Published:Updated:

`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி!' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை

உலகில் 31 வகையான மலைப்பாம்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்த மலைப்பாம்புகள் விலங்குகள் கடத்தல் மூலமாகவே அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கின்றன. இது மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை

`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி!' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை
`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி!' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை

னிதனோ, விலங்கோ... நடக்கிற தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிற எந்த உயிரினமும் தப்பிப்பிழைத்துவிடும். ஆனால், சர்வைவல் விஷயத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், மனிதனிடமிருந்து சில உயிரினங்கள் அவ்வளவு எளிதில் தப்பிவிடுவதில்லை, மனிதன் அவற்றைத் தப்பவிடுவதும் இல்லை. அவற்றில் முக்கியமான ஒன்று மலைப்பாம்பு.

`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி!' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை

உலகில் 31 வகையான மலைப்பாம்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்த மலைப்பாம்புகள், விலங்குகள் கடத்தல் மூலமாகவே அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கின்றன. மற்ற பாம்புகளைப் போல விஷம் இல்லாத பாம்பு என்பதால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பாம்பாக இவை பார்க்கப்படுகின்றன. இதர உயிரினங்களை விட மலைப்பாம்புகளின் தாடை எளிதில் விரியும் தன்மை கொண்டது. இதன் தாடைகள் உடலில் வேறு எந்த எலும்புகளிலும் இணைக்கப்படாததால் எவ்வளவு பெரிய இரையாக இருந்தாலும் விழுங்கிவிடும். அதனால்தான் ஆடுகள், மான்கள் எனப் பெரிய இரையை எளிதில் விழுங்கிவிடுகின்றன. இதன் தாடை எலும்புகள் இணைக்கப்படாததால் மலைப்பாம்பு அதன் உடல் விட்டத்தை விடப் பெரிய இரையைக்கூட விழுங்கமுடியும். மேலும், இரை மலைப்பாம்பின் வாயிலிருந்து தப்பிக்க இயலாதவாறு அதன் வாய் பிடிமானமுள்ளது. மூன்றடுக்குப் பற்களைக் கொண்டுள்ளதால் எளிதில் இரைகளைப் பிடிக்கவும் விழுங்கவும் அவை உதவியாய் இருக்கின்றன.

மலைப்பாம்புகளுக்குக் கால்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு SPURS என்று பெயர். அவ்வளவாக வெளியே தெரியாத அளவிற்குச் சிறிய அளவில் அவை காணப்படுகின்றன. மலைப்பாம்புகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லி இனத்திலிருந்து உருவானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 16 அடி நீளம் வளரக்கூடியது மலைப்பாம்பு. அதிகபட்சமாக 25 அடி நீளமுடைய பாம்புவரை கண்டறியப்பட்டுள்ளது. மலைப்பாம்புகள் இரையைப் பிடித்ததும் அவற்றை நன்கு இறுக்கிப்பிடித்துவிடும். நன்கு இறுக்கி இரையின் ரத்த ஓட்டத்தைத் தடுத்து அவற்றைக் கொன்றுவிடும். அதன்பிறகே இரையை விழுங்கும். பொதுவாக பெரிய இரையை விழுங்குகிற பாம்புகள் சில நாள்களுக்கோ அல்லது சில வாரங்களுக்கோ வேறு எதையும் உணவாக எடுத்துக்கொள்ளாது.

`மனுஷன்தான் எங்களுக்கு முதல் எதிரி!' மலைப்பாம்புகளின் சர்வைவல் கதை

ஒரு மணிநேரத்திற்கு ஒரு மைல் என்கிற விகிதத்தில் அதனுடைய வேகம் இருக்கும். அதிகபட்சமாக 20 இருந்து 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பெண் மலைப்பாம்பு இனப்பெருக்கத்தின்போது 12 இருந்து 36 முட்டைகள் வரை இடுகிறது. தன்னுடைய உடல் வெப்பத்தைப் பயன்படுத்தி அடைகாக்கிறது. முட்டையிலிருந்து குட்டிகள் வெளியே வந்ததும் அவை தனித்தனியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றன. சர்வைவல் என்கிற விஷயத்தில் சில சமயங்களில் மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அக்பர் சலுபிரோ (வயது 25). இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுப் பகுதி. ஒரு மாலை இருட்டும் நேரத்தில், பாமாயில் எடுப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் தன் பனந்தோப்பிற்குக் கிளம்பிப் போகிறார். திடீரென பின்னால் இருந்து வந்த மலைப்பாம்பு அவரை உயிரோடு விழுங்கிவிட்டது. விழுங்கிய மலைப்பாம்பு சம்பவ இடத்திற்குப் பக்கத்தில் படுத்துக் கிடந்திருக்கிறது. அக்பரை காணவில்லை என மொத்த ஊரும் தேட ஆரம்பித்த போது, மலைப்பாம்பு படுத்திருந்த இடத்திற்கு அருகில் அக்பரின் ஒரு காலணி கிடந்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்திருக்கிறார்கள். பிணமாக அக்பர் மீட்கப்பட்டிருக்கிறார். உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை இந்தச் சம்பவம் உருவாக்கியது. மலைப்பாம்புகள் மனிதர்களை விழுங்கிய சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. 2013-ல் கனடாவில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை பக்கத்திலிருந்த ஒரு கடையின் கூண்டிலிருந்து தப்பித்த ராக் பைத்தான் ( Rock Python) வகைப் பாம்பு கொன்று விழுங்கியது. ஃப்ளோரிடாவில் வீட்டில் பர்மீய பாம்பை வளர்த்து வந்தார் ஒருவர். ஓர் இரவு அவரின் குழந்தையையே அந்தப் பாம்பு விழுங்கிவிட்டது. வெனிசுலாவின் ஒரு மிருகக்காட்சி சாலையில் இரவுப்பணியிலிருந்த கண்காணிப்பாளரை விழுங்கியது ஒரு பர்மீய மலைப்பாம்பு.

எல்லா விலங்குகளும் ஏதோ ஒரு வகையில் ஆபத்தில்தான் இருக்கின்றன. மலைப்பாம்புகளும் அந்தப் பட்டியலில் இருக்கின்றன. மலைப்பாம்புகளின் தோல், உடைகளுக்காகவும் அதனுடைய உடல் பாகங்கள் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மலைப்பாம்பின் சில உடல் பாகங்கள் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதால் உலகமெங்கும் அவற்றை வேட்டையாடுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் பித்தப்பையும் ஈரலும் மற்ற பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மலைப்பாம்பினுடைய ரத்தம் சோர்வை நீக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. பல மந்திரவாதிகள் மலைப்பாம்பின் தலையை அவர்களுடைய அடையாளமாகப் பயன்படுத்துகின்றனர். தென் அமெரிக்காவின் ஜூலு இனத்தவர்கள் மலைப்பாம்பின் தோலால் ஆன உடைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதை அதிகாரத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். மலைப்பாம்பை வைத்து தனிச் சந்தைகள் பல இடங்களிலும் சட்ட விரோதமாக நடக்கின்றன. வீடுகளில் செல்லப் பிராணிகளாக மலைப்பாம்புகளை வளர்க்கும் முறை இப்போதும் பல நாடுகளில் இருக்கின்றன. இயற்கையின் மாற்றங்களோடு போராடுவதைவிடவும், இப்போது மலைப்பாம்புகளுக்கு மனிதனின் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பி வாழ்வதுதான் சவாலாக இருக்கிறது. எல்லா விலங்குகளைப் போலவும், இதற்கும் மனிதன்தான் தற்போது முதல் எதிரியாக மாறிக்கொண்டிருக்கிறான்.

Vikatan