Published:Updated:

நில் கவனி செல்!

நில் கவனி செல்!

'''சத்தியமங்கலம் வன விலங்குகள் சரணாலயம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரிய உயிர்கோள பொக்கிஷம்’ என்று சான்றிதழ் அளித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனெஸ்கோ. ஆனால், நமக்குத்தான் அதன் அருமை தெரியவில்லை. வாரம் ஒரு வன விலங்கைக் கொன்றுகொண்டு இருக்கிறோம்...'' ஆதங்கத்துடன் ஆரம்பிக்கிறார், கொங்கு மண்டலத்தில் செயல்படும் 'ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன்.

நில் கவனி செல்!
##~##

கடந்த வாரத்தில் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் காரப்பள்ளம் என்ற இடத்தில் மாலை வேளையில் சாலையைக் கடக்க முயன்ற யானை மீது அரசுப் பேருந்து மோதியதில், அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தது அந்த யானை.  மோதிய வேகத்தில் பஸ் நிலை தடுமாறி, நூலிழையில்  உயிர்த் தப்பித்தார்கள் பயணிகள். சாலையில் இறந்துக்கிடந்த யானையின் அருகில் குழுமிய யானைகள் பல மணி நேரம் பிளிறி, கண்ணீர்விட்டது எங்கும் எழுதப்படாத துயரம்! இதைத் தொடர்ந்துதான் நம்மிடம் பேசினார் காளிதாசன்.

''சத்தியமங்கலம் வன விலங்குகள் சரணாலயம் 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்டது. தமிழகத்தின் மிகப் பெரிய சரணாலயம் இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்பகுதியில் இருக்கும் முதுமலை, பண்டிப்பூர், நாகரஹோலே, வயநாடு போன்ற பகுதிகளையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கோவை, மன்னார்காடு, சைலன்ட்வேலி, கொள்ளேஹால் ஆகிய பரந்த வனப் பகுதிகளையும் இணைக்கும் வனப் பாலம்தான் சத்தியமங்கலம் சரணாலயம்.

முக்கிய உயிரினங்கள் எல்லாமே ஒரே வனப் பகுதியில் வாழ்வதைத்தான் உயிர்ச் சூழல் வளமை என்பார்கள். அதன்படி இங்கு தீவனப் பசுமைப் பரப்பு இருக்கிறது. அதை நம்பி மான்கள் இருக்கின்றன. மான்களை நம்பி புலி, சிறுத்தைகள் இருக்கின்றன. கழுதைப் புலிகளும், பிணந்தின்னி கழுகுகளும் ஊன் உண்ணிகள். ஆனால், வேட்டை ஆடத் தெரியாது. இவை புலிகளையும் சிறுத்தைகளையும் நம்பி இருக்கின்றன. இப்படி மேற்கண்ட அனைத்து உயிரினங்களும் வாழும் பகுதிதான் சத்தியமங்கலம். இவைத் தவிர, இந்த வனப் பகுதியை 800 யானைகள் பயன்படுத்துகின்றன.

நில் கவனி செல்!

ஆனால், வன விலங்குகள் விஷயத்தில் நாம் காட்டும் அக்கறை மிகக் குறைவு. இறந்துபோன அந்தப் பெண் யானைக்கு வேறு போக்கிடம் இல்லை. உணவு தேடியும் தண்ணீர் தேடியும் அது வலசை சென்று ஆகத்தான் வேண்டும். அப்படிச் செல்லும் கானகத்தின் குறுக்கே இருக்கிறது சத்தியமங்கலம் - மைசூர் நெடுஞ்சாலை.  உணவு தேடி செல்கையில்தான் பஸ் மோதி உயிரை விட்டுவிட்டது யானை. இதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஒரு ஜீப் மோதி காட்டு எருமை பலியானது. சில மாதங்கள் முன்பு இதே பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை இறந்தது. வாரந்தோறும் மான்கள் அடிபடுகின்றன. இது மிகப் பெரிய சோகம். ஆனால், யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் கவலை அளிக்கும் செய்தி.

இந்தச் சாலையில் சில மாற்றங்களைச் செய்தாலே அரிய விலங்குகளை நாம் காக்க முடியும். மைசூர் - முதுமலை சாலையில் இப்படித்தான் அடிக்கடி விபத்துகள் நடந்துகொண்டு இருந்தன. இதனால், அந்தச் சாலையில் இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்திலும் அந்தச் சாலையில் செல்ல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அப்படி எதுவும் சத்தியமங்கலம் - மைசூர் நெடுஞ்சாலையில் கட்டுப்பாடுகள் கிடையாது.

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் முக்கியப் பாதை இது. பயணிகள் வாகனங்களும் சரக்கு வாகனங்களும் இந்தப் பாதையை அதிகம் பயன்படுத்துகின்றன. சரக்கு வாகனங்களை ஓசூர் வழியாக மாற்றுப் பாதையில் அனுப்பலாம். சாலையில் வேகத் தடைகளை வைத்து வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும். இதை வேகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் இருக்கும் புதர்களை அப்புறப்படுத்தினால், வன விலங்குகள் வருவதை வாகன ஓட்டிகள் கவனிக்க முடியும். இதை எல்லாம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்...'' என்கிறார் அக்கறையுடன்!

நில் கவனி செல்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

அடுத்த கட்டுரைக்கு