சக்தி வாழ்க்கையை மாற்றும் புத்தகம்
‘ரொம்ப நாளாக ஒரு காரை வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். திடீரென்று, அந்த கார் உங்களைக் கடந்து செல்லும்போது, பாசிட்டிவாக, ஆர்வமாக, அன்பாக உணர்ந்தால்... சீக்கிரத்திலேயே அந்த காரை நீங்கள் வாங்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். மாறாக, காரைப் பார்த்ததும், பொறாமையாகவோ, எரிச்சலாகவோ உணர்ந்தால்... அந்த கார் கனவில் இருந்து உங்களை நீங்களே விலக்கிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்’ - இப்படி சுவாரஸ்யமான சொற்களில் வாழ்க்கையைப் பாசிட்டிவாக மாற்றச் சொல்லித்தருகிறது ‘சக்தி்’.

உங்களிடம் ஆற்றல் அதிகமாக உள்ளது, அணுசக்தியைவிட வலிமையான சக்தி். அதுதான் பிரபஞ்சத்தின் பெரிய சக்தி. அதன் பெயர் ‘அன்பு’ என்று ஆன்மிக உரைகளில் கேட்டிருப்போம். அது அறிவியல் உண்மை என்கிறார் புத்தக ஆசிரியர் ரோன்டா பைர்ன். இவர் எழுதிய, ‘தி சீக்ரெட்’ (THE SECRET) புத்தகம்தான் இப்போது தமிழில் ‘சக்தி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
அன்பை எப்படி வெளிப்படுத்துவது, அதன் சக்தியை எப்படிக் கையாளுவது, அது எப்படி நம் வாழ்வின் போக்கை மாற்றும் என்று முற்றிலும் புதிய கோணத்தில் பேசுகிறது இந்த புத்தகம். 46 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த புத்தகம், தங்கள் வாழ்க்கையையே மாற்றிய பொக்கிஷம் என்கிறார்கள் வாசகர்கள்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படும் நேர்மறையான எண்ணங்கள் அன்பாலும், எதிர்மறையான எண்ணங்கள் அன்பின் பற்றாக்குறையாலும் தோன்றுபவை. இந்த எண்ணங்கள்தான் செயல் ஆகின்றன. இதுவே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி. வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அனைவரும் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே கொண்டிருக்கின்றனர்.
ஒரு நோய் வந்துவிடுமோ என பயந்துகொண்டிருந்தால், பல வழிகளில் தொடர்ந்து அதுபற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுவே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி. இந்த ஈர்ப்பு விதியைப் பாசிட்டிவாகப் பயன்படுத்தி, வாழ்க்கையைப் பாசிட்டிவாக மாற்றிக்கொள்வதன் ரகசியத்தை... நமக்குத் தேவையானவற்றை நம்மை நோக்கி ஈர்ப்பதன் ரகசியத்தை, சுவைபட சொல்்கிறார் ஆசிரியர். எத்தகைய மன உளைச்சலில் இருப்பவர்களும், இந்த புத்தகத்தை ஒருமுறை படித்தால்... புத்துணர்வு நிச்சயம்.
தி சீக்ரெட் - ரோன்டா பைர்ன், தமிழில்: சக்தி, மொழிபெயர்ப்பு: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் விலை: ரூ.395/-