Published:Updated:

200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!
200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

ஆமைகளின் அந்தப் பொறுமையான நடைக்குப் பின்னால், மிகப்பெரிய சூழலியல் சமநிலையே ஒளிந்துள்ளது. அவை முட்டையிடுவதற்காகக் குழி தோண்டுவதன் மூலமாகத் தன் ஆற்றலில் பாதியை நிலத்துக்குத் தானமளிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தைப் பருவத்தில் ஆமை, முயல் கதையைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. அனைவருடைய ஆர்வத்தையும் தூண்டும் ஒரு விஷயம் ஆமைகளிடம் உண்டென்றால் அது அவற்றின் பொறுமைதான். எந்த அவசரமும் இன்றி சாவகாசமாக வழியிலிருக்கும் புற்களைச் சிறிது சிறிதாக மேய்ந்துகொண்டே அநியாயத்துக்கு மெதுவாகச் செல்லும். அவற்றை நேரம்போவது தெரியாமல் நின்று ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஆமைகளைப் பார்க்கும்போது நாமும் அவற்றைப்போலவே நேரத்தைப் பற்றிய கவலைகளை மறந்துவிடுகிறோம். ஓடுகளுக்குள் மறைந்திருக்கும் அந்த உடலைத் தூக்கிக்கொண்டு மொத்த காட்டையும் அளந்துகொண்டிருக்கும் இவை இல்லையென்றால் உலகம் எப்படியிருக்கும்? 

முதுகெலும்புள்ள தன் உடலை ஓடுகளுக்குள் மறைத்துக்கொண்டிருக்கும் அனைத்துமே ஆமைதான். நிலத்து ஆமை (Tortoise), நன்னீர் ஆமை (Freshwater turtles), கடல் ஆமை (Sea Turtles), உவர்நீர் ஆமை (Terrapines) என்று அவற்றின் வகைகள் மாறுபடலாம். தன் முதுகெலும்பு, உடல் அனைத்தையும் ஒரு பாதுகாப்புக் கவசத்தினுள் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரே உயிரினம் ஆமைதான்.

200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

Spotted Pond Turtle

Photo Courtesy: Anuja Mital

அவற்றின் அந்தப் பொறுமையான நடைக்குப் பின்னால், மிகப்பெரிய சூழலியல் சமநிலையே ஒளிந்துள்ளது. அவை முட்டையிடுவதற்காகக் குழி தோண்டுவதன் மூலமாகத் தன் ஆற்றலில் பாதியை நிலத்துக்குத் தானம் அளிக்கின்றன. நீருக்கும் நிலத்துக்கும் இடையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டேயிருப்பதன் மூலமாக அவை பல சேவைகளைச் செய்கின்றன. கடல் மற்றும் நன்னீரில் வாழும் ஆமைகளே நிலத்துக்கும் நீருக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றன. 

அவை யாருக்கும் எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. அதற்கு மாறாகப் பற்பல நன்மைகளைச் செய்கின்றன. நீர் வாழ் ஆமைகளின் உணவுப் பட்டியலில் இறக்கும் மீன்களும் உள்ளன. அவை மிகச் சிறந்த துப்புரவாளர்கள். அவை இறக்கும் மீன்களைச் சாப்பிட்டு விடுவதால்தான் ஏரி, குளங்கள், ஆறுகள் இன்னமும் நாற்றம் அடிக்காமல் சுத்தமாக இருக்கின்றன. முட்டையிடுவதற்காகக் குழி தோண்டுவதன் மூலமாகப் பல்வகையான பூச்சிகளுக்கு வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பூச்சிகளுக்கு மட்டுமல்ல, முயல்கள், நிலத்தில் குழிதோண்டி வாழும் ஆந்தைகள் என்று சுமார் 350 வகையான உயிரினங்கள் ஆமைகளின் உதவியோடு தமக்கான வாழ்விடத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன.

200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

Brown Roofed Turtle

Photo Courtesy: Anuja Mital

அவை மிகச்சிறந்த தாவரவியலாளர்களும்கூட. அவை வாழும் இடத்தில் மிக நேர்த்தியாக விதைப் பரவல்களைச் செய்கின்றன. ஓர் ஆமை ஒரு செடியைச் சாப்பிட்டுவிட்டு, சுமார் அரை மைல் தூரம் சென்று தன் உடற்கழிவை வெளியேற்றுகின்றது. அந்தக் கழிவில் வெளியேறும் விதைகளின் மூலமாக அங்கும் அந்தத் தாவரம் முளைத்துக் கிளைவிடத் தொடங்கும். கடற்கரைக்கு வந்து முட்டையிடும் கடல் ஆமை, தம் உடல் ஆற்றலில் சுமார் 75 சதவிகிதம் ஆற்றலை நிலத்திலேயே விட்டுச் செல்கின்றது. 

200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

Indian Tent Turtle

Photo Courtesy: Sneha Dharwadkar

இத்தகைய உயிரினம் இந்த உலகிலிருந்து மொத்தமாக அழிந்துவிட்டால், அது மிகப்பெரிய இழப்பாக இருக்கும். 200 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் காலத்திலிருந்து இப்போதுவரை வாழ்ந்துவருகின்றன. பூமியின் சூழலியல் வரலாற்றில் ஆமைகளை எந்தவிதப் பேரழிவுகளாலும் அழிக்க முடியவில்லை. அவை பல்வேறு ஆபத்துகளைக் கடந்து தப்பித்து வாழ்கின்றன. பல்வேறு சிக்கல்களிலிருந்து தப்பிக்க அவை தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், மனித வேட்டையிலிருந்து தப்பிக்க, சாலை விபத்துகளிலிருந்து தப்பிக்கத் தகுந்தவாறு அவற்றால் தகவமைத்துக்கொள்ள முடியவில்லை.  

உலக அளவில் இவற்றின் இருப்பு ஆபத்துக்குள்ளாகி வருகின்றது. ஆமைகளில் பல்வேறு வகைகள் இன்று அழிவின் விளிம்பில் தம் இனத்தின் இருப்பை இந்த உலகில் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கின்றன. கூகுள் வலைதளத்தில் Turtle என்று தேடினால் நமக்குக் கிடைப்பது பெரும்பாலும் கடல் ஆமை வகைகள்தான். மக்கள் மத்தியிலும் நன்னீர் ஆமைகளைவிடக் கடல் ஆமைகளே பெரும்பாலும் தெரியவருகின்றன. ஆனால், இந்தியாவில் 28 வகையான நன்னீர் மற்றும் நிலத்து ஆமை வகைகள் இருக்கின்றன. அதில் 17 வகைகள் சர்வதேச உயிரினங்கள் பாதுகாப்பில் சிவப்புப் பட்டியலில் (IUCN Red List) இருக்கின்றன. அவை அழியும் நிலையிலிருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள். இவற்றைப் பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை. இந்த ஆமைகளின் வாழ்விடம், எங்கெல்லாம் அவை காணப்படுகின்றன, எண்ணிக்கை என்று எந்தவிதமான தரவுமே நம்மிடம் முழுமையாக இல்லை.

காட்டுயிர் ஆர்வலர்கள் பலரிடமே இந்தியாவின் நன்னீர் ஆமை வகைகள் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இல்லை என்பதுதான் நிதர்சனம். அந்த விழிப்புணர்வைக் கொண்டுவரவும் இந்தியாவிலுள்ள நன்னீர் மற்றும் நிலத்தில் வாழும் ஆமைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கவும் இந்திய பல்லுயிரிச்சூழல் பாதுகாப்புக்கான குழுமம் (India Biodiversity portal) புதிய வழிமுறையைக் கையிலெடுத்துள்ளது. இந்தியாவின் நன்னீர் மற்றும் நிலத்து ஆமைகள் (Freshwater turtles and tortoise of India, FTTI) என்ற குழுவை அமைத்து அவர்கள் வழியாக மக்களிடமிருந்தும் காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியிலிருந்தும் நன்னீர் மற்றும் நிலத்து ஆமைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மக்கள் அறிவியல் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். இந்தத் திட்டம் மே 17-ம் தேதி தொடங்கியுள்ளது. மே 23-ம் தேதி உலக ஆமைகள் தினத்தன்று இந்தத் திட்டம் நிறைவுபெறுகிறது. 

200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர்கள் மும்பையைச் சேர்ந்த அனுஜா மிட்டல் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஸ்நேகா தர்வாத்கர் என்ற இரண்டு ஆமை ஆராய்ச்சியாளர்கள். இதுதொடர்பாக ஸ்நேகா தர்வாத்கரிடம் பேசினோம், "கடல், நன்னீர் மற்றும் நிலத்து ஆமைகளில் நடந்துள்ள ஆராய்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் கடல் ஆமைகளில் நடந்துள்ள ஆராய்ச்சிகளில் பாதியளவுகூட மற்றவற்றில் நடக்கவில்லை. அதனால் அவற்றைப் பற்றிய தரவுகளும் நம்மிடம் அவ்வளவாக இல்லை. இந்த நிலை மாறவேண்டுமென்றால் நன்னீர் மற்றும் நிலத்து ஆமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக வேண்டும். அதற்காகவே இதைச் செய்கிறோம். India Biodiversity portal அமைப்பு இதை நடத்த ஒப்புக்கொண்டார்கள். அவர்களின் உதவியோடு இந்தியாவிலிருக்கும் காட்டுயிர் ஒளிப்படக்காரர்கள் அனைவரும் அனுப்பும் ஒளிப்படங்களை வைத்து இந்த ஆமைகளின் வாழ்விடம், எண்ணிக்கை, பரவல் போன்றவற்றைச் சேகரிக்கலாம். இது முழுமையான ஆய்வுக்கு வித்திடாது என்றாலும், இது ஓர் ஆரம்பமாக இருக்கும். இதில் காட்டுயிர் ஒளிப்படக்காரர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் பங்கேற்கலாம். இதில் பங்கெடுப்பவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டுமே. அவர்கள் எடுக்கும் ஆமையின் ஒளிப்படம், அது என்ன வகை, எங்கே பார்த்தார்கள் போன்ற தகவல்களை https://indiabiodiversity.org/group/freshwater_turtles_and_tortoises_of_india/page/13780971 என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும். மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு தெரிகிறது. உலக ஆமைகள் தினமான மே 23-ம் தேதியன்று மேலும் அதிகமான தரவுகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார். 

200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் துயரம்!

மக்கள் மத்தியில் அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு பெருகிக்கொண்டே வருகிறது. அறிவியல் என்பதே மக்கள் மத்தியிலிருந்து வந்ததுதான். ஆனால், கடந்தகால வரலாற்றின் ஒரு பகுதியில் மக்களுக்கும் அறிவியலுக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அந்த இடைவெளி உடைய வேண்டும், மக்கள் அறிவியல் வளர வேண்டும். அதற்கு இதுபோன்ற அறிவியல் முன்னெடுப்புகளில் மக்களின் பங்கெடுப்பு அவசியம். உலக ஆமைகள் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் ஆய்வுகளுக்குப் பயன்படும் பல தரவுகளை ஆய்வாளர்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா! உங்கள் ஊரில் நீங்கள் பார்க்கும் ஆமைகளைப் படமெடுத்து மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றுங்கள்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு