மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

200

அனுபவங்கள் பேசுகின்றன!

நானும் என் தோழியும் எங்கள் பக்கத்து ஊரில் உள்ள வாரச் சந்தைக்கு சென்றோம். தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், மிளகாய் போன்றவற்றை தனித்தனியே கேரிபேக்குகளில் போட்டு 'எது எடுத்தாலும் பத்து ரூபாய்’ என ஒரு வியாபாரி விற்றார். விலை குறைவாக இருந்ததால், நான் தடுத்தும் கேட்காமல், ஒவ்வொன்றிலும் இரண்டு பாக்கெட்டுகள் வாங்கினாள் தோழி. பின்னர் நான் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினேன். வீட்டுக்குச் சென்றதும் தோழியிடம் இருந்து போன் வந்தது ''பாக்கெட்டில் அடைத்து விற்ற காய்கறி வகைகளில் பாதிக்கு மேல் அழுகலாக இருந்தது. உன் பேச்சைக் கேட்காமல் ஏமாந்துவிட்டேன்'' என்றாள்.

எனவே, தோழிகளே... கேரிபேக்கில் போட்டுவைத்து விற்கப்படும் காய்கறிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

- செ.கலைச்செல்வி, கீழமணி கிராமம்

அனுபவங்கள் பேசுகின்றன!

தெருவில் நான் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வீட்டு வாசல்முன் நின்றுகொண்டு இருந்த என் நெருங்கிய தோழி, அந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று நலம் விசாரித்தாள். ''இது யார் வீடு?'' என்று கேட்டதற்கு, ”புதுசா வாடகைக்கு வந்திருக்கோம்'' என்றாள். ''நாலாவது தெருவில் பங்களா மாதிரி சொந்த வீடு இருக்க... ஏன் வாடகை வீட்டுக்கு வந்தீங்க?'' என்று குழப்பத்தோடு கேட்டேன். ''குடும்பத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன சச்சரவுகள் ஏற்பட... ஆறுதலுக்கு ஒரு ஜோதிடரைப் பார்த்தோம். அவர், 'நான்கு மாதங்களுக்கு உங்கள் சொந்த வீட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் தகாத சம்பவம் ஏதேனும் நடக்க வாய்ப்பிருக்கிறது’ என்று சொல்லிவிட்டார். அதனால் சொந்த வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, இங்கே மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வாடகையில் இருக்கிறோம்!'' என்றாள் தோழி வருத்தத்துடன். நான் சற்றே கோபத்துடன், ''பிரச்னைகள் இல்லாத குடும்பம் ஏது? சச்சரவுகளுக்கான காரணத்தை நீங்கள் மனம்விட்டுப் பேசி தெளிவு பெறாமல், ஜோசியரிடம் சென்று, அவர் அச்சுறுத்தலுக்குப் பயந்து வாடகை வீட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பானேன்!'' என்று கடிந்துகொண்டேன். அவள் தவறை உணர்ந்தவளாய் அமைதி காத்தாள்.

குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு... ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல்தான்! ஜோதிடம், பரிகாரம் என்பதெல்லாம் பண இழப்பையும், மனக்குழப்பத்தையும்தான் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம்.

- பெயர், ஊர் வேண்டாமே... ப்ளீஸ்!

அனுபவங்கள் பேசுகின்றன!

என் தோழி பணிபுரிந்துகொண்டே ஹாஸ்டலில் இருக்கிறாள். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். அவளுடன் தங்கியுள்ள பெண்கள், அவளுக்கு பாய் ஃப்ரெண்ட் ஒருவன்கூட இல்லாதது, அவள் யாரையும் காதலிக்காதது பற்றி கலாய்த்தபடியே இருப்பார்களாம். ஒருநாள் கிண்டல் எல்லை மீற, தற்கொலை முடிவுக்கு சென்றுவிட்டாள் தோழி. அவளுக்கு நான் ஆறுதல் அளித்து தேற்றினேன்.

பாய் ஃப்ரெண்ட் அல்லது கேர்ள் ஃப்ரெண்ட்டுடன் பழகுவது மிகவும் உயர்வான சாதனையா? இதைச் செய்யாதவர்கள் உதவாக்கரைகளா..? விபரீதமான கிண்டல்களால் மற்றவர்கள் வாழ்க்கையில் இப்படி விளையாடுவது சில ஆண்/பெண்களுக்கு பொழுதுபோக்காகவே இருக்கிறது. இதுபோன்றவைகள் தயவுசெய்து திருந்த வேண்டும்!

- கஸ்தூரி, வந்தவாசி