ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

மொய்... பொய்யாகலாமா?!
குடும்பத்துடன் ஒரு கல்யாணத்துக்குச் சென்றிருந்தோம். விருந்து முடிந்து பேசிக்கொண்டிருந்தபோது, `மொய்’ எழுதிவிட்டு வந்த ஒருவர், ``சரியாக விசாரிக்காமல், பெண் வீட்டாருக்கு எழுத வேண்டிய 500 ரூபாய் மொய்யை, மாப்பிள்ளை வீட்டாருக்கு எழுதிவிட்டேன்’’ என என் கணவரிடம் புலம்பினார். அதைத் திருப்பிக் கேட்டு வாங்கி, பெண் வீட்டாருக்கு மறுபடி எழுதினால், கௌரவமாகவா இருக்கும்?! அதனால், என் கணவரிடம் 500 ரூபாய் கடன் வாங்கி பெண் வீட்டாருக்கும் மொய் எழுதிவிட்டு வந்தார்.
எனக்குத் தெரிந்து பல திருமணங்களில் மொய் விஷயத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. மொய் எழுதும் இடத்தில் ‘பிள்ளை வீடு’, ‘பெண் வீடு’ என்று அட்டையில் எழுதி தொங்கவிட்டு விட்டு ஏன் மொய் எழுத ஆரம்பிக்கக் கூடாது? இதன்மூலம் குழப்பங்கள், மனவருத்தங்கள் தவிர்க்கலாம் அல்லவா?
- பத்மினி கோவிந்தராஜ், மதுரை

பயணம்... கொஞ்சம் கவனம்!
நான் சமீபத்தில் காசி, கயா, வாரணாசி, அலகாபாத், கொல்கத்தா, டெல்லி என்று விமானம், ரயில், டாக்ஸி மூலம் பயணம் செய்தேன். பயண டிக்கெட், அடையாள அட்டைகள், மருந்துகள், சில உணவுப்பொருட்கள், ஆடைகள் என்று எல்லாமே கச்சிதமாக திட்டமிட்டு எடுத்துச் சென்றேன். ஆனால், நான் எடுத்துச் சென்ற ஆடைகள் பீரோவில் அடுக்கியிருந்து எடுத்துச் சென்றதால், பிரித்துப் பார்க்கவில்லை. சில உள்பாவாடைகளில் நாடா இல்லை. சில பிளவுஸ்களில் ஹூக் இல்லை. பிராவில் எலாஸ்டிசிட்டி இல்லாமல் இருந்தது. கையில் சேஃப்டிபின் இருந்ததால் ஒருவழியாக சமாளித்துக்கொண்டேன். ‘இவ்வளவு திட்டமிட்டும் கொஞ்சம் சொதப்பலாகிவிட்டதே’ என்று வருத்தமாக இருந்தது.
பயணத்துக்குக் கிளம்பும் சமயத்தில், எடுத்து வைத்துள்ள ஆடைகள் எல்லா விதத்திலும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த அனுபவம் கற்றுக்கொடுத்துவிட்டது.
- எஸ்.கனகவல்லி சாரங்கபாணி, ஸ்ரீரங்கம்

போதுமே அக்கறை!
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. என் தோழிக்கு மணமாகி குழந்தை இல்லை. இருவருமாக ஒரு வளைகாப்புக்குச் சென்றிருந்தோம். குழந்தை இல்லாத என் தோழிக்கு வளையல் போட்டால் விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும் என யாரோ சொல்ல, அவளையும் மனையில் அமரவைத்தார்கள். ஆனால், வளையல் போட வந்த ஒவ்வொருவரும், ‘‘டாக்டர்கிட்ட காட்டினியா?’’, பிரச்னை யார்கிட்ட?’’ என்றெல்லாம் கேள்விகளாக கேட்டுத் துளைத்தெடுத்தனர். `அழுது விடக் கூடாது' என்பதற்காக அவள் சிரமப்பட்டதை பார்த்தபோது வருத்தமாக இருந்தது. இதேபோல் சிலர் என்னிடமும் திருமணம் பற்றி கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்தினார்கள்.
‘அக்கறையாக விசாரிப்பதாக நினைத்துக்கொண்டு தயவுசெய்து மற்றவர்களைப் புண்படுத்தாதீர்கள்’ என்று இதுபோன்றவர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.
- ஆர்.வனஜா, போளூர்

மனிதநேயம்... ப்ளீஸ்!
தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற நான், டோக்கன் வாங்கி வரிசையில் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்த ஒரு தம்பதி, ``என் குழந்தை திடீர்னு மயக்கமாயிடுச்சு. உடனே டாக்டரைப் பார்க்கணும்’’ என அழுதவாறு கூற... பணிப்பெண்ணோ, ``டோக்கன் வாங்கி வரிசையில் உட்காருங்க’’ என்றாள். நான் உட்பட பலரும் ``நாங்க வெயிட் பண்றோம். அவங்களை அனுப்புங்க’’ என்று கூறினோம். அந்தப் பணிப்பெண் ``அப்படியெல்லாம் செய்ய முடியாது. வேணும்னா 100 ரூபாய்க்கு ஸ்பெஷல் டோக்கன் வாங்கி, டாக்டரை உடனே பார்க்கலாம்’’ என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன்.
மருத்துவம் என்பதை வெறும் பிழைப்பாக மட்டுமே பார்க்கும் இதுபோன்ற சில தனியார் மருத்துவமனை களால்தான், இன்றைக்கு மருத்துவத் துறையே களங்கப்பட்டு கிடக்கிறது. இவர்கள் எல்லாம், கொஞ்சம் மனிதநேயத்தையும் கற்றுக்கொள்வார்களா?!
- எஸ்.சுப்புட்சுமி, புதுக்கோட்டை