என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

இப்படித்தான் இருக்க வேணும் மாப்பிள்ளே!

ஐ லேடீஸ் லேடீஸ் கலாட்டா...

##~##

'உங்கள் வருங்காலக் கணவர்/காதலர் எப்படி இருக்க வேண்டும்?’ -இப்படி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியோடு, காரைக்கால் பாரதியார் பொறியியல் கல்லூரி மாணவிகளை அணுகினோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்கள்... ஆண்களின் கவனத்துக்கு!

 கேள்வியைக் கேட்டதுமே வெட்கத்தில் கால் விரல்களால் அனைவரும் கோலம் போட, ''போதும்டி இதுக்கு மேல போர் போட்டாலும் நம்ம காலேஜ்ல தண்ணி வராது!'' என்று கலாய்த்தார் வான்மதி. ''இப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி? யாராவது ஆரம்பிங்க'' என்று 'சினிமா பஞ்சாயத்து’ பாணியில் டயலாக் விட்ட புவனா, தானே ஆரம்பித்தார். ''எனக்கு லவ் ஃபெயிலியர் ஆன ஆள்தாம்பா வேணும். அப்பதான் காதலோட ஆழம் அவனுக்குத் தெரியும். கலர் கொஞ்சம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை!'' என்று சொல்ல, ''எப்படி வடிவேல் மாதிரி சும்மா தகதகனு மின்னினா பரவாயில்லையா?'' என்ற கலைவாணியின் கமென்ட்டுக்கு புவனாவின் முகம் சிவந்தது வெட்கத்தில் அல்ல... கோபத்தில்!

இப்படித்தான் இருக்க வேணும் மாப்பிள்ளே!

  ''கல்யாணத்துக்கு முன்னாடி தண்ணி, தம்முனு இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் எந்தப் பழக்கமும் இருக்கக் கூடாது. கூட்டுக் குடும்பமாதான் இருக்கணும். கொஞ்சம் டிரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கனும். முக்கியமா பல்சர் பைக் வேணும்!'' என்று பவானி விண்ணப்பத் தகுதிகளை சகட்டுமேனிக்கு அடுக்க, ''இறகைப் போலே அலைகிறேனே...'' என்று கோரஸ் பாடின குயில்கள். ''சாதி, மதம் எதுவும் பிரச்னை இல்லை. பார்க்க லட்சணமா இருக்கணும்!'' என்றார் செல்வி.

எல்லோரையும் கலாய்த்துக்கொண்டு இருந்த கலைவாணி,  ''நல்லா மேன்லியா,  முரட்டுத்தனமா இருக்கணும். அளவா தண்ணி அடிச்சுக்கலாம். ஆனா, சிகரெட் கூடாது (பார்றா!). கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்கலாம். ஆனா, அவங்ககூட இருக்கிறப்பவும் என்னையே நினைக்கணும் (மறுபடியும் பார்றா!). காதுல கடுக்கன் போட்டு இருக்கணும். ஆர்யா சாயல்ல இருந்தா சூப்பர்!'' என்று கலைவாணி முடிக்க, ''அகோரி ஆர்யா மாதிரி இருந்தா பரவாயில்லையா?'' என்று புவனா பழிதீர்த்தார்.

இப்படித்தான் இருக்க வேணும் மாப்பிள்ளே!

''என் ஹஸ்பெண்ட் கண்டிப்பா ஃபாரின் ரிட்டர்னா, பந்தவா இருக்கணும். அப்பதானே நான் ஃபாரின் போக முடியும்! (பாரேன், இந்தப் புள்ளைக்குள்ள ஏதோ இருக்கு) மாசத்துக்கு ஒரு தடவை தண்ணி அடிக்கலாம். யூஸ் பண்ற பைக் ரீ-மாடல் பண்ணின பைக்கா இருக்கணும்!'' என்று கண்டிஷன்களை அடுக்கினார் பிருந்தா. அடுத்து கோதாவில் குதித்த அனிதா, ''நல்லவனா இருக்கணும். கண்டிப்பா நோ ஸ்மோக்கிங், நோ ட்ரிங்கிங். எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது!'' என்று சொல்ல அதற்கு, ''அப்ப அக்கா கல்யாணம் ஆகாம ஒளவையார் மாதிரியே இருப்பாங்க. ஞானப் பழத்தைப் பிழிந்து....'' என்று ரகளை செய்தார் பிருந்தா.

''நான் மத்தப் பசங்ககூட பேசும்போது, என்னைச் சந்தேகப்படக் கூடாது. காதலைப் புரபோஸ் பண்ணும்போது நேருக்கு நேரா முகத்தைப் பார்த்து தில்லா சொல்லணும்!'' என்று கண்களில் கனவோடு சொன்னார் அனிதா. ''சான்ஸே இல்லைடி... உன் முகத்தை நேராப் பார்த்துட்டா அப்புறம் எப்படி அவன் காதலிப்பான்?'' என்று கனவு முட்டையில் நச்சென்று ஓட்டை போட் டார் வான்மதி.

''ஏன்டி கலாய்க்கிறே! சரி நான் சொல்றேன். என் ஆள் என் உயரம் இருந்தாப் போதும். உண்மையா இருக்கணும். ஓபனா பேசணும். எந்த விஷயத்திலும் தெளிவான முடிவு எடுக்கத் தெரிஞ்சிருக்கணும். வெட்டி பந்தா, ஓவர் ஸீன் போடக் கூடாது. கண்டிப்பா அடுத்தவங்களுக்கு உதவுற மனப்பான்மை இருக்கணும். முக்கியமாப் பாடவும் ஆடவும் தெரியணும்!'' என்று ஒரு தமிழ் சினிமா ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளையும் சொல்லி முடித்தார் ஜெயா. ''என்னைவிட கலர் குறைவா இருக்கணும். ஆனா, கண்டிப்பா என்னைவிட உயரமா இருக்கணும். புருவம் அடர்த்தியா இருக்கணும்!'' - இவை வான்மதியின் எதிர்பார்ப்புகள்.

''ஆமா, எப்போ மாப்பிள்ளை பார்க்கப் போவோம்?'' என்று கோரஸ் கொஸ்டீன் எழுப்ப, 'விடு ஜூட்’ என்று நாம் எஸ்கேப்!

-நா.இள.அறவாழி,  மா.சங்கீதா, படங்கள்:ஜெ.முருகன்