ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

சபை நாகரிகம்!
என் கணவருடன், நவராத்திரி சமயத்தில், குடும்ப நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். குடும்ப நண்பருக்கு தெரிந்த ஒரு தம்பதியரும் வந்திருந்தனர். மரியாதை நிமித்தமாக எங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். என் கணவர் ஒரு தேசிய வங்கியில் 34 வருடங்கள் அதிகாரியாக பணிபுரிந்து 'விருப்ப ஓய்வு’ பெற்றுள்ளதாக அறிமுகம் நடந்தது. அப்போது அந்த புதிய நண்பர் என் கணவரிடம். '’தற்சமயம் நீங்க வி.ஓ இல்லையா?!'' எனக் கேட்டதுடன், வி.ஓ (VO) என்றால் 'வெட்டி ஆபீஸர்’ என விளக்கிவிட்டு, ஏதோ ஒரு பெரிய நகைச்சுவைத் துணுக்கை கூறியதாக கருதிக்கொண்டு கொல்லென்று சிரித்தார். அவரை திருப்திப்படுத்தும் விதமாகவோ... இல்லை, அனிச்சையாகவோ அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.
அறிமுகம் ஆன இரண்டாவது நிமிடத்தில், சற்றும் யோசியாமல், 'நகைச்சுவை உணர்வு’ என அபத்தமாக எண்ணி, அந்த புதிய நண்பர் உதிர்த்த துணுக்கு மிகவும் அநாகரிமானதுதானே?! சபை நாகரிகம் என்பது நமது பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு. அதைப் புரிந்துகொண்டு 'பிறரை புண்படுத்தமாட்டோம்’ என சூளுரைப்போம்.
- விஜயக்ஷ்மி சந்திரசேகரன், கோவை

வேண்டுதலும்... வியாபாரமும்!
சமீபத்தில் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். வேண்டுதலுக்காக விளக்கு வாங்கி, ஏற்றிவிட்டு இரண்டு சுற்று சுற்றி வருவதற்குள் ஓர் ஆள் வந்து அங்கிருந்த விளக்குகளை அள்ளிச் சென்று, அடுத்த வியாபாரத்துக்கு தயார் செய்தார். விளக்கை முழுவதுமாக எரியவிடவில்லை. இது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அந்த சின்னஞ்சிறிய விளக்குகள் முழுவதுமாக எரியும் வரை பொறுத்திருக்கக் கூடாதா? மன ஆறுதலுக்காக பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் வரும் பக்தர்கள், விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனையை முடிக்கும் முன்பாக இப்படி வருத்தத்தில் தள்ளுவது என்ன நியாயம்? இனியாவது கோயில் நிர்வாகங்கள் இதுபோன்ற வியாபாரிகளை கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா?!
- இந்திரா சந்திரன், திருச்சி

ஹவுஸ் ஓனர்களே... சிந்தியுங்கள்!
வாடகை வீட்டில் வசித்து வரும் என் தோழியை சந்திக்கச் சென்றேன். அப்போது அவள் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தோழியின் கணவர் மாதம் ஒருமுறை தனது பெற்றோரை அழைத்து வந்து 10 நாட்கள் தங்க வைத்து அனுப்புவாராம். முதலில் கண்டுக்கொள்ளாத வீட்டு உரிமையாளர். பின் அவருடைய பெற்றோர் வரும்போதெல்லாம் எப்போது திரும்பிச் செல்வார்கள் என்று கேட்க ஆரம்பித்துவிடுவாராம். 'அடிக்கடி அவர்கள் வந்து செல்வதால் தண்ணீர் செலவு அதிகமாகிறது. அதனால், வாடகையை அதிகரித்துக் கொடுங்கள். இல்லையென்றால், வீட்டை காலி செய்யுங்கள்' என்பது போல் பேசுகிறாராம்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்பதற்காக பெற்றோரையோ, உடன் பிறப்புகளையோ வீட்டுக்கு அழைக்காமல் இருக்க முடி யுமா..? ஏன் இதுபோன்ற கெடுபிடிகள்? ஹவுஸ் ஓனர் களே... சிந்தியுங்கள்!
- என்.குர்ஷித், நெல்லை

இதோ, ஓர் இனிய பாதை!
பள்ளித் தலைமை ஆசிரியையான என் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவளுடைய மகள் கடைக்குப் போக தாயை அழைக்க, நாங்கள் இருவரும் அவளுடன் சென்றோம். வழியில் நான்கைந்து இளைஞர்கள் என் தோழியைப் பார்த்து மரியாதையுடன் 'விஷ்’ செய்தனர். 'யார் அவர்கள்?’ என கேட்டதும் தோழி மென்மையாக புன்னகைத்துவிட்டு, கூறிய விவரம்...
தோழியின் மகள் கல்லூரிக்குப் போகும்போது, தினமும் சில இளைஞர்கள் கிண்டல் செய்து வந்தனர். இதை தாயிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் அந்தப் பெண். அடுத்த வாரம் தோழியின் தந்தையின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் வந்துள்ளது. தோழி தன் மகள் மூலமாகவே அந்த இளைஞர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார். வந்தவர் களுக்கு சாப்பாடு போட்டு மிகவும் மரியாதையாக நடத்தியுள்ளார். அன்றிலிருந்து அந்த இளைஞர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. தாய், மகள் இருவரிடமும் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்கின்றனர்.
'போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்தால் இளைஞர்களின் கோபம் அதிகமாகும். அதோடு, 24 மணி நேரமும் மகளுடன் காவலாக போக முடியாது’ என்பதை உணர்ந்து புத்திசாலித்தனமாக பிரச்னையை சமாளித்த தோழியை எண்ணி வியக்கிறேன்!
- கே.ஜெயலஷ்மி, சென்னை- 116