மணக்குப்பம் விசித்திர மனிதர்
##~## |
''சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகம் ஆயிடும்!'' - 'சிவாஜி’ பஞ்ச் டயலாக் சுப்பையாவிடம் மட்டும் செல்லுபடி ஆகாது!
விழுப்புரம் மாவட்ட மணக்குப்பம்தான் சுப்பையாவின் சொந்த ஊர். தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வந்தாலும், தான் பிறந்த ஊரான மணக் குப்பத்தில் தனக்காக ஒரு சமாதி கட்டிவைத்து இருக்கிறார். உயிரோடு இருக்கும்போதே சுப்பையா தனக்குத்தானே கட்டிக்கொண்ட சமாதி, மணக் குப்பத்தில் ஆல் டைம் அதிசயம்!
''பொழப்புக்காகப் பாண்டிச்சேரி வந்து 25 வருஷம் ஆகப்போகுது. பெல்ட் ஏஜென்சி ஒண்ணுவெச்சு இருக்கேன். ஒருநாள் டி.வி பார்த்துட்டு இருந்தப்போ, ஹார்ட் அட்டாக் வந்தது. 'இது முதல் அட்டாக். இனிமே கவனமா இருக்கணும்’னு டாக்டர் சொன்னார். அப்பதான் போறதுக்குள்ள ஒரு நல்ல காரியமா எங்க ஊரில் ஒரு கோயில் கட்டலாமேனு தோணுச்சு.

என்னோட 20 சென்ட் நிலத்தை 18 ஆயிரத்துக்கு வித்து, மணக்குப்பம் கூட்ரோடு பக்கத்தில், சின்னதா ஒரு முருகன் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினேன். அப்படியே மத்தவங்க தந்த நன்கொடைகள் மூலமா விநாயகர் கோயில், நவக்கிரக கோயில், புத்து மாரியம்மன் கோயில்னு வரிசையா பல கோயில்களைக் கட்டினேன்.
என் குலதெய்வம் வீரபாண்டியில் உள்ள அம்மைச்சார் அம்மன். அந்தத் தெய்வத்துக்குக் கோயில் இல்லாம இருந்துச்சு. குலதெய்வத்துக்கு ஒரு கோயில் கட்டணும்னு முடிவு பண்ணினப்போ என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. ஏன்னா, இதுக்கு முந்தியே அப்படி ஒரு கோயிலை என் அப்பா, பெரியப்பா, தாத்தானு பலர் கட்ட ஆரம்பிச்சு பாதியில் நின்னுடுச்சு. கோயில் பணிகளைத் தொடங்கிய சில மாதங்களில் ஏதாவது ஒரு வியாதி வந்து இறந்துட்டாங்க. எனக்கும் அந்த மாதிரி ஏதாவது நடந்துடுமோனு வீட்ல எதிர்ப்பு. அப்பத்தான் என் அக்கா மட்டும் 'தம்பி உனக்கு அந்தக் கோயில்ல வெச்சிதான் காது குத்தினோம். அப்போ சாமியாடி 'என்னோட குடிபுள்ள (வாரிசு) பொறந்து இருக்கான். இவனால்தான் எனக்குக் கோயில் கட்ட முடியும்’னு சொன்னார். அதனால், நீ தைரியமாக் கோயில் கட்டு’னு ஊக்கம் கொடுத்தாங்க.
என் விவசாய நிலத்தை வித்து கோயில் கட்ட ஆரம்பிச்ச சில நாட்களில் திடீர்னு எனக்கு இடது பக்க உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்துடுச்சு. சென்னையில் வெச்சு மருத் துவம் பார்த்தப்ப 'கழுத்துப் பக்கத்தில் இருக்கும் நரம்பில் அடைப்பு இருக்கு. தாமதிக்காம உடனே ஆபரேஷன் செய்தால்தான் இடதுபக்க உறுப்புகள் செயல்படத் தொடங்கும்’னு சொன்னாங்க. ஆனா, கோயில் வேலைகளை முடிக்காம ஆபரேஷன் பண்ண மாட்டேனு உறுதியாச் சொல்லிட்டேன். சொன்னமாதிரியே 2003-ம் வருஷம் கும்பாபிஷேகமும் செய்தேன். கும்பாபிஷேகம் நடத்தி முடித்த நாளில் இருந்து இன்னிக்கு வரைக்கும் எனக்கு அந்தப் பிரச்னை திரும்ப வரலை!'' என்று புன்னகைத்தவர், '’2006-ம் ஆண்டு ரெண்டாவது ஹார்ட் அட்டாக். அப்போ டாக்டர் எனக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யணும்னு சொன்னார். அப்போ எனக்கு 66 வயசு. இதுக்கு மேலே நான் இருந்து என்ன செய்யப்போறேனு சொல்லி ஆபரேஷன் பண்ணிக்கலை.

அப்பத்தான் எனக்குத் தோணுச்சு... 'நாம தொடர்ச்சியா தெய்வத் திருப்பணிகள் பண்ணிட்டு வர்றோம். நாம் செத்த பிறகு மத்த மனுஷங்க மாதிரி நம்மையும் அடக்கம் செய்யக்கூடாது. நமக்கு நாமே சமாதி கட்டிக்கணும்’னு நெனைச்சேன்.
எங்க முறைப்படி சமாதி கட்டினா, அந்தச் சமாதிக்கு மேல சிவலிங்கம் வைப்பாங்க. அப்படி வெச்சா, அந்தச் சிவலிங்கத்துக்குத் தினமும் பூஜை பண்ணணும். வருஷத்துக்கு ஒரு தடவை சிவபூஜையும் செய்யணும். அப்படிச் செய்யலைனா குடும்பத்துக்கு ஆகாதுனு சொல்வாங்க. அந்தக் கஷ்டத்தை என் பசங்களுக்குக் கொடுக்கக் கூடாதுனுதான், சிவலிங்கத்துக்குப் பதிலா, என் சமாதிக்கு மேலே சிவன் சிலை வெச்சு இருக்கேன்!'' என்று சொல்லி முடிக்கும்வரை மரணம் குறித்து எந்தச் சலனமும் பயமும் இல்லை சுப்பையாவிடம்!
- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்