Published:Updated:

`இது பறவைகளில் ஓர் ஏவுகணை!' ஃபால்கன் பறவையின் சர்வைவல் கதை

2 கிலோ மீட்டருக்குள் இருக்கிற இரையை டார்கெட் செய்துவிட்டால் அடுத்த நான்கு நிமிடங்களில் இரையைப் பிடித்து விடும். அதன் பார்வையும் அதன் வேகமும்தான் அதனுடைய பலம். உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களிலும் அதிக வேகமாகப் பறக்கக்கூடிய ஒரே உயிரினம் ஃபால்கன் மட்டும்தான்.

`இது பறவைகளில் ஓர் ஏவுகணை!' ஃபால்கன் பறவையின் சர்வைவல் கதை
`இது பறவைகளில் ஓர் ஏவுகணை!' ஃபால்கன் பறவையின் சர்வைவல் கதை

ர்வைவல் விஷயத்தில் பறவைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். மொத்தம் 19 வகையான ஃபால்கன் கழுகுகள் இருக்கின்றன. அதில் (Peregrine falcon) ப்ரகிரைன் ஃபால்கன் பகீர் ரகம். பார்வையில் வெறும் பறவையாக இருக்கிற ஃபால்கன், சர்வைவலில் அசைவ வகையைச் சார்ந்தது. பலரும் ஃபால்கன் பறவையை, கழுகு என நினைத்திருக்கிறார்கள். கழுகுகள் தாக்குதலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஃபால்கன். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஃபால்கன் பறவை இனத்தில் இருக்கிற ஒரு விலங்கு.

ப்ரகிரைன் ஃபால்கன் தனக்கு வேண்டிய இரையை வேட்டையாடுகிற விதத்தை மட்டுமே வைத்து ஒரு சுவாரஸ்ய கட்டுரையை எழுதிவிடலாம். 2 கிலோ மீட்டருக்குள் இருக்கிற இரையை டார்கெட் செய்துவிட்டால் அடுத்த நான்கு நிமிடங்களில் இரையைப் பிடித்து விடும். அதன் பார்வையும் அதன் வேகமும்தான் அதனுடைய பலம். உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களிலும் அதி வேகமாகப் பறக்கக் கூடிய ஒரே உயிரினம் ஃபால்கன் மட்டும்தான். மணிக்கு 389 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். நேஷனல் ஜியோகிராபி தொலைக்காட்சி, ஃபால்கன் மணிக்குக் 389 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதாகப் பதிவு செய்துள்ளது. ப்ரகிரைன் ஃபால்கன் பறவைகள், உயிரோடு இருக்கும் ஏவுகணைகள். 

Photo: David G Hemmings

கழுகு (GOLDEN EAGLE) மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது. உருவத்தில் கழுகு, ப்ரகிரைன் ஃபால்கனை விட பெரியது. ஆனாலும் கழுகு செய்ய முடியாத ஒரு விஷயத்தை ஃபால்கன் எளிதாகச் செய்து முடித்து விடும். ஃபால்கன் பறவை இருக்கிற பகுதியில் எந்த ஒரு பறவையும் கீழாகவும் பறக்க முடியாது. மேலாகவும் பறக்க முடியாது. ஏனெனில் நடுவானத்திலேயே தன்னுடைய இரையைப் பிடித்துவிடும். ஃபால்கன் பறவையின் எப்போதுமான சாய்ஸ் புறா. 320 கிலோ மீட்டர் வேகத்தில் மேல்நோக்கிப் பறக்கும் ஃபால்கன் 320 கிலோ மீட்டர் வேகத்தில் கீழ்நோக்கிப் பறக்கும் திறன்கொண்டது. அதன் கால்விரல்கள் பெரியதாக இருப்பதால் ஃபால்கன் எடையை விட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்தாலும் பறக்கும்பொழுதே பிடித்துவிடும். பிடிப்பது, துரத்துவது, சாப்பிடுவது எல்லாமே பறவைகள்தாம். ஃபால்கன் பறவையின் இன்னொரு பலம் அதன் கண்கள். 2 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிற பறவைகளை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பறவைகளை கண்காணிக்கும் அளவிற்குத் துல்லியமானது. வேட்டையாடும்பொழுது இதனுடைய கண்களை பாதுகாக்க விழித்திரை ஒன்று செயல்படுகிறது. இது ஆபத்துகளிலிருந்து கண்களைக் காப்பாற்றுகிறது. ஃபால்கன் பறவை தனக்கெனக் கூடுகளை எல்லாம் கட்டுவதுமில்லை, அவற்றைப் பராமரிப்பதுமில்லை. உயர்ந்த மலைச் சரிவுகளிலும், நகரங்களில் உயர்ந்த கட்டடங்களிலும் வாழ்கின்றன. இனப்பெருக்கம் செய்கிற பறவைகள் குஞ்சுகளை பாதுகாப்புடன் வளர்க்கின்றன.

2016-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள Norwich Cathedral என்கிற ஆலயத்தில் ஃபால்கன் பறவைகளின் இனப்பெருக்கம் குறித்த நிகழ்வுகளை கேமராவில் படம்பிடித்திருக்கிறார்கள். அதன்படி மார்ச் மாத தொடக்கத்தில் ஆலயத்தின் உயர்ந்த இடத்தில் ஆண் பெண் என இரண்டு ஃபால்கன் பறவைகள் இனப்பெருக்கக் காலத்தைத் தொடங்குகின்றன. 18-ம் தேதி பெண் ஃபால்கன் முதல் முட்டையை இடுகிறது. அடுத்த முட்டையை 21 மார்ச் அன்று இடுகிறது. அதன் தொடர்ச்சியாக 23 மற்றும் 26-ம் தேதிகளில் இரண்டு முட்டையை இடுகின்றன. 26-ம் தேதியிலிருந்தே ஆண் பெண் இரண்டு ஃபால்கன் பறவைகளும் முட்டையை அடைகாக்கின்றன. பெண் பறவை பறந்து சென்றுவிட்டால் ஆண் பறவை தொடர்ந்து அடைகாக்கிறது. மார்ச் 28 அன்று முட்டையிலிருந்து பறவைக் குஞ்சு ஒன்று வெளிவருகிறது. உடைந்த முட்டை ஓடுகளில் கால்சியம் இருப்பதால் உடைந்த முட்டை ஓடுகளைப் பெண் ஃபால்கன் உண்ண ஆரம்பிக்கிறது.

29-ம் தேதி மேலும் மூன்று பறவைக் குஞ்சுகள் வெளியே வருகின்றன. இரண்டு பறவைகளும் குஞ்சுகளுக்கு உணவுகளைக் கொண்டுவந்து கொடுக்கின்றன. மே மாதம் 5-ம் தேதி பெண் பறவை குஞ்சுகளைப் பாதுகாக்க, ஆண் பறவை உணவைக் கொண்டு வந்து கொடுக்கிறது. மே மாதம் 15-ம் தேதி வெளியே சென்ற பெண் பறவை மீண்டும் கூடுதிரும்பாமல் இருக்கிறது. இதற்கிடையில் ஆண் பறவை தொடர்ந்து 29 நாள்களுக்கு உணவு கொண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கிறது. இதற்கிடையில் புதிய பெண் ஃபால்கன் பறவை ஒன்று கூட்டிற்கு வருகிறது. ஃபால்கன் குஞ்சுகள் வளர ஆரம்பிக்கின்றன. நான்கு பறவைக் குஞ்சுகளும் உடலிலுள்ள தேவையற்ற இறகுகளைப் பிய்த்து எடுக்கின்றன. ஒரு பறவை இன்னொரு பறவையின் அலகுகளைச் சுத்தம் செய்கின்றன. இதற்கிடையில் புதிதாக வந்து சேர்ந்த பெண் ஃபால்கன் பறவை, குஞ்சுகள் இருக்கும் இடத்தில் மேலும் கீழுமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

ஜூன் மாதம் 9-ம் தேதி காலை நான்கு குஞ்சுகளில் ஒன்று பறக்க முயற்சிசெய்து கூட்டிலிருந்து பறக்கிறது. ஆனால், அன்றைய மாலையே வேறு ஓர் இடத்தில் இறந்து கிடப்பது கண்டறியப்படுகிறது. அடுத்த நாள் ஜூன் மாதம் 10-ம் தேதி ஆண் ஃபால்கன் பறவை மீதம் இருக்கிற மூன்று பறவைக் குஞ்சுகளில் ஒன்றைப் பறக்க வைப்பதற்காகக் கூட்டிலிருந்து தள்ளி விடுகிறது. அதைத் தொடர்ந்து 13-ம் தேதி மீதமிருக்கும் இரண்டு குஞ்சுகளில் ஒன்று பறக்க முயன்று அதுவும் கீழேவிழுந்து காயமடைந்துவிடுகிறது. கடைசியாக இருக்கிற பறவை குஞ்சை, புதிதாக வந்த பெண் ஃபால்கன் பறவை கொன்றுவிடுகிறது. அதனுடைய நோக்கமே குஞ்சுகளை அப்புறப்படுத்திவிட்டு கூட்டை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்கிற திட்டம் தெரிய வருகிறது. பெண் பறவை கூட்டைச் சுத்தம் செய்து அங்கேயே இருக்கிறது. ஜூன் மாதம் 20-ம் தேதி மீண்டும் கூட்டிற்குத் திரும்புகிற ஆண் ஃபால்கன், பெண் பறவையோடு மீண்டும் இணை சேருகிறது. பெண் ஃபால்கன் நினைத்த ஒன்று கடைசியில் நிறைவேறி விடுகிறது. இரண்டு குஞ்சுகள் இறந்துவிட, காயம்பட்ட இரண்டு குஞ்சுகள், பறவை மறுவாழ்வு மையங்களில் பராமரிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகின்றன.

எல்லா உயிரினங்களிலும் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. அதில் மனிதன் விலங்குகள், பறவைகள் என்கிற பாரபட்சமெல்லாம் இல்லவே இல்லை.