Published:Updated:

``இவனுங்களுக்கு மத்தியில கீரிப்பிள்ளையா வாழ்றதே பெரிய சாதனைதான்!"- விலங்குகளின் சர்வைவல் கதைகள் - பகுதி 5

புழு, பூச்சிகள்தான் கீரிகளுக்கு உணவாக இருந்தாலும், பாம்புகள் கிடைத்தால் படு குஷியாகிவிடும். பாம்பு கீரியைப் பார்த்து அதி வேகமாகச் சீரும், அச்சுறுத்தும், படமெடுக்கும். அநேகமாய்ப் பாம்பு எடுக்கிற கடைசிப் படம் அதுவாகத்தான் இருக்கும்.

``இவனுங்களுக்கு மத்தியில கீரிப்பிள்ளையா வாழ்றதே பெரிய சாதனைதான்!"- விலங்குகளின் சர்வைவல் கதைகள் - பகுதி 5
``இவனுங்களுக்கு மத்தியில கீரிப்பிள்ளையா வாழ்றதே பெரிய சாதனைதான்!"- விலங்குகளின் சர்வைவல் கதைகள் - பகுதி 5

சர்வைவல் ஒரு வகையில் குடும்பம் சார்ந்தது. பல இழப்புகளையும் தியாகங்களையும் குடும்பத்திற்காகவே பல உயிரினங்களும் கண்ணை மூடிக் கொண்டு செய்கின்றன. தியாகமும் இழப்பும் ஒரு சில உயிரினங்களின் குடும்பத்தை வேண்டுமானால் வாழ வைக்கலாம் எல்லாக் குடும்பத்தையும் வாழ வைக்காது. ஏனெனில் சர்வைவல் தியாகம் சார்ந்தது மட்டுமல்ல வீரம் சார்ந்ததும். காட்டைப் பொறுத்தவரை தன்னுடைய அடுத்த தலைமுறையை பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் கீரிப்பிள்ளைக்கும் இருக்கிறது; சிங்கத்திற்கும் இருக்கிறது. ஆனால், எப்படிப் பாதுகாக்கின்றன என்பதில்தான் இரண்டும் வேறுபடுகின்றன.  

தமிழில் கீரிப்பிள்ளை, ஆங்கிலத்தில் மங்கூஸ். உலகில் மொத்தம் 34 வகையான கீரி இனங்கள் வசிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று Banded mangoose. ஒரு குழுவில் ஆண் பெண் என 20 கீரிகள் வரை இருக்கும். அதில் ஆண் கீரியே குழுவிற்குத் தலைவனாக இருக்கும். இரை தேடுவதில் தொடங்கி அவற்றை வழிநடத்துவது வரை எல்லாமே ஆண் எடுக்கிற முடிவுதான். தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமானால் காதுகளையும் கண்களையும் எப்போதும் கவனமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு தலைவனைச் சார்ந்தது. கூட்டத்தில் இருக்கிற தலைவன் எதிரிகளின் வருகையின் போது எச்சரிக்கை ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். ஓடுவதும் ஒளிவதும் கீரிப்பிள்ளைகளுக்குப் புதிதில்லை என்றாலும் ஆபத்து நேரத்தில் எப்படித் தப்பிக்கிறோம் என்பது ஒவ்வொரு முறையும் அவை கற்றுக் கொள்கிற பாடம். 

குழுவில் உள்ள எல்லாப் பெண் கீரிகளுடனும் தலைவனாக இருக்கிற ஆண் மட்டுமே இணை சேரும். வேறு எந்த ஆண் கீரிகளையும் பெண்களுடன் இணை சேர அவை அனுமதிப்பதில்லை. அப்படி எந்த ஆணாவது இணை சேர முயன்றால் `சண்டை செய்து' விரட்டிவிடும். கீரிகளின் இனத்தில் இருக்கிற பெண் கீரிகளால், ஆணை மீறி எந்தச் செயலையும் செய்து விட முடியாது. 24 மணி நேரத் தலைவன் கண்காணிப்பிலேயே அவை இருக்கும். பெண்ணின் கர்ப்ப காலங்கள் 60 நாள்களிலிருந்து 70 நாள்கள் வரை, குழுவில் இருக்கிற எல்லாப் பெண் கீரிகளும் ஒரு சேரவே குட்டிகளை ஈனும். இது வரை குழுவில் இருக்கிற கீரிகள் யாருக்கும் ஆபத்து இல்லை. கதையில் இதற்குப் பிறகுதான் சர்வைவல் பற்றிய பக்கங்கள் ஆரம்பிக்க இருக்கிறது.

புதிதாகப் பிறந்த குட்டிகள் 4 வாரங்கள் வரை கறையான் புற்றிலேயே வசிக்கும். ஒரு கறையான் புற்றில் அல்ல, மூன்று நாள்களுக்கு ஒரு முறை கீரிகள் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டு நாய்களிடமிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். சர்வைவல் விஷயத்திலும் குட்டிகள் விஷயத்திலும் காட்டைப் பொறுத்தவரைச் சிங்கமும் ஒன்றுதான், கீரியும் ஒன்றுதான். ஒரு பிரசவத்தில் 2 முதல் 6 குட்டிகள் வரை பெண் கீரி ஈனும். ஒரே சமயத்தில் குழுவில் பத்திலிருந்து பதினைந்து குட்டிகள் வரை புதிதாகப் பிறந்திருக்கின்றன. இருக்கிற எல்லாக் குட்டிகளுக்கும் உணவளிப்பது என்பது சிரமமான காரியம் என்பதால் குழுவில் இருக்கிற பெண் கீரிகள் சண்டையிட ஆரம்பிக்கின்றன. சில சண்டைகள் இறப்பிலும் முடியும். குழுவில் இருக்கிற பொதுவான ஒரு பெண் கீரியை, குட்டிகளின் பாதுகாப்பிற்கு வைத்து விட்டு மற்ற கீரிகள் இரை தேட கிளம்பிவிடுகின்றன. பாதுகாப்பிற்கு இருக்கிற பெண் கீரியே குட்டிகளுக்கு உணவைப் பிரித்து தருகிற வேலையைச் செய்கின்றன. கிடைக்கிற உணவு குட்டிகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. நான்கு வாரங்கள் கழித்து கணக்குப் பார்க்கும் பொழுது பிறந்த கீரி குட்டிகளில் பாதியே பிழைத்து இருக்கும். 

கீரிகளுக்கு ஆபத்து எந்த வழியில் வரும் என்றே சொல்லிவிட முடியாது. கழுகுகள், காட்டு நாய்கள், சிறுத்தை, நிலத்தில் வாழும் ஹார்ன்பில் என வலிமையான எல்லா விலங்குகளுமே எதிரிகள்தாம். பலம் பொருந்திய எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க, ஏதோ ஒரு சின்ன விஷயம் எல்லா உயிரினங்களுக்கும் உதவியாக இருக்கும். கீரிப்பிள்ளைகளுக்குக் கறையான் புற்றுகள் சர்வைவலில் உதவி புரிகின்றன. எவ்வளவு பெரிய விலங்கு துரத்தினாலும் சட்டென்று அதற்குள் புகுந்து விடுகின்றன. ஆனால், எல்லா நேரங்களிலும் கறையான் புற்றுகள் உதவி செய்வதில்லை. சர்வைவல் தன்னை மட்டும் சார்ந்திருப்பதில்லை; சுற்றி இருக்கிற எல்லா உயிரினங்களையும் சார்ந்தது.

BLACK SHOULDERED KITE என்றொரு பறவை இனம் இருக்கிறது. இரையாக எலி, புழு, பூச்சிகளை உண்ணக் கூடியது. தரையில் இரையைக் கண்டால், அதற்கு நேராக வானில் தன்னை நிலை நிறுத்தி இரையைக் கண்காணிக்கும் வழக்கத்தை இயல்பாகக் கொண்டது. இந்தப் பழக்கத்தை கீரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. பறவை வானில் எங்குத் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறதோ, அங்கே குடும்பமாய்ப் படையெடுத்து அங்கிருக்கிற இரையை உணவாக்கிக் கொள்கின்றன. சில சமயங்களில் விலங்குகளின் சர்வைவலிலும் `சூது கவ்வும்’.

இயல்பாக புழு, பூச்சிகள்தாம் கீரிகளுக்கு உணவாக இருந்தாலும், பாம்புகள் கிடைத்தால் படு குஷியாகிவிடும். பாம்பு கீரியைப் பார்த்து அதி வேகமாகச் சீரும்; அச்சுறுத்தும்; படமெடுக்கும். அநேகமாய் பாம்பு எடுக்கிற கடைசிப் படம் அதுவாகத்தான் இருக்கும். கீரி அவ்வளவு எளிதில் பாம்புகளிடம் அடிபணிந்து ஓடுகிற உயிரினம் இல்லை. பாம்புகளின் விஷம் கீரிகளின் தோல் தடிமனையும் அதன் அடர்த்தியையும் தாண்டி எதுவும் செய்து விட முடியாது. மேலும் உடலிலுள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது. அதனால்தான் கீரிகள், பாம்புகள் இருக்கிற களத்தில் துணிந்து இறங்கி விடுகின்றன. அதிலும் குழுவாக இருக்கிற கீரிகளிடம் ஒரு பாம்பு சிக்கிவிட்டால் இரண்டொரு நிமிடங்களில் சிக்கி சின்னாபின்னமாகிவிடும். அது ராஜ நாகமாக இருந்தாலும் சரி, கறுப்பு மாம்பாவாக இருந்தாலும் சரி.

இணையத்தில் இருக்கிற எல்லாக் காணொலிகளிலும் கீரியிடம் சிக்கிய பாம்புகள் தப்பிப் பிழைக்கவே முயல்கின்றன. ஆனால், தப்பித்து விடுவதில்லை. ``ஏதோ ஒரு கிங் கோப்ராவ கொன்னு திங்கல, நான் கொன்னு தின்ன பத்துமே கிங் கோப்ராதான்” `ஈசலுக்கு ரெக்க மொளச்சா பறந்தே சாகும்' என்றொரு பழமொழி உண்டு. மழைக்காலங்களில் புதிதாக ரெக்கை முளைக்கிற ஈசல்கள் ஆண், பெண் என ஆயிரக்கணக்கில் பறக்க ஆரம்பிக்கும். ஒட்டு மொத்தமாகப் பறக்கிற பறக்க ஆரம்பிக்கிற எல்லா ஈசல்களும்  மழைக்கால சர்வைவலில் கீரிப்பிள்ளைகளுக்கு ``போனஸ்” உணவு. சர்வைவல் விஷயத்தில் காட்டுப் பன்றிகள் கீரிப்பிள்ளைகளுக்குத் தூரத்து உறவினர் போல செயல்படுகின்றன. காட்டுப் பன்றியின் உடலிலுள்ள உண்ணிகள், புழுக்கள் ஆகியவற்றைக் கீரிப்பிள்ளைகள் உணவாக எடுத்து பன்றியின் உடலைச் சுத்தம் செய்துவிடுகின்றன. முன் பத்தியில் கூறியது போல ``சர்வைவல் தன்னை மட்டும் சார்ந்திருப்பதில்லை. சுற்றி இருக்கிற எல்லா உயிரினங்களையும் சார்ந்தது."

கேரம்போர்ட் விளையாட்டில் கறுப்பு வெள்ளை காயின்களைவிட சிவப்பு காயின்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவப்பை யார் தக்கவைக்கிறார்களோ அவர்களுக்கே சற்று பலம் கூடும். சர்வைவலும் கேரம்போர்ட் விளையாட்டைப் போன்றதுதான். சர்வைவல் விஷயத்தில் காட்டில் யார் சிவப்பைக் கைப்பற்றுகிறார்கள் என்பது விஷயமல்ல, யார் சிவப்பைக் கொல்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.