Published:Updated:

'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

இவர்களிடம் 1,000 வாத்துகள் உள்ளன. இத்தனையையும் எப்படி எண்ணுவீர்கள் எனக் கேட்டால், “செட் செட்டாப் பிரிச்சு ரெண்டுரெண்டா எண்ணி முடிச்சிடுவேன். லட்சம் வாத்துகளைக்கூட கொஞ்சநேரத்தில எண்ணிப்புடுவேன்” என்று ஈஸியாகச் சொல்கிறார், பள்ளிக் கணக்கேதும் அவ்வளவாகப் படித்திராத பாண்டியன்.

'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

இவர்களிடம் 1,000 வாத்துகள் உள்ளன. இத்தனையையும் எப்படி எண்ணுவீர்கள் எனக் கேட்டால், “செட் செட்டாப் பிரிச்சு ரெண்டுரெண்டா எண்ணி முடிச்சிடுவேன். லட்சம் வாத்துகளைக்கூட கொஞ்சநேரத்தில எண்ணிப்புடுவேன்” என்று ஈஸியாகச் சொல்கிறார், பள்ளிக் கணக்கேதும் அவ்வளவாகப் படித்திராத பாண்டியன்.

Published:Updated:
'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

துரைநகரின் மத்தியானம் மே மாதச் சுளீர் வெயில், ஆரப்பாளையம் வைகைப்படுகை. தண்ணீர்த்தடத்தின் சாட்சியாகப் படுகையின் இடுக்குகளில் வழியும் கிடைத்தண்ணீர். துர்நாற்றமும் கழிவுக் கசடுகளும் தூர்ந்து கிடைக்கும் நீர்க்கிடை. அதில் மிதந்து சுற்றியபடியே ‘குவாக், குவாக்’ சத்தத்தில் ஈர்க்கும் வாத்துகள். தூரமாய் பார்த்தால், மழைநீர்த்திட்டில் நாம் காகிதம் மடித்து விட்டு விளையாடிய வெள்ளைக் கப்பல்களின் கலர்ஃபுல் உயிரோவியமாகத் தெரிந்தன, அவை.

நீட்டமாக ஒரு கம்பைச் சுழற்றிச் சுழற்றி ஓட்டிக்கொண்டிருந்தார், அந்த வாத்துகளை வளர்த்து வரும் பாண்டியன். “சொந்தமாலாம் வளர்க்கிறது இல்லீங்க. முதலாளிங்க இருக்காங்க. அவங்க கூலிகொடுப்பாங்க. நாங்க இதை வளர்ப்போம். எங்களுக்கும் லாபம் கிடைக்கும். இந்தப் பக்கம் இப்படி ரொம்பக் குடும்பம் இருக்கு” என்கிற பாண்டியன், தனது அப்பா காலத்தின் தொடர்ச்சியாக இந்தத் தொழிலில் இருக்கிறார். பாண்டியனுக்கு வயது 44. மனைவியும் இளம்வயது மகன்கள் இருவரும் உள்ளனர். வாத்து வளர்ப்பில் நிறைய பேர் இப்படி முதலீடு செய்கிறார்கள். பாண்டியனைப் போலவே பலர் அவற்றை வளர்த்துப் பராமரித்து, அந்த முதலீட்டாளர்களிடம் மொத்தக் கூலியையும் லாபங்களின் பங்கினையும் பெறுகின்றனர்.

250 ரூபாய்க்கு ஒரு வாத்து என்ற வீதத்தில் கேரளாவிலிருந்து மொத்தமாக வாத்துகளை வாங்கி வளர்க்கின்றனர். ஒருமாதக் குஞ்சுகள் முதல், வளர்ந்து முட்டையிடத் தொடங்கிய வாத்துகள் வரை ரகம் ரகமாக வெவ்வேறு விலைகளில் அங்கே விற்பனைக்கு உள்ளனவாம். முட்டையிடத் தொடங்கிவிடும் வாத்துகளை அவ்வளவாக நோய் அண்டுவதில்லை. பலவற்றுக்கு நோய்த்தடுப்பு ஊசிகளும் போடப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

பாண்டியனின் மூத்தமகன் பால்பாண்டி, தனியார் டிரைவர். லீவு நாள்களில் அவ்வப்போது தன் தந்தையுடன் வந்து உதவிகள் செய்கிறார். “வாத்து வளர்ப்பு, நல்ல லாபம் தரும். ஆனா, நம்ம ஊருகள்ல ரொம்பச் சிரமம். அதிக வெப்பம் ஒருபக்கம். வறட்சியும், நீர்நிலை அழிப்பும் இந்தத் தொழிலுக்குப் பேராபத்தா அமைஞ்சிருக்கு!” எனப் பதறுகிறார் பால்பாண்டி. வாத்து வளர்ப்புக்குத் தகுந்த சூழல் தமிழகத்தில் இல்லை. வயல்கள் எங்கேனும் அறுப்புவேலை முடித்து தண்ணீர் பாய்ச்சிவிட்டால், அங்கே கொண்டுசென்று வாத்துகளை அதில் விட்டுவிடுவார்களாம். நிலவுகின்ற அபாயங்களைப் பார்க்கும்போது, வயல்களுக்கும் அவற்றுக்குப் பாய்ச்சும் நீருக்கும்கூட ஆபத்து வந்துவிடுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர், இந்தக் குடும்பத்தினர். பாடிமூடிய வண்டியை வாடகைக்கு எடுத்து வாத்துகளை இடம் மாற்றுகிறார்கள்.

வாத்து வளர்ப்பு கேரளத்தின் சாதகமான, சாத்தியமான தொழில் என்பதாலேயே அங்கே இந்தத் தொழில் சூடுபிடிக்கிறதாம். அங்கெல்லாம் இது மிகப்பெரிய பிசினஸ். வாத்து வளர்ப்புக்காகவே பிரத்தியேகமாகக் கேரளத்தின் பல்வேறு இடங்களில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளனராம். பெரிய தடுப்புபோன்ற அமைப்பு உருவாக்கி நன்னீர் நிரப்பி, லட்சம் வாத்துகளை அதில் விட்டுவிடுகின்றனர். நாள் முழுக்கவும் அதிலேயே அவை நீந்திக்கிடக்கின்றன. வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும்போது, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ற வகையில் மொத்தமாக வாத்துகளைக் கொடுத்துவிடுகின்றனர். அவற்றின் முட்டைகளும், வயதானவற்றின் கறிகளும் வாடிக்கையாளர்களுக்குப் பெருத்த லாபம். வாத்துகள் நெல், அரிசி, கம்பு, சோளம், கேப்பை ஆகியவற்றை உண்ணும். ஆனாலும் அதன் வாழ்வாதாரத்தேவை, தண்ணீர்தான். குளம், குட்டை, ஏரியில் இவை அதிகம் வாழுகின்றன. ஆண் வாத்து, ‘சேவல்’. கூட்டத்திலேயே சேவல்கள் பெரியதாகத் தனியாகத் தெரியுமாம். பெண் வாத்துகள் ‘செவலை’.

'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

“எங்க வீட்டில கோழிங்க வளர்க்கும்போது வாத்து முட்டைகளை அடைகாக்கச் செய்தோம். இப்போ கோழிகளை வித்துட்டோம்” என்கிறார் பால்பாண்டி. முட்டைகளையும் கறிகளையும் ஏற்றுமதி செய்தல் ஒரு வகையெனில், முட்டைகளைப் பொரியச் செய்து வாத்துகளின் எண்ணிக்கையைப் பெருக்குதல் இன்னொரு வகை வியாபாரம். வாத்து முட்டைகளைக் கோழி முட்டைகளோடு சேர்த்துவைத்து அடைகாக்கச் செய்கின்றனர். அவை பொரிந்ததும் வாத்துக்குஞ்சுகளையும் தன் குஞ்சுகளாக எண்ணி கோழிகள் வளர்க்கின்றன. வாத்துகள் வளர்வது, கோழிகள் அடுத்து முட்டையிடுவது, இவற்றில் எது முந்துகின்றதோ அந்தநேரத்தில் கோழிகளிடமிருந்து வாத்துகளைப் பிரித்து வாத்துக்கூட்டத்துடன் அவற்றைச் சேர்த்துவிடுகின்றனர்.

“இந்த வாத்துங்க எல்லாமே ஓரளவுதான் வெயில் தாங்கும். இந்தக் கிடைத்தண்ணி, ஆழமா இருக்கிறதால சூடு தெரியலை. அதனால இருக்குதுக. தண்ணி சூடேற ஆரம்பிச்சுட்டா, மேலே ஏறி வந்திடுங்க. இந்தத் தண்ணி ரொம்ப மோசமா இருக்கிறதால குடிக்காதுங்க. நல்ல தண்ணீரைத்தான் இதுங்களுக்குச் சரி. மழை பெய்ஞ்சா நல்லாத் தாங்குங்க” என்கிறார் பாண்டியன். மழை தாங்காத வாத்து இனங்கள் உண்டு. நாட்டு வாத்து, குளத்து வாத்து ஆகியவை உள்ளன. இவை பொரிவதற்கு 28 முதல் 32 நாள்கள் ஆகும். இயந்திரங்களைக்கொண்டு முட்டை பொரியச் செய்து வளர்த்துதரும் வாத்துகளை ‘கரண்ட்டு வாத்து’ என்கின்றனர். முட்டைகளில் இருந்து இவை பொரிந்து வெளிவருவதற்கு 20 முதல் 22 நாள்கள் வரை ஆகும். “வருமானம் தொடர்ந்து குறைஞ்சிட்டே வந்துச்சுன்னா வாத்துகளைக் கேரளாவுக்கே வித்திடுவோம். தகுந்த சூழல் வரும்போது, மறுபடியும் மொத்தமா வாங்கி வளர்க்க ஆரம்பிப்போம். ஆனா, அப்பாவுக்கு அடுத்து நானோ தம்பியோ முன்ன நின்னு இந்தத் தொழிலைக் கையெடுத்து நடத்துற வாய்ப்பு ரொம்பக் கம்மி” என்கிறார் பால்பாண்டி.

'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து!' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்

இவர்களிடம் 1,000 வாத்துகள் உள்ளன. இத்தனையையும் எப்படி எண்ணுவீர்கள் எனக் கேட்டால், “செட் செட்டாப் பிரிச்சு ரெண்டு ரெண்டா எண்ணி முடிச்சிடுவேன். லட்சம் வாத்துகளைக்கூட கொஞ்சநேரத்தில எண்ணிப்புடுவேன்” என்று ஈஸியாகச் சொல்கிறார், பள்ளிக் கணக்கேதும் அவ்வளவாகப் படித்திராத பாண்டியன். வாத்துகளுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. பழக்கப்படுத்திவிட்டால் அதைச் சரியாகச் செய்துவிடும். நீரில் இறங்குவது, நீந்துவது, திசை மாறுவது, கரையேறிடுவது, இரை உண்ணுதல் என ஒரு செய்கையைப் பெரும்பான்மைக் கூட்டமும் மொத்தமாக அப்படியே செய்யும். அடையும் இடத்தைக் குஞ்சுகளாக இருக்கும்போதே பழக்கிவிட்டால், எங்கிருந்தாலும் இடம் வந்து அடைந்துவிடுகின்றன.

நகரின் மொத்தக் கழிவையும் சுமந்து நிற்கும் வைகையின் அந்த அழுக்குத் தண்ணீரிலும் ஆனந்தக் குளியல் போடுகின்றன, வாத்துகள். அவற்றின் ஒற்றை தொனிச் சத்தத்திலும் எதிரொலிக்கத்தான் செய்தது, இனம்புரியாததோர் ஏக்கம்!