என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

கூரை வீடும் சிம்னி விளக்கும்!

##~##

திருவட்டாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் போராளி யுமான லீமாரோஸ், தன் ஊர் 'மேல்பாலை’ பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்...

 ''தமிழக, கேரள எல்லையோரப் பகுதியான  குழித்துறைக்குப் பக்கத்தில் இருக்குது மேல்பாலை. தேவிக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் அதிகம். ஆனாலும் அப்பவே ஊரில் கத்தோலிக்க சபையின் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இருந்துச்சு. நான் சின்னப் பிள்ளையா இருந்த போது எங்க ஊரில் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க

என் ஊர்!

மாட்டாங்க. அந்த அளவுக்கு எல்லா வீட்லயும் வறுமை. அஞ்சாம் கிளாஸ் முடிச்சதுமே முந்திரி ஆலை வேலைக்கு அனுப்பிடுவாங்க. நான் பகுதி நேரமா வேலைக்குப் போய் தொடர்ந்து படிச்சேன். கூரை வீட்ல சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் படிக்கணும்.

ஊரைச் சுற்றி நிறைய ரப்பர் மரங்கள் இருக்கும். ஆம்பளைகளுக்கு 'ரப்பர்பால்’ வெட்டுகிற வேலை தான் பிரதானம். அப்பாவும் அந்த வேலைதான் பார்த்தாரு. அம்மா காய்கறிகளைச் சந்தையில் இருந்து வாங்கி, வீதி வீதியாக் கொண்டுபோய் விப்பாங்க. சின்ன வயசில் நான் வாழ்ந்த அந்த வாழ்க்கைதான் எனக்கு எளிமையைக் கத்துக் கொடுத்தது. 'மேல்பாலை’யோட முக்கியமான அடையாளம்... அந்திக்கடை சந்தை. அங்கே காய்கறியில் இருந்து மீன் வரை எல்லாமே கிடைக்கும். ஒரு தடவை நானும் என் தோழியும் சந்தைக்கு மீன் வாங்கப் போயிருந் தோம். நல்ல மழை பெய்துட்டு இருந்தது. அப்போ விழுந்த இடியில் மீன் வித்த பாட்டி இறந்துட்டாங்க. இது என்னை அப்போ ரொம்பப் பாதிச்ச சம்பவம். நான் ஒன்பதாம் கிளாஸ் படிச்சப்ப, எங்க ஊரு சர்ச்சில் 'இளம் கிறிஸ்துவ மாணவர் இயக்கம்’னு ஓர் அமைப்பு தொடங்குனாங்க. அதில் வாரா வாரம் ஒவ்வொரு தலைப்பில் பேச்சாளர்கள் பேசுவாங்க. எங்க ஊரில்  நூலகம் இல்லாத குறையைத் தீர்த்துவெச்சது இந்த இயக்கம்தான். பின்னாளில் நூலகம் வந்தப்ப, நான் படிச்ச ருஷ்யக் கதைகளும், 'தாய்’ என்ற புத்தகமும் எனக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியது. வறுமையும், கொள்கையும் நிறைஞ்ச வாழ்க்கை. படிக்கும்போதே தோசைக்கு மாவு அரைச்சு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் வித்து காசு வாங்கி  ஃபீஸ் கட்டினேன். பி.எஸ்சி, பி.எட் முடிச்சு கணக்கு டீச்சர் ஆனாலும் கம்யூனிச ஈர்ப் பால் கட்சியின் முழுநேர ஊழியரா கிட்டேன்.

என் ஊர்!

எங்க ஊரு மக்களுக்குப் பொழுதுபோக்குனு எந்த விஷயமும் கிடையாது.எல்லாருமே உழைப்பாளிங்க. கஷ்டப்பட்டு உழைப்பாங்க. அசந்து தூங்குவாங்க. இதைத் தாண்டி எங்க ஊர் மக்களைச் சந்தோஷப்படுத்துறது புனித ஆரோபன அன்னை ஆலயத் திருவிழாதான். ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசம் நடக்கும் இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆர்க்கெஸ்ட்ரா, நாடகம்னு களைகட்டும். எங்க ஊரில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் 'மலையடி’ங்கிற குகைக் கோயில் இருக்கு. கரடு, முரடான பாதை அது. அதைப் பார்க்க கால் வலிக்க வலிக்க நடப்போம். நான் எங்க ஏரியா பஞ்சாயத்து யூனியன் சேர்மன் ஆனதும், அங்கே போக பாதை போட்டுக் கொடுத்தேன்.

என் ஊர்!

கல்லூரிப் படிப்பு முடிஞ்ச நேரத்தில், எங்க ஊர் பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து ஒரு தர்ணா நடத்துனாங்க. அதில் கலந்துகிட்டவங்களில் நான் மட்டும்தான் பெண். 'பொம்பளப் பிள்ளை இப்படி கொடி பிடிச்சுட்டு நிக்குதே’னு அதிசயமாப் பேசிக்கிட்டாங்க. போன தடவை எம்.எல்.ஏ-வா ஜெயிச்சப்பகூட 'சம்பாதிக்கத் தெரியாத மனுஷி  இவ... ஜெயிச்சு என்ன பண்ணப் போறாளோ’னு வெள்ளந்தியாக் கேட்டாங்க. இந்த வெள்ளந்தி மனுஷங்கதான் எங்க ஊரோட பலம். என் வாழ்வில் மறக்க முடியாத, மறக்கவும் கூடாத மனிதர்கள் நிறைந்து இருக்கும் ஊர் இது!''

-என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்