Published:Updated:

எகிப்தின் அதிர்ஷ்டம்; கிரேக்க கடவுள் சின்னம்... சிட்டுக்குருவி குறித்த நம்பிக்கைகள்!

இன்றைக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம் மட்டுமல்ல; உலக கதை சொல்லல் தினமும்கூட!

எகிப்தின் அதிர்ஷ்டம்; கிரேக்க கடவுள் சின்னம்... சிட்டுக்குருவி குறித்த நம்பிக்கைகள்!
எகிப்தின் அதிர்ஷ்டம்; கிரேக்க கடவுள் சின்னம்... சிட்டுக்குருவி குறித்த நம்பிக்கைகள்!

லக கதை சொல்லல் தினமும் சிட்டுக்குருவிகள் தினமும் ஒன்றாகக் கைகோக்கும்போது, பாரெங்கும் சொல்லப்படும் சிட்டுக்குருவிகளின் நாட்டுப்புறக் கதைகள், இங்கு தமது சிறகுகளை விரிக்கின்றன. அந்தச் சிறகு முளைத்த கதைகள் இங்கே.

எகிப்து:

எகிப்தியர்கள், சிட்டுக் குருவிகளைப் புனிதமான பறவைகளாகக் கருதினர். இறந்த பின், தங்களது உயிர் இந்தச் சின்னஞ்சிறு பறவைகள் மூலமாக சொர்க்கம் சென்றடையும் என்று பெரிதும் நம்பிய எகிப்தியர்கள், தூரதேசங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, சிட்டுக்குருவியின் உருவத்தைத் தங்களது உடலில் பச்சை குத்திக்கொள்வார்களாம். கடல் பயணத்தின்போது இறக்க நேரிட்டால், நீருக்குள் தூக்கியெறியப்படுவது அவர்களது உடல் மட்டுமே. ஆனால் ஆன்மா, அந்த அழகிய பறவையிடம் சென்றடையும் என நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இந்தோனேசியா:

இங்கே அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் இந்த அழகிய பறவை, இவர்களது இல்லத்துக்குள் நுழைந்தால், திருமணம் அல்லது குழந்தை பிறப்பு என சுபகாரியங்கள் கைகூடும் என்று நம்புகின்றனர். அதுமட்டுமன்றி, சிட்டுக்குருவிகள் கீச்சிடும் ஓசை, பருவமழையைத் தருவிக்குமாம். மேலும், காதலர் தினத்தன்று சிட்டுக் குருவிகளைக் காணும் பெண், ஏழைக் காதலனுக்கே வாழ்க்கைப்படுவாள் என்றாலும் அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி முழுவதுமாக நிறைந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

கிரேக்க நம்பிக்கை:

அப்ஃரோடைட் என்ற காதல் கடவுளின் சின்னமாகத் திகழும் சிட்டுக்குருவிகள், காதலை மட்டுமன்றி தெய்வீகத்தையும் குறிக்கின்றன.
அத்துடன், மனித வாழ்வில் காதல், ஆன்மிகம் என்ற இரண்டு நேரெதிர்ப் புள்ளிகளையும் இணைக்கின்றன.

ஐரோப்பா:

தங்களது வீட்டுக்குள் சிட்டுக்குருவி நுழைந்துவிட்டால், அதை அபசகுனமாகக் கருதும் ஐரோப்பியர்கள், தங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களின் மரணம் சம்பவிக்காமலிருக்க, அந்தப் பறவையை உடனடியாகக் கொன்றுவிடுவார்களாம்.

சீனா:

வசந்த காலத்தையும் மகிழ்ச்சியையும், சுப நிகழ்வுகளையும் சீனர்களிடையே குறிக்கும் சிட்டுக்குருவிகள், அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சக்தியாகவும் விளங்குகின்றன. அதனால், தங்களது வீட்டில் சிட்டுக்குருவி கூடுகட்டினால், அதை நன்றாகப் பராமரித்தனர் என்கிறது சீன கலாசாரம்.

அதேபோல, சிட்டுக்குருவியைக் கனவில் கண்டால், அவர் மென்மையான உள்ளம் படைத்தவர் என்றும், அதைக் கைகளில் பிடிப்பதுபோல கனவு கண்டால், திருடன் உடனடியாகப் பிடிபடுவான் என்றும், சிட்டுக்குருவியின் முட்டைகள் கனவில் வந்தால், வீரமான ஆண் குழந்தை பிறக்கும் என்றும் பல்வேறு நம்பிக்கைகள் உலவுகின்றன.

பழங்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் மட்டுமன்றி, இந்தச் சிட்டுக்குருவிகள், சில அழகிய வாழ்வியல் உண்மைகளையும் வலியுறுத்திச் செல்கின்றன.

``ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது வெற்றிக்கு எதிரானது; படபடத்துப் பறக்கும் குருவிபோல, ஏதேனும் முயற்சிசெய்துகொண்டே இரு.’’

``உனது குறிக்கோள், ஒரு சிட்டுக்குருவி போல சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணிபுரிந்தால் வெற்றி என்ற வானம் நிச்சயம்’’ எனப் புரியவைக்கின்றன, இந்தச் சிறிய பறவைகள்.

இன்றைய கதை சொல்லல் தினத்தன்று, சிட்டுக்குருவியின் உண்மைக் கதை ஒன்றும் வாழ்வியல் பாடமாக இங்கே...

மாவோ ஆட்சியில், சிட்டுக்குருவிகள் விவசாயத்துக்கு எதிரான அழிவு சக்தியாகக் கருதப்பட்டு லட்சக்கணக்கான குருவிகள் கொன்று குவிக்கப்பட்டன. உணவு தானியங்களை தனது ஆட்சியில் அதிகமாக உற்பத்தி செய்ததாக மாவோ பெருமைப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அடுத்த பெரிய சவால் ஒன்று அவருக்குக் காத்திருந்தது. ஆம், அனைத்து சிட்டுக்குருவிகளையும் கொன்று குவித்த பின்னர்தான், உற்பத்தி செய்து சேகரித்த தானியங்கள் அனைத்தையும் புழு பூச்சிகள் விடாமல் அழித்துவந்தது புரிந்தது. புழு பூச்சிகளை உணவாக உண்டு தானியங்களைக் காத்த சிட்டுக்குருவிகளோ அழிவின் நிலைக்குச் சென்றுவிட, அடுத்த ஆண்டின் விளைச்சலை, கட்டுப்பாடின்றி வளர்ந்த வெட்டுக்கிளிகள் பெருமளவு குறைத்தன. பசி, பட்டினி, பஞ்சம் அனைத்தும் சீனாவில் தலைவிரித்தாடியது. சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு அங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இருக்கும்போது புரியாத அருமை, இல்லாதபோது நன்கு புரிவது சீனாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும்தான்.

ஆம், உலகெங்கும் சிட்டுக்குருவிகள் குறைந்துவரும் இச்சமயத்தில், அழிந்துவரும் விவசாயம், அதிகரித்துவரும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, நீர்நிலைகளின் அழிவு என அதற்கான காரணங்கள் அனைத்தும் மனிதனிடம்தான் தொடங்குகின்றன. இந்த உலகில் எந்த ஓர் உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல்படி என்பதை உணர்வோம்.