என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

கண்ணன்களின் நடுவே ஒரு அனுமார்!

கண்ணன்களின் நடுவே ஒரு அனுமார்!

##~##

திண்டுக்கல் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி கிருஷ்ணன் கோயிலில், வருடா வருடம் கிருஷ்ண ஜெயந்தி அன்று நடக்கும் உறியடித் திருவிழா, ஏரியாவில் கலகலப்பு சேர்க்கும். இந்த வருடம் முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் அரங்கேறியது உறியடி.  

  இரவு 7 மணிக்கு வெடி முழக்கங்களுக்கு இடையே அலங்கரிக்கப்பட்ட கண்ணன் சிலை, ரதத்தில் உலா வர, முன்னால் 'கண்ணனா’க அலங்காரம் செய்த சிலர் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்த உறிகளை அடித்துக் கொண்டே வந்தனர்.

தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்பட்ட 'ப’ வடிவிலான அமைப்பின் நடுவே உறி தொங்க விடப்பட்டு இருக்கும். அதை மூன்றுமுறை அடிக்கவேண்டும். உறியை அடிக்கவிடாமல் ஒருவர் கயிறு மூலம் உறியை ஏற்றி இறக்கி போக்குக் காட்டிக் கொண்டு இருப்பார். அதோடு இருபுறமும் இருந்து உறி அடிப்பவர்கள் மீது தண்ணீரையும் வாரி இறைத்துக்கொண்டே இருப்பார்கள்.  நள்ளிரவு வரை இந்த விளையாட்டு நடக்கும்.  

கண்ணன்களின் நடுவே ஒரு அனுமார்!

கிருஷ்ணன் கோயில் அருகேயே கட்டப்பட்டு இருந்த முதல் உறியை கால் மணி நேரத்துக்குள் அடித்துவிட்டார் 'முதல் கண்ணன்’ சிவா. காளியம்மன் கோயில் அருகே கட்டப்பட்டு இருந்த இரண்டாம் உறியை வெகுநேரமாக கண்ணன் வேடமிட்டு இருந்தவரால் அடிக்க முடியவில்லை. இடையில் உறி மேலே கயிற்றோடு சிக்கிக்கொள்ள, கூடி இருந்தவர்கள் அதை எடுக்க முயற்சி செய்துகொண்டு இருந்தனர். அதற்குள் வீரம் வந்த 'கண்ணன்’ வேகமாகக் கம்பில் ஏறி உறியை அவிழ்க்க முயல, கம்பு முறிந்து 'தொப்’பென்று விழுந்துவிட்டார். 'கண்ணன் விழுந்துட்டார்டோய்!’ என்று அனைவரும் சிரிக்க, 'கண்ணன்’ முகத்தில் வெட்க வழிசல். பிறகு, போனால் போகிறது என்று அவரை உறியை அடிக்க விட்டனர்.  

கண்ணன்களின் நடுவே ஒரு அனுமார்!

விளையாட்டாக நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும், இரு புறமும் இருந்து தண்ணீர் ஊற்றுபவர்கள் உறியை அடிக்க விட்டு விடக்கூடாது என்று தீவிரத்தோடு தண்ணீரை ஊற்றி உறி அடிக்கும் கண்ணன்களைக் கலங்கடித்து விட்டார்கள்.  

ஊர்வலத்தோடு ஆங்காங்கே சந்து முக்குகளில் நிறுத்தி 'சுப்ரமணியபுரம்’ சினிமா ஸ்டைலில் தப்படித்துக்கொண்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஏரியா ஃபிகர்களுக்கு லுக் விட்டு கரெக்ட் செய்துகொண்டு இருந்தார்கள்.

கூட்டத்தில் அனைவரையும் கவர்ந்தவர் அவ்வப்போது குத்தாட்டம் ஆடிய, அனுமார் வேடம் போட்ட பிரபு என்பவர்தான். இவர் இந்த விழாவுக்காகப் பல ஆண்டுகளாக அனுமார் வேடமிட்டு வருகிறாராம். அவ்வப்போது ரிலாக்ஸாகத் தலையை மட்டும் கழற்றிக் கையில்வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார் அனுமார்!

- ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்