என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

வேட்டியை இறுக்கிக் கட்டு!

மதுரையில் வித்தியாசப் பள்ளி

##~##

'மக்கள் வணக்கம்’ செய்தி வாசிப்பாளர்களைப் போல இருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் மாணவர்கள். டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டை! இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.

 மாணவர்கள் சாலையில் அணி அணியாக  நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத்  தோன்றுகிறது. அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது. கதர்  வேட்டிதான். வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

வேட்டியை இறுக்கிக் கட்டு!

பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும், ஆசிரியர்களை 'ஐயா’ என்றும் உறவு  சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள். தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.

''காந்தி நிகேதன் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் ஒரு மேல்நிலைப் பள்ளி, ஒரு தொடக்கப் பள்ளி, டாக்டர் குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன. மேல்நிலைப் பள்ளியில் 1,800 மாணவ-மாணவிகளும், தொடக்கப் பள்ளியில் 950 பேரும் படிக்கிறார்கள். இது காந்திய வழியில் நடைபெறும் கல்வி நிறுவனம். ஆகவே, காந்தியத்தைப் போதிக்கும் வகையில் மாணவர்களுக்கு வேட்டி, சட்டையை சீருடையாகவைத்து இருக்கிறோம். 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள். சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள். திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.  புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.

ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை. காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள். பொதுத் தேர்வில் பங்கு ஏற்கும் மாணவர்கள் தங்களது பெற்றோரைப் பள்ளிக்கே அழைத்து வந்து பாத பூஜை செய்யும் வழக்கமும் இங்கே உண்டு.

வேட்டியை இறுக்கிக் கட்டு!

மற்ற பள்ளிகளில் எல்லாம்  கைத்தொழில் பயிற்சி வழக்கொழிந்துவிட்டது. இருந்தாலும் இன்னமும் விடாமல் இங்கே கற்றுக் கொடுக்கிறோம். கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் மூலம் காலணி - தோல்பொருள் தயாரித்தல், டெய்லரிங்-எம்பிராய்டரி பயிற்சி, மோட்டார் வைண்டிங், டுவீலர் மெக்கானிசம், மட்பாண்டம், சோப்பு, ஊறுகாய், மண்புழு உரம் தயாரித்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளை வருடம் முழுவதும் நடத்தி வருகிறது இந் நிறுவனம்!'' என்கிறார், குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் முதல்வர் பீமராஜ்.

வேட்டி சட்டையில் நடந்து வரும் மாணவர்களை ஓரங்கட்டி, 'தம்பிகளா உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கு இந்த வேட்டி சட்டை பிடிச்சிருக்கா?' என்று கேட்டால், ''அண்ணே, எங்க பள்ளிக்கூடத்தோட பேரைச் சொன்னாலே, தனி மரியாதை கொடுப்பாங்கண்ணே. லீவு

வேட்டியை இறுக்கிக் கட்டு!

நாள்ல கிரிக்கெட் பேட்டோட பார்க்கும்போது திட்டுறவங்ககூட, இந்த யூனிஃபார்ம்ல பள்ளிக்கூடம் போகும்போது மரியாதையாப் பார்க்குறாங்க'' என்கிறார் ராம்குமார்.

''அவன் பீலாவுடுறாண்ணே. வேட்டியை தூக்கிக்கிட்டோ, மடிச்சுக் கட்டிக்கிட்டோ வரக்கூடாதுனு சொல்றாங்கண்ணே. பஸ் படிக்கட்டுல தொங்குறப்பவும், தேங்கிக்கிடக்கிற தண்ணியைத் தாண்டுறப்பவும்கூட வேட்டியை இறக்கிக்கட்டச் சொன்னா எப்படிண்ணே!'' என்கிறான் இன்னொரு மாணவன்!

அவரவர் கஷ்டம் அவரவருக்கு!

- கே.கே.மகேஷ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்