என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

இவர்கள் களப் போராளிகள்!

இவர்கள் களப் போராளிகள்!

##~##

''தோல் தொழிற்சாலை கழிவுகளால் காவிரியும் காளிங்கராயனும் செத்துக்கிட்டு இருக்கு. காகித ஆலைகளால் பவானி நதியும் பாழாயிருச்சு. ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் செத்து மடிஞ்சுட்டாங்க. இப்படி நாட்டில் நடக்குற பிரச்னைகளை அலசி ஆராய்ஞ்சு அதுக்கு எதிரா குரல் கொடுக்கணும். பாடப் புத்தகத்தை மட்டும் இல்லை... இந்த உலகத்தையும் படிக்கணும்!'' என்று பெரிய வார்த்தைகளில் பாடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பாப்பா பூர்ணிமா!

ஈரோட்டில் இருக்கும் 'குக்கூ குழந்தைகள் படிப்பக’த்தில்தான் அந்தக் காட்சி. இங்கு ஏட்டுப் படிப்பு மட்டும் அல்ல... சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறார்கள். குக்கூ குழந்தைகள் படிப்பகத்தின் பொறுப்பாளர் சரவணனைச் சந்தித்தேன்...

இவர்கள் களப் போராளிகள்!

''சாலை விபத்தில் அடிபட்டு ஒருவர் சாகக் கிடந்தாலும் காதில் ஐ-போன் மாட்டியபடி பல்ஸரில் கடந்து செல்லும் பொறுப்பு இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம். தவறு அவர்களுடையது அல்ல... நம் மீதுதான். நாமும் நம் கல்வி நிறுவனங்களும் ஏட்டுப் படிப்பைத் தாண்டி மனிதநேயத்தையும் சமூகத்தின் மீதான அக்கறையையும் அவர்களுக்குக் கற்றுத் தரவில்லை. அதனால், வர இருக்கும் தலைமுறையாவது அக்கிரமங்களைக் கண்டு கொதித்து எழும் சமூகமாக... இருக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த குக்கூ பள்ளிக்கூடம்.

இவர்கள் களப் போராளிகள்!

இந்த வண்டி வீரன் கோயில் பகுதி மக்கள் அனைவருமே சுமை தூக்கும் தொழிலாளர்கள்தான். பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள். சொல்லப்போனால் இந்தக் குழந்தைகள் அனைவரும் முதல் தலைமுறையாகத்தான் கல்வி கற்கிறார்கள். எங்கள் மாணவர்களுள் பெரும்பாலானவர்கள் 10-ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்து இருக்கிறார்கள். தினமும் காலையில் வகுப்புகள் தொடங்கும் முன்பு அனைத்து குழந்தைகளும் செய்தித் தாள்களை படித்துவிட்டுத்தான் வகுப்புக்குச் செல்ல வேண்டும். மாலை வேளையில் வாரப் பத்திரிகைகளை படிக்க வேண்டும். தினமும் வகுப்பு நேரத்துக்கு இடையே நாட்டு நடப்புகளைப் பற்றி குழு விவாதம் நடக்கும். அங்கே ஆசிரியர்களாகிய நாங்கள் வெறும் பார்வையாளர்கள்தான். மாணவர்கள்தான் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். அவர்களின் சில கருத்துக்கள், 'அட இது நமக்குத் தோணாமப் போச்சே’ என்று எங்களை ஆச்சர்யப்படுத்தும்.

எங்கள் குழந்தைகள் கல்வி கற்பதுடனும் நாட்டு நடப்புகளை அலசுவதுடன் நின்றுகொள்ளவில்லை. அவர்கள் களப் போராளிகள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியபோது, கண்ணீருடன் கறுப்புக் கொடி ஏந்திச் சென்றவர்கள் எங்கள் குழந்தைகள். ஈழத்தின் இறுதிக் கட்டப் போரில் கொத்துக் கொத்தாக நம் இனம் மாண்டபோது, போரை நிறுத்தச் சொல்லி பேரணி நடத்தியவர்கள் எங்கள் குழந்தைகள்.    

இவர்கள் களப் போராளிகள்!

காளிங்கராயன் வாய்க்காலை தோல் தொழிற்சாலையின் கழிவுகள் பாழ்படுத்துவதைக் கண்டித்து, சமீபத்தில் எங்கள் குழந்தைகள் 800 பேர் நடைப்பயணம் சென்றார்கள். நேர்மையாகச் செயல்பட்டு தனது பிள்ளையை அரசுப் பள்ளியில் படிக்கவைத்த கலெக்டர் ஆனந்தகுமார் மாற்றப்பட்டதைக் கண்டித்து, எங்கள் பிள்ளைகள் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். ஒவ்வொரு கல்வி நிலையமும் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை இப்படி வார்த்து எடுத்தால், ஊழல் இல்லாத இந்தியா கைக்கு எட்டும் தூரத்தில்!'' பெருமிதத்தில் விம்முகிறது சரவணனின் குரல்!

-கி.ச.திலீபன்