மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 25

குந்தன் ரங்கோலி... குஷியான லாபம்!வே. கிருஷ்ணவேணி,  படங்கள்: ஆ.முத்துக்குமார்

வாசலில் கோலம் போடுவதற்குப் பதிலாக, கோலம் ஸ்டிக்கர் ஒட்டும் டிரெண்ட் வந்தது. இப்போது அதிலும் லேட்டஸ்டாக வந்துவிட்டது குந்தன் ரங்கோலி செட்!

''விசேஷ தினங்களில் வாசலில் இந்த கோலம் செட்டை வைத்து, அதைச் சுற்றிலும் பூக்கள் அல்லது விளக்குகளால் அலங்கரித்தால்... திருநாளின் அருள் வந்துவிடும் வீட்டுக்கே!'' என்று சொல்லும் சென்னை, முகப்பேர், 'விச்சி கிரியேஷன்ஸ்' உரிமையாளர் விஜயலட்சுமி, அதன் செய்முறையை கற்றுத் தருகிறார் இங்கே!

தேவையான பொருட்கள்: ஓஹெச் ஷீட், குந்தன் கற்கள்  தேவையான டிசைன், நிறங்களில், பால் செயின், முத்துமணிகள், ஃபேப்ரிக் க்ளூ, ஏ4 ஷீட் (பேப்பர்), ஸ்கேல், பென்சில், ரப்பர், கத்தரிக்கோல்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 25

செய்முறை:

படம் 1, 1 ஏ: முதலில் தேவையான டிசைனை ஏ4 ஷீட்டில் வரையவும்.

படம் 2: ஏ4 ஷீட்டின் மீது ஓஹெச்பி ஷீட்டை வைத்து, வரைந்திருக்கும் டிசைனை வெட்டவும்.

படம் 2ஏ: டிசைனின் ஓரங்களில் ஃபேப்ரிக் க்ளூ இடவும்.

படம் 3: ஃபேப்ரிக் க்ளூ மீது பச்சை நிற குந்தன் கற்களை வரிசையாக ஒட்டவும்.

படம் 3 ஏ: பால் செயினை (கோல்டன் கலர் செயின்) பச்சை நிற குந்தன் கற்களுக்கு அருகில் வரிசையாக ஒட்டவும்.

படம் 4: மேலே கூறிய வழிமுறைகளின்படியே, குந்தன் கற்களை வேறு வேறு டிசைன்களாக கற்பனைத் திறனுக்கு ஏற்ப ஒட்டவும். இப்போது கோலத்தைச் சுற்றி வைக்கும் சைடு டிசைன் தயார்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 25

படம் 5: கோலத்தின் நடுப்பகுதிக்கு டிசைன் செய்ய, மேற்கூறிய வழிமுறைகளின் படியே முதலில் ஏ4 ஷீட்டில் டிசைன் வரைந்து, அதன் மீது ஓஹெச்பி ஷீட்டை வைத்து பேனா அல்லது பென்சிலால் டிசைனை வரைந்து கொள்ளவும். பிறகு, வரைந்த கோட்டின் மீது ஃபேப்ரிக் க்ளூ தடவி, முத்துமணிகளை ஒட்டவும்.

படம் 5ஏ: பிறகு நடுவில் குந்தன் கற்களினால் ஆன பூக்களைக் கொண்டு விருப்பத்துக்கு ஏற்ப முழுவதும் ஒட்டி முடிக்கவும்.

படம்  6: இப்போது கோலத்தின் நடுவில் வைப்பதற்கான குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட அழகிய குந்தன் ரங்கோலி செட் ரெடி.

இந்த ரங்கோலி செட்டை 300 ரூபாய் விலை வைத்து விற்பனை செய்யலாம். இது நார்மல் அளவு. ஆர்டருக்கு ஏற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ செய்யலாம்!

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...