என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

கரிய காளியம்மன் கோயில் திடல் ஒரு கலைக் கூடாரம்!

##~##

திரைப்பட இயக்குநர், நடிகர், ஓவியர் என்று பல பரிணாமம் கொண்டவர் பொன் வண்ணன். யதார்த்தமான நடிப்பும் அழுத்த மான பேச்சுமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர். தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைப் பற்றிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள் கிறார்...

 ''மொடக்குறிச்சிங்கிறது பதினெட்டுப்பட்டி கிராமங்களுக்கும் தலைமையிடமாக இருந்த ஊர். மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளை சங்ககாலத்தில் 'பூந்துறைநாடு’னு சொல்வாங்களாம். இந்த ஊரைப் பொறுத்தவரை விவசாயம்தான் பிரதானம். ஊருக்கே பச்சை சொக்காய் போட்டுவிட்ட மாதிரி நெல், கரும்பு, வாழைனு நஞ்சை விவசாயத்தில் செழிச்சுக் கெடக்கும். லேசாத் தூறல் போட்டாலே மண் வாசனை மூக்கைத் துளைக்கும். சின்ன வயசில் வயல் வாய்க்கால்ல மீன் பிடிக்குறது, சேற்றில் ஊர்ந்து போகிற நண்டைப் பிடிக்குறதுனு நேரம் போறதே தெரியாது.

என் ஊர்!

நடவு சீஸன் வந்துட்டாலே ஊரில் இருக்கிற பெண்கள் எல்லாம், நாத்து நடுறதுக்குத் தூக்குப் போசியில் சோத்தைப் போட்டு எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாங்க. சேத்துக்குள்ள கால் நனைச்சு, தெம்மாங்கு பாடிக்கிட்டே அவங்க நாத்து நடுற அழகைப் பார்க்குறது கண்கொள்ளாக் காட்சி. அறுவடையும் இப்படித்தான். ஆனா, அதெல்லாம் பழங்கதை ஆகிப்போச்சு. இன்னிக்கு நிலைமையை நெனைச்சா கண்ணில் தண்ணிதான் வருது. விவசாயம் பாதிக்கும் மேல குறைஞ்சுப் போச்சு. நாத்து

என் ஊர்!

நடறதுக்கும் அறுவடைக்கும் மெஷின் வந்துட்டு. விவசாய பூமியை ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கூறு போட்டுட்டாங்க. விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.

எங்க ஊரில் சுப்புராயக்கவுண்டர்னு ஒருத்தர் இருந்தார். எதைக் கேட்டாலும், இல்லைனு சொல்லாத கொடை வள்ளல். அவர் கொடுத்த இடத்தில்தான் எங்க ஊரில் பள்ளிக்கூடம் கட்டினாங்க. பள்ளியில் படிக்கும் காலத்தில் இவரோட ஈகை குணத்தைக் கேள்விப்பட்டு பிரமிச்சுப் போயிருக்கேன். என்கிட்ட யார் என்ன கேட்டாலும், 'இல்லை’னு சொல்லாம... முடிஞ்ச வரைக்கும் உதவுற பழக்கம் ஏற்பட்டது அவரோட பாதிப்புதான். எங்க ஊர் மக்கள் அவரோட நினைவாக ஊர் முகப்பில் அவரது பெயரில் ஆர்ச் வெச்சிருக்காங்க.

மொடக்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளியில்தான் அஞ்சாம் வகுப்பு வரை படிச்சேன். இன்னிக்கு அந்தப் பள்ளிக்கு வயசு 105. ப்ளஸ் டூ  வரைக்கும் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். என்னை ஒரு கலைஞனாக உருவாக்குனது மொடக்குறிச்சி கரிய காளியம்மன் கோயில் திடல்தான்.

என் ஊர்!

அப்போ எல்லாம் கோயில் திருவிழா வந்துட்டா, இந்தத் திடலில்தான் பாவைக் கூத்து, கட்டபொம்மன் நாடகம் நடக்கும். பெரியார், அண்ணா, சிவாஜி, எம்.ஜி.ஆர்னு பெரிய பெரிய தலைவர்களோட பேச்சை எல்லாம் இந்தத் திடலில் கேட்டு பிரமிச்சுபோய் இருக்கேன். அப்பதான் என் படைப்பாற்றல் அதிகமாச்சு. இதே திடலில்தான் என் முதல் நாடகமும் அரங்கேற்றம் ஆனது. அப்புறம், 'விகடகவி’னு ஒரு கையெழுத்துப் பிரதி ஆரம்பிச்சேன். அதோட அறிமுக விழாவும் அதே திடலில்தான் நடந்தது. இப்படி என் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய கரிய காளியம்மன் கோயில் திடலை, ஒரு கலைக் கூடாராம்னுதான் சொல்லணும்.

என் ஊர்!

அடுத்ததா மொடக்குறிச்சி நூலகம், என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். வகுப்பு அறையைவிட இங்கே செலவிட்ட நேரம்தான் அதிகம். அன்றைக்கே வங்காள மொழிபெயர்ப்பு நூல்களை எல்லாம் தேடிப் பிடிச்சு படிச்சேன். இன்னிக்கு என் ஊர்ல விவசாயம் குறைஞ்சுடுச்சு. ஆனா, அதுக்கு ஈடு செய்யுற வகையில்  தொழில் வளர்ச்சியும் இல்லைங்கிறது வருத்தமான ஒரு விஷயம். ஆனா, அதை எல்லாம் தாண்டி என் ஊர் சீக்கிரமே தமிழக மேப்பில் தவிர்க்க முடியாத இடம் பிடிக்கும்!''

- கி.ச.திலீபன், படம்: பொன்.காசிராஜன்