மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 26

கமகம ஊதுபத்தி ஹோல்டர்... கைக்கு மேல் லாபம்! வே. கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்

''பூஜையறை சாமான்கள் வாங்குறப்போ, சரியான அளவுல ஊத்திபத்தி ஹோல்டர் கிடைக்காத வருத்தம் பலருக்கும் இருக்கும். அதனால என்ன, நாமே நமக்கு வேண்டிய அளவு, வேண்டிய வடிவத்தில் ஊத்திபத்தி ஹோல்டர் செய்துட்டா போச்சு! இதை ஒரு தொழிலாவும் எடுத்துப் பண்ணலாம்... சுலபமா!'' - தன் அனுபவத்தில் வாக்குறுதி கொடுக்கிறார், சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த 'தூரிகை’ பயிற்சி மைய நிறுவனர் விஜயா கிருஷ்ணமூர்த்தி. கடந்த 37 வருடங்களாக கிராஃப்ட் தொழிலில் இருக்கும் விஜயா, தன் மனதுக்கு மிகவும் பிடித்த கலைப்பொருளான ஊதுபத்தி ஹோல்டரை, அவள் விகடன் வாசகிகளுக்காக செய்து காட்டுகிறார் இங்கே!

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 26

தேவையான பொருட்கள்:

அட்டை/மவுன்ட் போர்டு, ஷில்பக்கார், ஃபேப்ரிக் க்ளூ அல்லது ஃபெவிகால், தேவையான நிறங்களில் அக்ரலிக் கலர், 3டி கோல்டன் கலர் அவுட்லைனர், குந்தன் கற்கள், கத்தரிக்கோல், கத்தி, தீக்குச்சி, பென்சில், முக பவுடர், பிரஷ்.

செய்முறை:

படம் 1: அட்டையின் ஓரத்தில் இலை வடிவத்தை பென்சிலால் வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

படம் 2: முக பவுடரை கைகளில் கொட்டி தடவிக்கொண்டு, ஷில்பக்காரை நன்றாகப் பிசையவும்.

படம் 3: வெட்டி எடுத்த இலை வடிவம் முழுவதும், ஷில்பக்காரை பரப்பி ஒட்டவும்.

படம் 4: அதன் மீது கத்தியைப் பயன்படுத்தி இலைக்கு நரம்பு போன்ற டிசைனை அமைக்கவும்.

படம் 5: சிறிது ஷில்பக்காரை கோலி அளவுக்கு உருட்டிக்கொள்ளவும்.

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 26

படம் 6: படத்தில் காட்டியுள்ளபடி மலருக்கான நடுப்பகுதி டிசைன் செய்யவும். பின்பு, அதில் ஊதுவத்தி செருகுவதற்காக தீக்குச்சியைப் பயன் படுத்தி ஓட்டைகள் இடவும் (ஓட்டை வெளிப்பக்கம் போய்விடாதவாறு பார்த்துக்கொள்ளவும்).

கைகொடுக்கும் கிராஃப்ட்! - 26

படம் 7: படத்தில் உள்ளபடி பூவின் இதழ்களையும், சிறிய இலைகளையும் செய்துகொண்டு, துளை போட்டு வைத்திருக்கும் நடுப்பகுதியைச் சுற்றி அவற்றைப் பொருத்தி...

படம் 8: இந்த ஷில்பக்கார் பூ நன்றாகக் காய்ந்ததும், அக்ரலிக் கலரினால் பெயின்ட் செய்யவும். உடனடியாக இதை இலையின் காம்புப்பகுதியில் ஒட்டவும். இலை நரம்புகளில் 3டி கோல்டன் அவுட்லைனைர் கொண்டும், ஓரங்களில் ஃபேப்ரிக் க்ளூ கொண்டு குந்தன் கற்களை ஒட்டியும் ஹைலைட் செய்யவும்.

பூஜை அறையின் அழகையும் அம்சத்தையும் கூட்டவல்ல ஊதுபத்தி ஹோல்டர் ரெடி!

''இந்த ஹோல்டருக்கு 150  - 200 ரூபாய் வரை விலை வைக்கலாம். இதோடு தேங்காய், பழம் போன்றவற்றையும் இந்த ஷில்பக்கார் கொண்டு டிசைன் செய்யலாம். கற்பனைக்கும், உழைப்புக்கும் ஏற்ப விலையையும், வருமானத்தையும் அதிகரிச்சுக்கலாம்!''

- தான் செய்த ஊதுபத்தி ஸ்டாண்டை கைகளில் தாங்கி ரசித்துக்கொண்டார், விஜயா!

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...