பாட்டுப் பாட்டி!
##~## |
சென்னை மேற்கு மாம்பலம் ஜானகிராமன் தெருவைக் கடப்பவர்களின் காதுகளில் தேனாகப் பாய்கிறது ஒரு பாட்டியின் குரல். தியாகய்யர் கீர்த்தனைகள் தொடங்கி தியாகராஜ பாகவதர் பாடல்கள் வரை அத்தனையும் அட்சரசுத்தமாகப் பாடுகிறார் 90 வயது தங்கம்மா. ஏரியாவில் எக்கச்சக்க ரசிகர்கள்வைத்து இருக்கும் தங்கம்மா, இன்னும் சில நாட்களில் முதியோர் இல்லம் செல்ல இருக்கிறார் என்பது மேற்கு மாம்பலவாசிகளுக்கு வருத்தமான செய்தி!
''எனக்கு 90 வயசாகுது. அஞ்சாங் கிளாஸ் வரைக்கும் படிச்சு இருக்கேன். 13 வயசுல கல்யாணமாச்சு. பாட்டுப் பாடுவதில் எந்தச் சாதனையும் இல்லை. சாதகம் பண்ணினால் எல்லாமே சாத்தியம்தான்'' என்பவர், தானே இயற்றி மெட்டுப் போட்ட 'அருள் புரிவாய் அம்பா... ஜெகதாம்பா’ என்கிற பாடலை கணீர்க் கட்டைக் குரலில் பாடிக் காட்டுகிறார்.

''டி.வி.எஸ்ல வேலை பார்த்த என் வீட்டுக்காரர், 15 வருஷத்துக்கு முன்னாடி காலமாயிட்டார். எங்களுக்குக் குழந்தைங்க இல்லை. கூடப் பிறந்த அஞ்சு அண்ணன்களும் எப்பவோ போய் சேர்ந்துட்டாங்க. அப்பப்ப அண்ணன் களோட பசங்க வீடுகளுக்குப் போயிட்டு வருவேன். அவங்களுக்கும் வயசாயிடுச்சு. எப்பவும் யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாதுனு நினைப்பேன். அதனால் முதியோர் இல்லத்துக்குப் போயிடலாம்னு இருக்கேன்.'' துளி வருத்தமும் இன்றி பொக்கை வாயைத் திறந்து சிரிக்கிறார். இன்றும்கூட பல பத்திரிகைகளுக்குக் கேள்வி - பதில், துணுக்குகளை எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறாராம் பாட்டி. கடந்த வருடம் ஒரு பத்திரிகை, இவரின் சிறப்புக் கேள்விக்கு

1000 பரிசு அளித்து இருக்கிறது.
பாட்டியின் அண்ணன் மகளான அன்னபூரணி, ''அத்தையோட சுறு சுறுப்பைப் பார்த்து நாங்க அசந்து போவோம். தன் துணியைத் தானே துவைச்சுக்குவாங்க. சமையலில் கூடமாட ஒத்தாசை பண்ணுவாங்க. இதைத் தவிர எம்ப்ராய்டரி, குரோஷா பின்னுவாங்க. பாட்டுப் பாடுவாங்க. ஆர்மோனியம் வாசிப்பாங்க. இப்பவும் பாட்டிக்குப் பார்வை நல்லா இருக்கு. பி.பி, சுகர்னு எதுவும் இல்லை.

அத்தை இங்கே வந்ததில் இருந்து, தெருவில் இருக்கிறவங்க தினமும் இங்கே வந்துடுவாங்க. அத்தையைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பாங்க. 'எங்க பசங்களுக்குப் பாட்டுச் சொல்லித் தர்றீங்களா?’னு பல பேர் கேட்டு இருக்காங்க. அத்தையை எங்க கூடவே வெச்சுக்க ஆசையாத்தான் இருக்கு. 'நீங்களே வசதி இல்லாம இருக்கீங்க. நான் எதுக்குப் பாரமா இருக்கணும்? நான் முதியோர் இல்லத்தில் சேர்ந்துடுறே’னு அடம்பிடிக்குறாங்க. இப்பவே துணிப் பைக்குள் ஏகப்பட்ட தபால் கார்டுகள், இன்லாண்ட் கவர்களை வாங்கிவெச்சுட்டாங்க. ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏகப்பட்ட பாடல்களையும் எழுதிவெச்சு இருக்காங்க'' என்கிறார்.

''நான் எங்க இருக்கேன், எப்படி இருக்கேன்கிறதை அப்பப்ப பேரக் குழந்தைகளுக்குச் சொல்லணும் அதுக்குத்தான் இந்தக் கடுதாசி!'' என்றவரிடம், 'எப்படி இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்க?’ என்றோம்.
''சந்தோஷமா இருக்கோம்ணு நெனச்சாலே நாம ஆரோக்கியமா ஆயிடுவோம். நாம இருக்கும் இடத்தை எப்பவும் கலகலப்பா வெச்சுகிட்டா போதும். நாம நலமா இருப்போம். முதியோர் இல்லத்தில் பாடறதுக்குன்னே நிறைய புதுப் பாட்டுகளை எழுதிவெச்சு இருக்கேன். அங்கே போயும் ரசிகர்களை பிடிச்சிருவேன்!'' - புன்னகைக் கிறார் பாட்டி!
- ரேவதி, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்