46-வது சென்னை புத்தக் காட்சி நேற்றைய தினம் தொடங்கியது. இந்நிகழ்வில் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை முதன்முறையாக ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு. 30-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதற்கான தனியரங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டு புத்தகக் காட்சியின் அரங்கு ஏற்பாடுகள் குறித்து பதிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.
கண்ணன் சுந்தரம், காலச்சுவடு பதிப்பகம்
"சென்னை புத்தகக் காட்சியைச் சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. வழக்கத்தை விட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள். இப்படியிருக்க, இவ்வருடத்துக்கான காட்சி அரங்குகளை உலகத்தரத்திற்கு நிர்மாணிக்காவிட்டாலும் நல்ல தரத்தில் நிச்சயம் செய்ய முடியும். ஆனால், வழக்கமாய் இருக்கும் தரத்தில் சிறு முன்னேற்றம் கூட இல்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. கட்டுமானம் மிகச் சாதாரணமாக உள்ளது. தரைதளம் மிகவும் மோசம்.

எங்களைப் போன்ற 8 அரங்குகள் உள்ள கடைகளுக்குப் போதிய அளவிலான ஏற்பாடுகள் செய்துதரப்படவில்லை. 4 அரங்கு கடைகளை விடக் கிட்டத்தட்ட 6 மடங்கு எங்களிடம் வசூலிக்கப்படும் நிலையில் இது எப்படி நியாயம்? எங்களிடம் வசூலிக்கப்படும் நிதி, Bapasi நிதி, கூடுதலாகத் தமிழக அரசு கொடுக்கும் நிதி என அனைத்தும் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாதது ஏற்பாட்டாளர்களின் ஆர்வமின்மையையே காட்டுகிறது. புத்தக அரங்குகளுக்கான மின்சார இணைப்பே முதல் நாள் காலைதான் கிடைக்கப்பெற்றது. இவை அனைத்திலும் நிச்சயம் முன்னேற்றம் தேவை."
கலாபன், தமிழ்வெளி பதிப்பகம்
"மாற்றங்கள் என்று பெரிய அளவில் ஏதுமில்லை. கடந்தாண்டு 750-ஆக இருந்த ஸ்டால்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 960-ஆக உயர்ந்திருக்கிறது. இருக்கும் இடமே அனைவர்க்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளதால் நடைபாதைகள் சிறிதளவு சுருக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து கழிப்பறைகள் குறித்துத்தான் அதிக புகார்கள் எப்போதும் எழும். மற்றபடி குறைகள் என்று தனியே சொல்வதற்கு எதுவும் இல்லை."