Published:Updated:

`காட்டின் காதல் மன்னன்!' கறுப்பு ஓநாயின் சர்வைவல் கதை

ஜார்ஜ் அந்தோணி

கூட்டத்தில் இருக்கிற ஆண் ஓநாய், பெண்களுக்கு உறவு முறையாக தகப்பன் இடத்தில் இருக்கிறது. ஓநாய்கள் பொதுவாக சொந்தங்களுடன் இணை சேராது. இப்படியான நேரத்தில்தான் கறுப்பு ஓநாய் அங்கு வந்து சேர்ந்திருந்தது. இதன் காரணமாகவே பெண் ஓநாய்கள் கறுப்பு ஓநாயை அங்கிருந்து விரட்டுவதற்கு உடன்படாமல் இருக்கின்றன. இதை கறுப்பு ஓநாய் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

`காட்டின் காதல் மன்னன்!' கறுப்பு ஓநாயின் சர்வைவல் கதை
`காட்டின் காதல் மன்னன்!' கறுப்பு ஓநாயின் சர்வைவல் கதை

றுப்போ, சிவப்போ எப்படிப் பிறந்தாலும் இயற்கை இருவருக்கும் பல சாதக, பாதகங்களை உருவாக்கியே வைத்திருக்கும். பலவீனங்களை எப்படி பலமாக மாற்றுகிறோம் என்பதில்தான் சர்வைவல் கதைகளே தொடங்குகின்றன. ஓநாய்களில் கறுப்பாகப் பிறப்பதில் பிரச்னையில்லை. கறுப்பாக வாழ்வதில்தான் பிரச்னையே. சிவப்பு புரட்சியின் அடையாளம், கறுப்பு கிளர்ச்சியின் அடையாளம். இது ஒரு கறுப்பு ஓநாயின் சர்வைவல் கதை.

2000-ம் ஆண்டு பனிப் பிரதேசமான அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் எண்களை அடையாளமாகக் கொண்ட பல வெள்ளை ஓநாய்கள் கூட்டமாக வசிக்கின்றன. அதில் 40 என்கிற எண்ணை அடையாளமாகக் கொண்ட ஒரு கூட்டமும் வசிக்கிறது. ஓநாய்கள் கூட்டத்திற்கு பெண்ணே தலைமை தாங்குகிறது. அதனுடைய வழிநடத்தலில்தான் எல்லாமே நடக்கும். கூட்டத்தில் இருக்கிற ஒரு வெள்ளை ஓநாய்க்கு நான்கு குட்டிகள் பிறக்கின்றன. அதில் கடைசி குட்டி கறுப்பாகப் பிறக்கிறது. கூட்டத்தின் முந்தைய வரலாற்றின்படி இதுவே முதல் கறுப்பு ஓநாய். மூன்று வெள்ளைக் குட்டிகளுக்குக் கிடைக்கிற எந்தச் சலுகையும் கறுப்புக் குட்டிக்கு மறுக்கப்படுகிறது. உதாசீனமும், புறக்கணிப்பும் கறுப்பு ஓநாயை இப்போதைக்கு வேண்டுமானால் தனிமைப்படுத்தலாம். ஆனால், தனித்து இருக்கிற கறுப்பு ஓநாய் தன்னை இங்கிருந்துதான் பலப்படுத்த தயாராகிறது. வயதில் மூத்த ஆண் ஓநாய், கூட்டத்தில் இருக்கிற குட்டிகளுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கிற வேலையைச் செய்கிறது. குட்டிகள் தங்களுக்குள் சண்டை இடுகின்றன. அதில் கறுப்புக் குட்டியே அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகிறது. ஓநாய்கள் தங்களது எல்லையை விரிவாக்குவதில் கவனமாக இருக்கும். 

ஓநாய்கள் சர்வைவல் விஷயத்தில் தங்களின் எல்லையைப் பாதுகாத்துக் கொண்டே இருக்கும். திடீரெனப் பத்திற்கும் மேற்பட்ட ஓநாய் கூட்டம் அவற்றின் எல்லையை விரிவாக்க, 40-ம் எண் கொண்ட கூட்டத்தின் எல்லைக்குள் வந்துவிடுகின்றன. எண்ணிக்கையிலும், பலத்திலும் குறைந்த 40-ம் எண் கொண்ட கூட்டத்தால் அவற்றைச் சமாளிக்க முடியாது. ஓநாய்கள் படையெடுப்பதில் சமரசமில்லாத ஒரு கொள்கையை கடைப்பிடிக்கும். அதாவது ஒரு கூட்டத்தை தாக்குவதற்கு முன் அந்தக் கூட்டத்தின் தலைவனை முதலில் குறி வைக்கும். எதிர்க்கூட்டத்தின் தலைவனைக் கொன்றுவிட்டால் மற்றவை சிதறி ஓடும். பலம் பொருந்திய எதிர் ஓநாய் கூட்டத்திற்கு பயந்து எல்லா ஓநாய்களும் சிதறி ஓடுகின்றன. முதலில் கூட்டத்தின் தலைவனைக் குறிவைத்து துரத்துகின்றன. இதில் தாய் தன்னுடைய குட்டிகளை அழைத்துக் கொண்டு தப்பிப் பிழைக்க ஓடுகிறது. எதிரிகள், 40-ம் எண் கூட்டத்தின் தலைவனை முதலில் கொன்றுவிடுகின்றன. வயதில் மூத்த ஆண் ஓநாயையும் கொன்றுவிடுகின்றன. இறந்த ஆண் ஓநாய்தான் குட்டிகளுக்கு உணவும், வேட்டையாடுவதற்குப் பயிற்சியும் அளித்தது. இப்போது குட்டிகளுக்கு ஆதரவாய் யாரும் இல்லை. தாய் ஓநாய் குட்டிகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய எல்லையைவிட்டு வேறோர் இடத்திற்கு இடம்பெயர்கின்றன.

கூட்டத்தில் தலைவன் இல்லை. உணவு கொண்டுவந்து தரும் மூத்த ஆணும் இல்லை. நான்கு குட்டிகளை வைத்திருக்கிற தாய் குட்டிகளை விட்டுவிட்டு உணவு தேடிச் செல்லமுடியாத சூழல். எவ்வளவு கடினமான சூழ்நிலை என்றாலும் குட்டிகளை காப்பாற்றியாக வேண்டும். பசிக்கு உண்பதை மறந்து, கிடைப்பதை உண்டு உயிர்பிழைக்கின்றன. பசி முதலில், மனதைக் கொல்லும். பிறகுதான் உடலைக் கொல்லும். நாள்கள் நகர்கின்றன. குட்டிகள் இப்போது வரை எப்படி வேட்டையாடுவது என்பதைக் கற்கவில்லை. அவர்கள் நல்ல தலைவனையும், கூடவே நல்ல ஆசிரியரையும் இழந்திருக்கிறார்கள். இப்போது கறுப்பு வெள்ளை என்கிற பாகுபாடெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, எல்லோரும் பிழைத்தாக வேண்டும். உலகில் பசி மட்டும்தான் தவறுகளை அறிமுகப்படுத்தி பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.

பாதுகாப்பாய் ஓரிடத்தில் இருக்கும் பொழுது கூட்டமாக வருகிற Elk வகை மான்களை ஓநாய்கள் பார்க்கின்றன. கறுப்பு ஓநாய் இயல்பிலேயே மூர்க்க குணமும், அசாத்திய பலமும் கொண்டது. இனத்திற்குள் தான் யார் என்பதை நிரூபிக்க இயலாது. அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும், அப்படியான நேரம் இப்போது கிடைத்திருக்கிறது. கறுப்பு ஓநாய் மான்களின் கூட்டத்தில் ஒன்றை வேட்டையாடுவது எனத் தீர்மானிக்கிறது. இதையும் விட்டால் இனி வேறு வழியுமில்லை, உணவுமில்லை. நொடியும் தயங்காமல் மானைத் துரத்துகிறது. மான் பயந்து ஓடுகிறது. எப்படி வேட்டையாட வேண்டுமென ஓநாய் இன்னும் முழுமையாகக்  கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படித் தப்பிப்பது என மானுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பல விலங்குகளிடமிருந்து தப்பிய அனுபவம் மானுக்கு இருக்கிறது. ஓநாயின் தாக்குதல் திட்டத்தில் ஏதோ குழப்பம் இருப்பதை மான் கண்டுபிடித்து விடுகிறது. ``தொழிலுக்கு ஓநாய் புதுசு” என்பதைக் கண்டுபிடிக்கிற மான் கறுப்பு ஓநாய் குட்டியை எதிர்த்து நிற்கிறது. எப்படித் தாக்குவது எனத் தெரியாமல் கறுப்பு ஓநாய் பின்வாங்கிவிடுகிறது.

இயற்கை எப்போதும் சில மாறுதல்களையும் நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டே இருக்கும். இப்போதைக்கு குட்டிகளின் பாதுகாப்புக்கும், உணவுக்கும் தாய் ஓநாய் ஏதாவது செய்தாக வேண்டும். தாய் ஓநாய் ஊளையிட ஆரம்பிக்கிறது. ஆனால் அதன் குரலுக்கு எந்த ஆண் ஓநாயும் பதிலளிக்கவில்லை. பல நாள்கள் ஊளையிட்டும் எந்தப் பலனுமில்லை. குளிர் கால தொடக்கத்தில் ஒரு நாள் ஆண் ஓநாய் ஒன்று இணை சேர்வதற்காக ஊளையிட ஆரம்பித்தது. இதற்காகவே காத்திருந்த குட்டிகளின் தாய் உடனடியாக பதிலளிக்கிறது. ஆண் ஓநாய் ஒன்று புதுவரவாய் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொள்கிறது. குட்டிகளின் பாதுகாப்பும்,உணவும் உறுதி செய்யப்படுகிறது. அப்போதும் கறுப்பு ஓநாய் குட்டி, தனித்தே இருக்கிறது. குட்டிகள் வளர்ந்து 2 வயதை அடைகின்றன. 2 வயது என்பது ஓநாய்களின் இளம்பருவம். இப்போது அவை இணை சேர்கிற காலம்.  

இனி குடும்பத்தில் இருப்பது சரியல்ல, தனித்துச் செயல்படலாம் என்கிற முடிவுக்கு வந்து கறுப்பு ஓநாய் 2002-ம் ஆண்டு குடும்பத்தைவிட்டு வெளியேறுகிறது. இதற்கு மேல் உணவு, பாதுகாப்பு எல்லாமே அதை மட்டுமே சார்ந்தது. பனிப்பிரதேசங்களைக் கடந்து யெல்லோஸ்டோன் பூங்காவின் தெற்குப் பகுதிக்கு வந்து சேர்கிறது. 21-ம் எண்ணை அடையாளமாகக் கொண்ட வெள்ளை ஓநாய் கூட்டத்தின் எல்லைக்குள் வந்துசேர்ந்தது. 21-ம் எண் அந்தக் கூட்டத்தின் பலம் மிக்க ஆண் ஓநாயைக் குறிக்கும். அந்தக் கூட்டத்தில் பெண் ஓநாய்களே அதிகம்.

கறுப்பு ஓநாய் 21-ம் எண் ஓநாய்களின் எல்லையில் மறைந்திருந்து, மற்ற ஓநாய்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. இதை 21-ம் எண் கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளைப் பெண் ஓநாய் பார்த்து விடுகிறது. கறுப்பு ஓநாய் பதுங்கியிருந்த இடத்திற்கு வந்த வெள்ளை ஓநாய் கறுப்பு ஓநாயிடம் நடப்பு வைத்துக்கொள்ளும் விதமாக அதனோடு விளையாட ஆரம்பிக்கிறது. இதைக் கூட்டத்தின் பலசாலியான 21-ம் எண் ஆண் ஓநாய் பார்த்து கறுப்பு ஓநாயை நோக்கி ஓடிவருகிறது. இப்போது கறுப்பு ஓநாய்க்கு இரண்டே வாய்ப்புகள்தாம் இருக்கின்றன. ஒன்று அதனோடு சண்டையிட வேண்டும், இல்லையென்றால் அங்கிருந்து தப்பி ஓடிவிட வேண்டும். ஆனால் கறுப்பு ஓநாய் சரணடைவது என்கிற மூன்றாவது வாய்ப்பை எடுக்கிறது. ஆனால் 21-ம் எண் ஓநாய் கறுப்பு ஓநாயைக் கடித்து குதறுவதில் குறியாக இருந்தது. இனியும் தாமதித்தால் உயிர்போய்விடும் என்பதால் அதனிடமிருந்து தப்பி யெல்லோஸ்டோன் பூங்காவின் மத்திய சாலைக்கு ஓடுகிறது. அந்தச் சாலையில் இதற்கு முன்பே பத்திற்கும் மேற்பட்ட ஓநாய்கள் வாகனங்களில் அடிபட்டு இறந்திருக்கின்றன. அதனால் 21-ம் எண் ஓநாய் மேலும் துரத்தாமல் கூட்டத்திற்கே திரும்பி விடுகிறது. சாலையிலிருந்து 21-ம் எண் கூட்டத்தில் இருக்கிற பெண் ஓநாய்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறது.

21-ம் எண் கூட்டத்தில் வேறு ஒரு சிக்கல் நிலவுகிறது. வயது வந்த பெண் ஓநாய்களுடன் இணை சேர ஆண் ஓநாய்கள் அந்தக் குழுவில் இல்லை. இருக்கிற ஆண் ஓநாய் பெண்களுக்கு உறவு முறையாகத் தகப்பன் இடத்தில் இருக்கிறது. ஓநாய்கள் பொதுவாக சொந்தங்களுடன் இணை சேராது. இப்படியான நேரத்தில்தான் கறுப்பு ஓநாய் அங்கு வந்து சேர்ந்திருந்தது. இதன் காரணமாகவே பெண் ஓநாய்கள் கறுப்பு ஓநாயை அங்கிருந்து விரட்டுவதற்கு உடன்படாமல் இருக்கின்றன. இதைக் கறுப்பு ஓநாய் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. 21 எண் ஆண் ஓநாய்க்குத் தெரியாமல் கூட்டத்தில் இருக்கிற மூன்று பெண் ஓநாய்களிடம் இணை சேர்ந்து விடுகிறது. எப்போதும் முரட்டுத்தனமான வெற்றி, கண்மூடித்தனமான காதலை உருவாக்கும். ஆனால் கறுப்பு ஓநாய் யாரிடமும் எந்த விதமான உறவையும்  வைத்துக்கொள்ளவில்லை. யாருக்கும் பதில் சொல்கிற நிலைக்கும் கறுப்பு ஓநாய் தயாராகவும் இல்லை. வருவதும் போவதுமாக காதல் மன்னன் வேலையை மட்டுமே செய்து வந்தது. நாள்கள் செல்ல ஆரம்பிக்கின்றன. 21-ம் எண் கூட்டத்தின் பெண் ஓநாய்கள் குட்டிகளை ஈன்கின்றன. குட்டிகளை அப்படியே விட்டுவிட்டு கறுப்பு ஓநாயால் செல்ல முடியவில்லை. 21-ம் எண் கூட்டத்தின் அங்கத்தினராகக் கறுப்பு ஓநாய் இல்லையென்றாலும், சூழ்நிலை கறுப்பு ஓநாயை, கூட்டத்தின் ஓர் அங்கமாக மாற்றிவிடுகிறது. 21-ம் எண் ஆண் ஓநாய்க்கு வயதான காரணத்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் மனநிலை அதற்கு இல்லை. 2004-ம் ஆண்டு 21-ம் எண் கூட்டத்தின் ஆண் ஓநாயின் துணை இறந்துவிடுகிறது. துணை இறந்த பிறகு தெற்கில் இருக்கிற மலைப்பகுதிக்குச் சென்ற ஆண் ஓநாய் அதன் பிறகு மீண்டும் திரும்பவேயில்லை.

இப்போது இருக்கிற கூட்டத்திற்கு தலைவன் இல்லாமல் இருக்கிறது. நான்கு பெண் ஓநாய்கள், ஆறு குட்டிகள் இருக்கிற கூட்டத்திற்கு தலைவனாகும்படியான சூழ்நிலை கறுப்பு ஓநாய்க்கு ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் கூட்டத்தின் தலைவனாக மாறுகிறது. காலம் ஒன்றை மறுபடி மறுபடி நிகழ்த்திக் கொண்டே இருக்கும். அது சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம். 2005-ம் ஆண்டு பலம் பொருந்திய வேறோர் ஓநாய்க் கூட்டம், 21-ம் எண் கூட்டத்தின் மீது படையெடுத்து வந்தது. துரதிர்ஷ்ட விதமாக இரண்டாவது முறை தோற்கிற பக்கம் கறுப்பு ஓநாய் இருக்கிறது. அதைவிட வருகிற ஓநாய்களின் மொத்தப் பார்வையும் தலைவன் என்கிற முறையில் கறுப்பு ஓநாயின் பக்கமே இருக்கிறது. இப்போது யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை, உடனடியாக ஓடியாக வேண்டும். முன்னொரு முறை தன்னைக் காப்பாற்றிய சாலையை நோக்கி கறுப்பு ஓநாய் ஓடுகிறது. சாலைக்கு வருவது ஆபத்து என்று படையெடுத்த ஓநாய்களுக்கும் தெரியும் என்பதால் அவை துரத்துவதை கைவிட்டு வெற்றியைக் கொண்டாடுகின்றன.

மூன்று நாள்கள் கழித்து தன்னுடைய குடும்பத்தை தேடி பனி மலைகளில் பயணிக்கிறது. ஊளையிட்டுக் கொண்டே பயணித்ததால் ஒரு வாரத்திற்குள் தன்னுடைய குடும்பத்தைக் கண்டறிந்துவிடுகிறது. இப்போது புதிதாக ஓர் எல்லையை உருவாக்க வேண்டும். அதற்குள் தன்னுடைய கூட்டத்தின் பலத்தை எண்ணிக்கை வழியாக உயர்த்த வேண்டும். ஆனால் தந்தை இடத்தில் இருக்கிற கறுப்பு ஓநாயால் அது சாத்தியமில்லை. 2006-ம்  ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள், தனியாக இருக்கிற ஒரு வெள்ளை ஓநாய் ஒன்று கறுப்பு ஓநாய் கூட்டம் இருக்கிற பகுதிக்கு வந்து சேர்கிறது. வந்து சேர்ந்த ஓநாய் இணை சேர்வதற்காக பெண் ஓநாயை எதிர்பார்த்து ஊளையிட  ஆரம்பிக்கிறது. இப்போது கறுப்பு ஓநாய் தலைவனாய் இருக்கிற கூட்டத்தில் இருக்கிற பெண் குட்டிகள் அனைத்தும் இணை சேருகிற காலத்திற்குள் வந்து சேர்கின்றன. கறுப்பு ஓநாய் அவற்றோடு இணைசேரமுடியாது, இப்போது புதிதாக வந்திருக்கிற ஆண் ஓநாயை விரட்டினால் கூட்டத்தில் இருக்கிற பெண் ஓநாய்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும் என்பதால் கறுப்பு ஓநாய் அமைதியாக இருந்து விடுகிறது. இனிவரும் காலங்களில் கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரித்தாக வேண்டும். இன்னொரு கூட்டத்திற்கு பயந்து இனியும் ஓடக்கூடாது என்பதால் புதிதாக வந்த ஆண் ஓநாயை ஏற்றுக் கொள்கிறது.  

அடுத்த மூன்று வருடங்களில் கூட்டத்தின் எண்ணிக்கை 16 ஆக உயர்கிறது. அதில் 7 பலமான ஆண் ஓநாய்கள். இதற்காகத்தான் கறுப்பு ஓநாய் காத்திருந்தது. வாழ்நாளில் முதன் முறையாக எல்லையை விரிவாக்க முதல் தாக்குதலை தொடுக்கத் தயாராகிறது. ஏற்கெனவே விட்டுக் கொடுத்த இடத்திற்கே தன்னுடைய கூட்டத்தோடு செல்கிறது. புதிதாக ஓர் ஓநாய் கூட்டம் வருவதைப் பார்க்கிற எதிரிகளின் கூட்டம், இடத்தை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி விடுகின்றன. ஆனால் அவை தற்காலிகமாக அங்கிருந்து கிளம்பி இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதைக் கறுப்பு ஓநாய் தெரிந்தே இருந்தது.