Published:Updated:

'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்!' இகுவானாக்களின் சர்வைவல் கதை

'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்!' இகுவானாக்களின் சர்வைவல் கதை
'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்!' இகுவானாக்களின் சர்வைவல் கதை

இப்படியும் ஒரு வாழ்க்கையா என நினைத்து அழுவதா, இல்லை நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என நினைத்து சந்தோசப்படுவதா என்கிற எண்ணம் மனிதனுக்கு இயல்பாகவே வந்தாக வேண்டும். ஏனெனில், இப்படியான கடின சூழ்நிலையில் வாழ்கிற பல உயிரினங்களைத்தான் மனிதன் அழித்துக்கொண்டிருக்கிறான். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ல்லாம் கிடைத்தும் சர்வைவல் ஆகாமல் இறந்துபோன உயிரினங்களையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது. எதுவும் கிடைக்காமல் சர்வைவல் ஆன உயிரினங்களையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது. சர்வைவல் சில உயிரினங்களுக்கு உணவு சம்பந்தமானது. சில உயிரினங்களுக்கு உயிர் சம்பந்தமானது. இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் பலம், பலவீனம் என்கிற இரண்டு விஷயத்தையும் சேர்த்தே படைத்திருக்கிறது. பலத்தை பலவீனமாக மாற்றுவதும், பலவீனத்தை பலமாக மாற்றுவதும் அதனதன் செயல்பாடுகளைப் பொறுத்தது. அதன் அடிப்படையில் இன்றைய சர்வைவல் கடல் இகுவானா பற்றி அலசுகிறது. தமிழில் இதன் பெயர் பேரோந்தி. 

கடல் இகுவானா பல்லி இனத்தைச் சார்ந்தது. பார்வையில் சின்ன டைனோசர்போல இருக்கும் இகுவானா, பிறந்த அடுத்த நொடியில் இருந்தே தப்பிப்பிழைத்து ஓட வேண்டிய நிலைக்கு இயற்கையும் சூழ்நிலையும் தள்ளிவிட்டு விடுகின்றன. இகுவானா குறித்துத் தெரிந்து கொள்வதற்குமுன், அவை எப்படியான சூழ்நிலையில் வசிக்கின்றன என்பது தெரிந்தால்தான் அவற்றின் சர்வைவல் எந்த அளவுக்கு அபாயமானது என்பது தெரியவரும். ஈகுவடார் நாட்டின் கலபோகஸ் தீவுகளை உள்ளடக்கிய தீவுகளில் முக்கியமான தீவு, பெர்னான்டினா `Fernandina island’. இந்தத் தீவில்தான் இகுவானா வசிக்கிறது. வெறும் தீவு என்று கடந்துபோக முடியாத அளவுக்கு இன்னொரு ஆபத்தும் இங்கு இருக்கிறது. La Cumbre என்கிற உயிரோடு இருக்கிற எரிமலை ஒன்று இந்தத் தீவில்தான் இருக்கிறது. 2009-ம் ஆண்டு தொடர்ந்து 20 நாள்கள் எரிமலை குழம்புகளை கக்கியது. தீ குழம்புகள் ஆறுபோல பாய்ந்து கடலில் கலந்தது. உலகிலேயே தான் பயணிக்கிற பாதையில் இருக்கிற எல்லாவற்றையும் கொன்றுவிட்டுப் போகிற ஒரே விஷயம் எரிமலை. இப்போதும், “எப்போது வெடிக்கும்” எனத் தெரியாமல் ஒரு பதற்றத்தில் வைத்திருக்கிற எரிமலை. 

அதன் நிலப்பகுதியான 640 சதுர கிலோ மீட்டர்களும் கருமையான எரிமலைக் குழம்புகளால் சூழப்பட்டிருக்கிறது. இப்படியான இடத்தில் யார் வசிப்பார்கள் என்கிற கேள்விக்கு இயற்கை கொடுத்த பதில்தான் இகுவானா. அதன் பலவீனம் எரிமலை, அதன் பலம் கடல். இகுவானா பார்ப்பதற்கு நம் ஊர் உடும்புபோல தோற்றமளித்தாலும் உண்மையில் அவை உடும்பு அல்ல. நீரிலும் நிலத்திலும் வசிக்கிற ஒரு பல்லி இனம். பல இடங்களில் இவை கடல் வாழ் உயிரினம் (Marine iquvana) என்றே குறிப்பிடப்படுகின்றன. அதனுடைய பலமே ஆழ் கடலில் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதுதான். இவை காற்றை சுவாசிக்கிற இனத்தைச் சேர்ந்தது என்பதால் 30 நிமிடங்களுக்குப் பிறகு, காற்றைச் சுவாசிப்பதற்கு மீண்டும் கரைக்குத் திரும்பிவிடுகின்றன. கடலில் இருக்கும்போது இகுவானாக்களின் இதயத்துடிப்பு பாதியாகக் குறைந்துவிடுகிறது. இதனால் அவை  நீண்டநேரத்துக்கு மேல் கடலுக்குள் இருக்க உதவுகிறது. இகுவானாவின் முக்கிய உணவு கடல் பாசிகள். கடலுக்கு அடியில் பாறைகளில் படிந்துள்ள பாசிகள்தான் அவற்றின் முக்கிய உணவு.

பொதுவாகக் கறுப்பு நிறத்தில் இருக்கிற இகுவானாக்கள் இனப்பெருக்க காலத்தின் பொழுது சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறத்துக்கு மாறுகின்றன. ஒரு வகையில் பச்சோந்தியோடு தொடர்புடையது. இனப்பெருக்க காலத்தில் மற்ற விலங்குகள் எதுவும் அதன் எல்லைக்குள் வந்துவிடாதபடிக்கு ஆண் இகுவானாக்கள் பாதுகாக்கின்றன. இணைசேர்ந்த நான்கு வாரங்களுக்குப் பிறகு, பெண் இகுவானா முட்டைகளை இடுகிறது. கடல்மட்டத்திலிருந்து 1,000 அடி உயரத்தில் இருக்கிற மணல்பகுதிகளில் குழிதோண்டி முட்டையிடுகின்றன. அங்குதான் அவை அடைகாக்கின்றன. இங்கிருந்துதான் அவற்றுக்குப் பிரச்னையும் தொடங்குகிறது. மணலுக்கு அடியில் குழிதோண்டி பெண் முட்டையிட்டு அடைகாக்கும். முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வருகிற சில நாள்களுக்கு முன்பாக அங்கிருந்து கிளம்பிவிடுகின்றன.

மணலுக்கு அடியில் முட்டைகளை உடைத்து வெளியே வருகிற குஞ்சுகளுக்கு மிகப்பெரிய பலப் பரீட்சை இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே வாழ்க்கையை முடித்துக்கொள்கிற அறிய உயிரினம் இகுவானா குஞ்சுகள். ஓர் உயிர் படைக்கப்படுவதே இன்னொரு உயிர், உயிர் வாழ்வதற்குத்தான் என்கிற விதி இகுவானாக்களையும் விட்டுவிடவில்லை. இவற்றின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இன்னொரு உயிரினம் Galapagos racer பாம்புகள். மணலிலிருந்து வெளியே வருகிற குஞ்சுகள் பாம்புகளைக் கடந்து கடற்கரைக்குச் சென்றால் மட்டுமே அவற்றுக்கு சர்வைவல் தொடங்கும். பாம்புகளிடமிருந்து தப்பிக்கும் அந்த 5 நிமிடங்கள்தான் அதற்கு வாழ்வும் சாவும்.

Photo: BBC

நூற்றுக்கணக்கான பாம்புகளைக் கடந்து அவ்வளவு எளிதாக அங்கிருந்து சென்றுவிட முடியாது. குஞ்சுகள் வெளியே வந்ததை அதனுடைய வாசனை, பாம்புகளுக்கு எளிதாகக் காட்டிக்கொடுத்துவிடும். மணல்பரப்பிலிருந்து கடற்கரைக்கு செல்கிற பயணத்தில் முதல் 5 நிமிடம்தான் அவற்றுக்கு முக்கியமானவை. அந்த 5 நிமிடப் பயணத்தை மட்டும் கடந்துவிட்டால் சர்வைவல் எளிதுதான். ஆனால், இயற்கை அப்படியெல்லாம் தப்பிப்போக விட்டுவிடாது. தப்பிப்பது எப்படியென்றே அவை இதற்குப் பிறகுதான் கற்றுக்கொள்ள வேண்டும். இகுவானா குஞ்சுகள் அவ்வளவு எளிதில் பாம்புகளிடம் சரணடைந்துவிடாது. பாம்புக்குப் பார்வை சரியாகத் தெரியாது என்பதால் மற்ற உயிரினங்களின் நடமாட்டத்தை, வாசனை மூலம் உள்வாங்கியே இரையைப் பிடிக்கும். பாம்புகளின் உடலிலுள்ள நுகர் அணுக்கள், இகுவானா குஞ்சுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டே இருக்கும். செய்தி பாம்பின் மூளையை அடைகிற நொடிக்கு முன்பாக இகுவானா குஞ்சுகள் தப்பித்து ஓடியாக வேண்டும். பிழைத்திருப்பதில் பல்வகைகள் இருக்கிறது இது இகுவானா வகை. 

எப்படித் தப்பி ஓடினாலும் பத்தில் ஆறு குஞ்சுகள் பாம்புகளுக்கு இறையாகிவிடுகின்றன. உலகிலேயே பிறந்தவுடன் பாடம் கற்றுக்கொள்கிற ஒரே உயிரினம் இகுவானா குஞ்சுகள்தான். இந்தக் காட்சிகளை 2016-ம் ஆண்டு பிபிசி எர்த் தொலைக்காட்சி பதிவு செய்திருக்கிறது. இளகிய மனம் படைத்த பலரையும் பதற்றத்தில் வைத்திருந்த காட்சிகள் இப்போதும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இதோடு அவற்றின் சர்வைவல் போராட்டம் நின்றுவிடுவதில்லை. இயற்கை இன்னொரு சவாலையும் அவற்றுக்கு வைத்திருக்கிறது. அதன் பெயர் கலாபாக்கோஸ் பருந்து. இவற்றின் முக்கிய இரையே தரையில் வாழும் இகுவானா, கடல் இகுவானா மற்றும் பாம்புகள், போன்றவைதான். மேற்கூறிய இரண்டு உயிரினங்கள்தான் இங்கே வசிக்கின்றன. மூன்று உயிரினங்களுமே வாழ்ந்தாக வேண்டும், தன்னுடைய இனத்தை நிலை நிறுத்தியாக வேண்டும். உலகின் எல்லா மூலைகளிலும் உள்ள உயிரினங்கள் ஒன்று இன்னொன்றுக்கு உணவானால் மட்டுமே சர்வைவல் என்பது சாத்தியம். சில உயிரினங்கள் அதைச் சாத்தியப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் செத்துவிடுகின்றன.

எல்லா ஆபத்துகளையும் கடந்துதான் இகுவானாக்கள் வாழ்ந்தாக வேண்டும். பார்வைக்கு இகுவானா வாழ்க்கை சிறியதாகத் தோன்றலாம், ஆனால், வாழ்க்கை சிறிய விஷமில்லை என்பதை அவை பிறந்தவுடன் கற்றுக்கொள்கின்றன. எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான சர்வைவல் விதியே கற்றுக்கொள்வதுதான். இப்படியும் ஒரு வாழ்க்கையா என நினைத்து அழுவதா, நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என நினைத்துச் சந்தோஷப்படுவதா என்கிற எண்ணம் மனிதனுக்கு இயல்பாகவே வந்தாக வேண்டும். ஏனெனில் இப்படியான கடின சூழ்நிலையில் வாழ்கிற பல உயிரினங்களைத்தான் மனிதன் அழித்துக்கொண்டிருக்கிறான். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு