என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

பேரறிவாளன் என் பக்கத்து ஊர்க்காரர்! திருப்பத்தூர் நினைவுகள்

##~##

'' 'திருப்பத்தூர்’ என்றாலே 'ஜோலார்பேட்டை திருப்பத்தூர்’ என்று சேர்த்து சொல்ல வேண்டிய தேவை, சென்னைக்கு வந்த பின்னர்தான் எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால் சிவகங்கை திருப்பத்தூரைப் பற்றி 14 வயது வரை எனக்குத் தெரியவே தெரியாது!'' என்று தன் ஊர் பற்றிய நினைவுகளைச் சொல்லத் தொடங்குகிறார் வழக்கறிஞர் அஜிதா.

 ''தற்போது 'மரண தண்டனை மாண்டொழியட்டும்’ என்ற போராட்டத்தின் காரணியாகத் திகழும் பேரறிவாளனின் ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள ஊர்தான் திருப்பத்தூர். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்த ஒரு வீட்டில் இருந்தோம். பின்னர் சாம (கவுண்டர்) நகர் முதல் தெருவுக்கு வீடு மாறியது. இந்தத் தெருவின் கோடியில் பெரிய ஒய்.எம்.சி.ஏ. இருக்கும். அதனுடைய ஒரு சுற்றுச் சுவருக்குப் பின்னால் திருப்பத்தூர் ரயில் நிலையமும், ஜோலார் பேட்டையை நோக்கிச் செல்லும் தண்டவாளமும் இருக்கும். எனவே என் தெருவில் ஓடிச் சென்று, நின்றால் பள்ளத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ரயில் தண்டவாளங்கள் தெரியும்.

என் ஊர்!

ரயில் தண்டவாளத்தில் 5 பைசா, 10 பைசா நாணயங்களை வைப்போம். ரயில் போன பின் தண்டவாளத்தில் காசைத் தேடி எடுப்பது அப்போது விருப்பமான விளையாட்டு. அந்தக் காசு காந்தமாக மாறிவிடும் என்பது எங்களின் அப்போதைய மூடநம்பிக்கை.

என் ஊர்!

1979-80களில் வீட்டுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் சதா வந்த வண்ணம் இருப்பார்கள். அண்ணா, மாமா, சித்தப்பா என்ற உறவுகளுக்கு மேலாகத் 'தோழர்’ என்ற உறவில் வந்து தங்கி, வாழ்ந்து, வளர்த்தெடுத்த உறவுகள் ஏராளம். திருப்பத் தூரில் இருந்து ஆசிரியர் நகருக்கு வாரக் கடைசியில் என் பெரியப்பா வீட்டுக்கு என் சகோதரிகளுடன் நடந்துசெல்வது பெரிய அனுபவம். என் சகோதரிகள் இருவர் 'ஜன கண மன அதிநாயக’ என்னும் தேசிய கீதம் இசைக்கும்போது 'ஜனங்களில் மனங்களில் பசி, பஞ்சம், பட்டினி பாருங்கள் இதுதான் இந்தியா’ என்று பாடி மாட்டிக்கொண்ட அனுபவ மும் உண்டு.

மக்கள் உரிமைக் கழகம் என்ற அமைப் பில் மாநிலத் தலைவராக அப்பா பி.வி.பக்தவச்சலம் இருந்த சமயம், ஊரின் பிற பகுதிகள் பொதுக் கூட்டங்கள் நடந்த வகையில் பரிச்சயம். தர்மராஜா கோயில் தெரு, சந்தை மைதானம் என்று ஏராளமான தெருக்களில் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

என் ஊர்!

'மோதல் கொலைகள்’ என்ற பெயரில், பெரும்பாலும் விவசாயக் குடும்பங் களையும், தாழ்த்தப்பட்ட கூலி விவசாயக் குடும்பங்களையும் சார்ந்த இளைஞர்கள் திருப்பத்தூரைச் சுற்றி உள்ள கிராமம் மற்றும் மலைப் பகுதிகளில் கொல்லப் பட்டார்கள். இவர்களுக்காகவும், இவர்களின் குடும்பங்களின் மீது நடத்தப்படும் காவல் கொட்டடி சித்ரவதைகளை எதிர்த்தும் வழக்கறிஞர் என்ற வகையில் போராடினேன். 1980-களில் அப்பாவும் அவர் சார்ந்த இயக்கமும் காவல் துறையின் அடக்கு முறைகளுக்கு ஆளான அனுபவமும் உண்டு.

1983-84-ம் ஆண்டுகளில் திருப்பத்தூரில் பல வீதிகளில் காவல் துறையின் அத்துமீறல்கள், வரதட்சணைக் கொடுமை, மக்கள் மீது அக்கறை அற்ற நாடாளுமன்றப் போலி ஜனநாயகம், வேலை இல்லாத் திண்டாட்டம் போன்ற சமூக அவலங்களைப் பற்றிய பாடல்களும், நாடகங்களும்கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பள்ளிக் கல்வி, மக்கள் இயக்கங்களின் தோழமை, அரசியல் அறிமுகம், கலைக் குழு மூலம் களப் பணி என என்றும் மாறாத உழைக்கும் மக்களுக்கு ஆன அரசியல் கலந்த வழக்கறிஞர் வாழ்க்கை, இன்று தொடர்வதற்கான ஆரம்ப நாட்கள் திருப்பத்தூரில்தான் விதைக்கப்பட்டன. இந்த ஊரின் நினைவுகள் 1984 ஜூன் 12-ம் தேதி 400 சதுர அடி வாடகை வீட்டில் சென்னையில் குடியேறியதோடு முற்றுப்பெறுகிறது!''

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ச.வெங்கடேசன்

என் ஊர்!