Published:Updated:

'மண்டை ஓடு மட்டுமே மிச்சம்!' காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவருக்கு நிகழ்ந்தது என்ன?

வேட்டையாடச் சென்றவர்களுக்குத் தங்கள் பாணியில் பதிலடி கொடுத்திருக்கின்றன யானையும் சிங்கங்களும்.

'மண்டை ஓடு மட்டுமே மிச்சம்!' காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவருக்கு நிகழ்ந்தது என்ன?
'மண்டை ஓடு மட்டுமே மிச்சம்!' காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவருக்கு நிகழ்ந்தது என்ன?

ப்பிரிக்க கண்டம் என்றாலே நம்மில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காண்டாமிருகம், சிங்கம், யானை, வரிக்குதிரை, நெருப்புக்கோழி என அங்கு வாழும் பல்லுயிர்கள்தான். இப்படி விலங்குகளுக்காகப் பிரபலமாக இருக்கும் அங்கு வேட்டையாடுவதென்பதும் பல காலமாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. தந்தங்களுக்காக யானைகளும் கொம்புகளுக்காகக் காண்டாமிருகங்களும் வேட்டையாடப்படுகின்றன. சிங்க வேட்டையும் இப்போது பரவலாகத் தொடங்கியுள்ளது. மற்ற மிருகங்களைவிடச் சிங்கங்களைக் கொல்வது வேட்டையாடுபவர்களுக்கு எளிதாகவும் இருக்கிறதாம். மாமிசத்தில் விஷம் கலந்து சிங்கங்கள் வாழும் பகுதிகளில் வீசி அவற்றைக் கொல்கின்றனர். பின்பு அவற்றின் முகமும் கால்களும் வெட்டியெடுக்கப்படுகின்றன. இவற்றுக்குக் கறுப்பு சந்தையில் நல்ல மவுசு. இப்படி அரசு கட்டுப்பாடுகள் இருந்தாலும் வேட்டையாடுபவர்களின் கைகளே எப்போதும் ஓங்கியிருக்கும். ஆனால், பெருமளவில் வேட்டையாடப்படும் இந்த விலங்குகளால், வேட்டையாடுபவர் ஒருவரின் உயிர் ஒன்று இப்போது பறிபோகியுள்ளது. 

இந்தச் சம்பவம் தென்னாப்பிரிக்காவின் க்ருகெர் தேசியப் பூங்காவில் நிகழ்ந்துள்ளது. காண்டாமிருகங்களை வேட்டையாட ஒரு குழு இந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. காண்டாமிருகங்களைத் தேடிக்கொண்டிருந்த இவர்களைத் திடீரென யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில் அந்தக் குழுவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரை விட்டுவிட்டு மீதமிருந்த அனைவரும் தப்பித்து அங்கிருந்து வெளியே வந்திருக்கின்றனர். அவர்கள் உயிரிழந்த நபரின் குடும்பத்திடம் நடந்ததைக் கூறியிருக்கின்றனர். அந்தக் குடும்பத்தினர் வேறு வழி தெரியாமல் காவல்துறையிடம் அவரது உடலை மீட்டுத் தருமாறு வேண்டியுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாள், ஏப்ரல் 2-ம் தேதி இது நடந்தது. பின்பு அந்தத் தேசிய பூங்காவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் வான் வழியாகவும் தரை வழியாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அன்று மாலை போதிய ஒளி இல்லாததால் இந்த அதிகாரிகளால் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரிய பூங்கா என்பதால் அடுத்த நாளும் அவர்களுக்கு எதுவும் தென்படவில்லை. இறுதியாக ஏப்ரல் 4-ம் தேதி முதலைகள் பாலம் எனப்படும் பகுதிகள் அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டது. உடல் என்றுகூடக் கூற முடியாது; ஒரு மண்டையோடும் டிரௌசரும்தான் திரும்பக் கிடைத்திருக்கிறது. 

இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை ஆராய்ந்ததில் யானையின் கால்களில் மிதிப்பட்ட அவரது உடல் சிங்கங்களுக்கு இறையாகியுள்ளது. சிங்கங்கள் மண்டையோட்டை மட்டுமே மீதம் வைத்திருக்கின்றன எனத் தேடுதல் குழு தெரிவித்திருக்கிறது. இவருடன் வேட்டைக்குச் சென்ற 26 வயது முதல் 35 வயதுவரை இருக்கும் மூவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தது, அத்துமீறி தேசிய பூங்காவினுள் நுழைந்தது, வேட்டையாட முயன்றது எனப் பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்தவரின் மரணத்துக்காகக் காரணம் என்ன என்பது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

காவல்துறை தரப்பில் பேசிய லியோனார்ட் லாத்தி, "யானையால் தாக்கப்பட்ட நபரின் உடலை, உடனிருந்தவர்கள் ஒரு சாலையின் அருகே போட்டுவிட்டு வந்தாகத் தெரிவிக்கின்றனர். காலை அங்கு வரும் அதிகாரிகள் அதைப் பார்த்து மீட்டெடுத்துவிடுவர் என்று அவர்கள் நம்பியிருக்கின்றனர். ஆனால், அப்படி நடக்கவில்லை" என்று தெரிவித்தார்.

சிங்கங்களால் தூக்கி எறியப்பட்ட டிரௌசர்

இந்தத் தேசிய பூங்காவின் மேலாளர் பேசுகையில், "க்ருகெர் பூங்காவில் அத்துமீறி நுழைவது தவறு. அதுவும் எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நடந்துவருவது முட்டாள்தனம். அத்தனை ஆபத்துகள் இருக்கின்றன இந்த வனப்பகுதியில். இந்தச் சம்பவம் ஒரு சான்றுதான். இதனால் தந்தையை இழந்து தவிக்கும் மகள்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இன்னும் சோகம் என்னவென்றால் அவரின் உடலை முழுவதுமாக மீட்கக்கூட முடியாமல் போய்விட்டது" என்றார்.

உலகின் 80 சதவிகிதத்துக்கும் மேலான காண்டாமிருகங்கள் தென்னாப்பிரிக்காவில்தான் இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வேட்டையாடுதலால் இவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2013 தொடங்கி 2017 வரையிலான காலத்தில் வருடத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காகத் தென்னாப்பிரிக்காவில் மட்டும் வேட்டையாடப்பட்டு இருக்கின்றன. நம்பிக்கை தரும் வகையில் இந்த எண்ணிக்கை 2018-ல் 769 ஆகக் குறைந்தது. பெரும்பாலான வேட்டை இந்த க்ருகெர் தேசிய பூங்காவில்தான் நடந்திருக்கிறது. 2007 தொடங்கி 2014 வரை மட்டும் இந்தப் பூங்காவில் காண்டாமிருக வேட்டை என்பது 9,000 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உலகில் எங்கும் இல்லாத அளவில் இந்த பூங்காவில் காண்டாமிருகங்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

க்ருகெர் தேசிய பூங்கா

மனித விதிகள் என்ன என்பது விலங்குகளுக்குப் புரியாது. வேட்டையாடுவது தவறு என்பதும் அவற்றுக்குத் தெரியாது. ஆனால், இயற்கையாக வழங்கியிருக்கும் நீதி இது. அடுத்த தலைமுறையை இந்தப் பூமியில் நிலைத்திருக்கவே நம்மிடையில் அவை போராடுகின்றன. அதற்கு இடையூறு விளைவித்தால் அவை நம்மை தாக்கத்தான் செய்யும். மனிதர்களாகிய நம்மை ஆயுதங்களும், தொழில்நுட்பமும் மட்டும் இயற்கையைவிடப் பெரிய சக்திகளாக ஆகிவிட முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. 

காண்டாமிருக வேட்டையைப் பற்றி விரிவாகப் படிக்க இந்தக் கட்டுரையைப் படியுங்கள்: ஒரு கிலோ கொம்பு 2 கோடி ரூபாய்... காண்டாமிருகம் என்றால் காசு! #AnimalTrafficking - அத்தியாயம் 3