என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

பட்சி சொன்ன பட்சி ராஜா ஸ்டுடியோ ரகசியம்!

பட்சி சொன்ன பட்சி ராஜா ஸ்டுடியோ ரகசியம்!

##~##

''பழைய பட்சி ராஜா ஸ்டுடியோவில்... அதோ அந்த மரத்துக்கு அடியில் நின்னுதான் எம்.ஜி.ஆர். பாதாம் பால் குடிச்சுட்டு இருந்தார். சும்மா தங்கமாட்டம் தகதகனு மின்னிட்டு இருந்தாரு தலைவரு... அப்போ இந்தா... இந்தச் சுவத்துல ஏறி நின்னு அவருக்குக் கை காட்டிட்டு, அந்தக் கதையை ஒரு வாரம் ஊர் முழுக்கச் சொல்லிகிட்டே திரிஞ்சேன்!'' - புது பெயின்ட் பூசப்பட்ட தூணைத் தடவியபடி மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் அந்தப் பெரியவர்!

'பிளாக் அண்ட் ஒயிட்’ காலத்தில் தமிழ் சினிமா   உலகில் பிரபலமான இருந்த 'பட்சி ராஜா ஸ்டுடியோ’ காலப்போக்கில் திருமண மண்டபமாக மாறிவிட்டது. இப்போது சென்டிமென்ட்டாக, 'சிறுவாணி’ என்கிற படத்துக்கு, அந்த இடத்தில்வைத்து பூஜை போட்டு இருக்கிறார்கள். 'மலைக்கள்ளன்’ படத்தின் பெரும்பகுதி படம் பிடிக்கப்பட்டது இங்குதான்.

பட்சி சொன்ன பட்சி ராஜா ஸ்டுடியோ ரகசியம்!

பழைய பட்சி ராஜா ஸ்டுடி யோவில், மீண்டும் மேக்-அப் அழகிகள், ராட்சஸ லைட்டுகள் எல்லாம் தென்படுவதைப் பார்த்து, அங்கே கூடிய சீனியர் சிட்டிசன் களின் நினைவலைகளில் இருந்து இங்கே கொஞ்சம்...  

''பத்மினி, வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி எல்லாம் இந்த ஸ்டுடி யோவுக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துக் கிட்டு இருக்காங்க. ஷூட்டிங்குக்கு இடையில் எப்போதாவது எங்களை உள்ளே போய் பார்க்க அனுமதிப் பாங்க.

பட்சி சொன்ன பட்சி ராஜா ஸ்டுடியோ ரகசியம்!

ஜிகுஜிகுனு டிரெஸ் போட்டுகிட்டு உலவுற பொண்ணுங்களுக்கு மத்தியில், சரோஜாதேவி மட்டும் பளீர் மேக்-அப்பில் பளிச்சுனு தெரிவாங்க. ஸ்டுடியோவுக்கு உள்ளே நுழையறப்பவே வாசலில் நிறுத்தச் சொல்லி, கார் கண்ணாடியை இறக்கி மக்களைப் பார்த்து கை அசைக்குறது பப்பிம்மா (பத்மினி) ஸ்டைல். ஆனா, வைஜெயந்தி மாலா ரொம்ப ஸ்ட்ரிக்ட். தினமும் படபிடிப்புக்கு வந்தாக்கூட அவங்களை பாக்குறதே அபூர்வமாத்தான் இருக்கும்!'' என்கிறார் அப் பகுதிவாசி முருகேசன்.

இன்னொருவரோ, ''மலைக் கள்ளன்’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்த நேரம், ஒரு சின்னப் பையன் தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்க்கிற ஆர்வத்தில் சுவத்துல ஏறி கீழே விழுந்துட்டான். உடனே பதறிப்போய் ஓடிவந்து அவனை தூக்கிவிட்ட தலைவர், 'தம்பி என்னைப் பார்க்கிற ஆர்வத்தைவிட உன் உடம்பு ரொம்ப முக்கியம்’னு புத்தி சொல்லி அனுப்பினார்!'' என்று நரைமுடி கோதுகிறார்.

பட்சி சொன்ன பட்சி ராஜா ஸ்டுடியோ ரகசியம்!

'சிறுவாணி’ படத்தின் இயக்குநர் ரகுநாத், கோவை மண்ணின் மைந்தர். படத்தின் ஹீரோ சஞ்சய் அறிமுக நாயகன். ஹீரோயின் ஐஸ்வர்யா சில தமிழ்ப் படங்களில் நடித்து இருக்கிறாராம். இயக்குநர் ரகுநாத், ''கோவையும் சேலமும்தாங்க தமிழ் சினிமாவை உருவாக்கிய நகரங்கள். குறிப்பா, பட்சி ராஜா ஸ்டிடுயோவில்தான் நடிகர் திலகம் சிவாஜியோட 'பாசமலர்’, 'இரும்புத் திரை’ படங்களைப் படம் பிடிச்சாங்க. இங்கே நடந்த கடைசி ஷூட்டிங், 'நான் பெற்ற செல்வம்’. அதுவும் சிவாஜி கணேசன் படம்தான். பட்சி ராஜா ஸ்டுடியோவில் பூஜை போட்டு படத்தை எடுத்தா, படம் செம ஹிட் ஆகும்னு எனக்குள்ள ஒரு பட்சி சொன்னதுங்க. அதான் என் முதல் படத்துக்கு இங்கே பூஜை போட்டு சில காட்சிகளையும் எடுத்தேங்க.  காதல் ப்ளஸ் த்ரில்லர் கலந்த கதைங்க. அதே சமயம் படத்தில் காமெடியும் நிறைய இருக்கும். அண்ணனுங்க பாண்டு, நெல்லை சிவா, பெஞ்சமின், முத்துக்காளைனு  ஒரு காமெடிப் பட்டாளமே நடிச்சு இருக்காங்க. ஷூட்டிங் பூராவும் கோவை, நீலகிரி ஏரியாவுலதாங்க. சும்மாப் பிச்சு உதறப் போறோம்ங்க!'' உற்சாகமும் பவ்யமும் கலந்துகட்டி ஒலிக்கிறது ரகுநாத்தின் குரலில்!                                                  

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்