்ற எடுக்கும் விடுமுறைதானாம். இவர் ஒரு சிறந்த புகைப்பட நிபுணரும்கூட.

கடந்த 30 ஆண்டுகளில் 3 யானைக் குட்டிகள், 2 சிறுத்தைக் குட்டிகள், 3 கரடிக் குட்டிகள், 6 தேவாங்குகள், 10 எறும்புத் தின்னிகள், 20-க்கும் மேற்பட்ட மான், பல முயல்கள், குரங்குகள், கீரிகள், காட்டுப் பல்லி வகைகள், பறக்கும் அணில்கள், 600-க்கும் மேற்பட்ட பாம்புகள், நூற்றுக்கணக்கான ஆமைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பறவைகள் உட்பட மொத்தம் 2,500 விலங்குகளைக் காப்பாற்றியிருக்கிறார். 

போரா கிரீன் கார்ட்ஸ் நேச்சர் அமைப்பில் (Green Guards Nature Organization) ஒரு முக்கிய உறுப்பினராகவும், விலங்குகளைக் காப்பாற்றுவதற்கும் மோதல்களைக் குறைப்பதற்கும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். தவிர, அவர் உள்ளூர் சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டுவருகிறார். இவ்விஷயத்தில் அவரது பணிக்காக, 2014-ம் ஆண்டில் பாலிப்பரா அறக்கட்டளையால் அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதே வருடத்தில், ஆசிய சரணாலயம் அமைப்பிலிருந்து வனப் பாதுகாவலருக்கான சேவை விருதும் பெற்றிருக்கிறார்.