Published:Updated:

`தேன் எப்பவுமே எனக்குதான்!' தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் கதை

துணிந்து ஒரு முடிவெடுக்கத் தன்னிடம் சிறந்த ஆயுதம் இருக்கிறது என்பதுதான் இவற்றின் எல்லா செயல்களுக்கும் காரணம்.

`தேன் எப்பவுமே எனக்குதான்!' தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் கதை
`தேன் எப்பவுமே எனக்குதான்!' தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் கதை

ர்வைவல் விஷயத்தில் ஒரு நொடி கிடைத்தாலும் யோசித்து எதிரியிடமிருந்து தப்பிப்பிழைத்தவனையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது. 10 நிமிடங்கள் கிடைத்தும் பயந்து நடுங்கிச் செத்தவனையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது. சர்வைவலில் எந்த உயிரினமாக இருந்தாலும் எதிர்த்துத் தாக்குவதுதான் சிறந்த தற்காப்பு. ஆனால் எல்லா உயிரினங்களும் எல்லா எதிரிகளையும் எதிர்த்து நிற்பதில்லை. சில உயிரினங்கள்தான் எதிர்த்து நிற்கும். அவை சர்வைவலில்  நிலைத்திருப்பதற்குக் காரணமே எதிர்த்து நிற்பதுதான்.

தேன்வளைக்கரடி. பைபிளில் தாவிது கோலியாத் பற்றிய ஒரு கதை வரும். பலம் பொருந்திய கோலியாத்தை சிறுவனான தாவிது உண்டிவில் வைத்துக் கொல்கிற அதே தியரியைப் பின்பற்றுகிற உயிரினம். சர்வைவலில் தேன்வளைக்கரடிகளின் கைகள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்று ஓங்கியே இருக்கின்றன. உருவமெல்லாம் முக்கியமல்ல, யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்போம் என்பதுதான் தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் சீக்ரெட். இவற்றின் உடலமைப்பும் அதன் தோல் அடர்த்தியும்தான் அதன் பலமே. ஆமையின் ஓட்டைத் துளைபோடும் அளவுக்கு அதன் நகங்கள் கூறானவை. சிங்கமாக இருந்தாலும் இதன் தோலை கிழிக்க முடியாத அளவுக்குப் பலமானவை. இந்த ஒரு தகுதிதான் மற்ற விலங்குகளிடமிருந்து தேன்வளைக்கரடிகளைத் தனித்துக் காட்டுகிறது.

துணிந்து ஒரு முடிவெடுக்க தன்னிடம் சிறந்த ஆயுதம் இருக்கிறது என்பதுதான் இவற்றின் எல்லா செயல்களுக்கும் காரணம். குட்டிகளைப் பெற்றெடுப்பதிலிருந்து, அவற்றைத் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பழக்குவது வரைதான் சர்வைவலில் இவற்றுக்குப் போராட்டமே. மற்றபடி காட்டின் அங்கீகரிக்கப்படாத ராஜாக்கள்தான். மற்ற விலங்குகளிடமிருந்து குட்டியைக் காப்பாற்றுவதற்கு தன்னுடைய இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும். மண்ணுக்குள் குழி தோண்டி அதற்குள்தான் வசிக்கும். குட்டிக்குத் தொழில் சொல்லிக் கொடுத்து அவற்றைச் சண்டை செய்ய அனுப்புவதுவரை உடனிருந்தே கவனிக்கும். புழு, பூச்சி, பாம்பு, தேள், சமயங்களில் மற்ற விலங்குகளின் குட்டிகள் எனக் கிடைக்கிற எல்லாவற்றையும் விருந்தாக்கிவிடுவதுதான் இதன் இயல்பு. காடு பல உயிரினங்களின் தகவல்களையும் காற்றில் பரவவிட்டுக்கொண்டே இருக்கும். அதில் ஒரு வாசனையைப் பின்பற்றி துரத்திப் பிடித்து உண்பதுதான் தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் சீக்ரெட். ஒரு நாளைக்கு 40-லிருந்து 50 சதுர கிலோமீட்டர்கள் உணவுக்காகப் பயணம் மேற்கொள்ளும் கரடிகள், ரகசியமாகப் பதுங்கி இருக்கிற உயிரினங்களின் உலகத்தை வாசனையை வைத்தே கண்டுபிடித்து உணவாக்கிவிடுகின்றன.

பாம்புகளைப் பிடித்து கொல்வதும், அவற்றை உண்பதும்தான் சுவாரஸ்யமான விஷயமாக இருக்கிறது. பாம்புகள் நேருக்கு நேராக எதிரிகள் இருந்தால் எளிதில் விஷத்தைப் பாய்ச்சி கொன்றுவிடும். நேருக்கு நேராக எவ்வளவு முயன்றாலும் பாம்புகளைக் கொல்ல முடியாது என்பதால், கரடிகள் வேறு ஒரு யுக்தியைக் கடைப்பிடிக்கின்றன. பாம்புகளுக்குப் பக்கவாட்டில் வந்து தாக்குதலை தொடுப்பதால், பாம்புகளால் கரடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் விடுகிறது. பாம்பு சோர்வாகிற ஒரு சில நொடிகளில் அதன் தலையைப் பிடித்துக் கடித்துவிடுகின்றன. தலை எதிரியிடம் சிக்கிவிட்டால் எல்லாம் முடிந்தது என்பதுதான் எல்லா உயிர்களுக்கும் பொதுவான விதி. மலைப்பாம்பாக இருந்தாலும் ராஜ நாகமாக இருந்தாலும் விதிமுடிந்தால் இந்தக் கரடிகளைத்தான் தேடும். ஆம், இதனுடனான மோதல்தான் அவற்றுக்கு எமன். எடை முக்கியமல்ல, தேன்வளைக்கரடிகளுக்கு எதிரியின் தலைதான் முக்கியம்.  

காட்டு நாய்க்குட்டி, கழுதைப்புலிகள், சிங்கம், சிறுத்தை, பபூன் போன்ற எல்லா விலங்குகளும் தேன்வளைக்கரடிகளை ஒரு ஜீவனாகக்கூட மதிப்பதில்லை. காரணம் அதன் உருவ அமைப்பு. பார்ப்பதற்குச் சாதுவாகவும் உருவத்தில் சிறியதாகவும் இருப்பதால் மற்ற விலங்குகள் இவற்றைப் பெரிதாக மதிப்பதில்லை. உதாசீனப்படுத்துவதும்கூட ஒருவகையில் பலம்தான் என்பதைக் கரடிகள் உணர்ந்திருந்தன. ஆயிரத்துக்கும் மேலான முட்களை ஆயுதமாகக் கொண்ட முள்ளம்பன்றிகளிடம் எந்த விலங்குகளும் யோசித்துதான் எதிர்த்து நிற்கும். ஏனெனில், முள்ளம்பன்றிகள் எதிர்த்து நிற்கும் விலங்கை, பின்னால் நகர்த்தி முள்ளால் குத்தியே விரட்டிவிட்டுவிடும். தேன்வளைக்கரடிகளின் தோல் அடர்த்தியின் காரணமாக அவ்வளவு எளிதில் முள்ளம்பன்றி முட்களால் துளைக்க இயலாது என்பதால் அவற்றையும் சில சமயங்களில் தேன்வளைக்கரடிகள் கடித்தே கொன்றுவிடுகின்றன. தேன் என்றால் எத்தகைய சாகசத்தையும் இவ்வகை கரடிகள் நிகழ்த்தும். மர உச்சியிலோ, மலை உச்சியிலோ இருக்கிற தேன் கூடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கரடிகள் காலிசெய்து விடுகின்றன. தேன்கூடுகளைச் சேதப்படுத்தும்போது கரடி தன்னுடைய காதுகளை மூடிக்கொள்ளும். அதன் தோல் அடர்த்தி காரணமாக தேனீக்களால் கரடியை விரட்ட முடியாமல் போய்விடுகிறது. அதிக மோப்ப சக்தி கொண்ட தேன் வளைக்கரடிகள் எளிதாக எதையும் கண்டுபிடித்துவிடும். அதனாலேயே இவை தேன் வளைக்கரடிகள் என அழைக்கப்படுகின்றன.

வெற்றி தோல்விகள் குறித்துக் கவலைப்படாமல் எதிர்த்து நிற்பதே மிகப் பெரிய தற்காப்பு என்பதை மனித இனம் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் இவை சொல்கின்றன. தேன்வளைக்கரடிகளின் சர்வைவல் ஒதுங்கிப் போவதில் இல்லை; எதிர்த்து நிற்பதில்தான் இருக்கிறது. பிழைத்திருப்பதற்குக் காரணமே எதிர்த்து நிற்பதுதான்!