
வாலி, ஓவியம் : மணிபடம் : கே.ராஜசேகரன்
நாம் தோற்பாவைகள்!
##~## |
'LIFE’!
அமெரிக்காவிலிருந்து வரும் ஓர் ஆங்கில ஏடு. பக்கத்துக்குப் பக்கம் கிளி கொஞ்சும். வண்ணப் படங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
ஏடு மேல் ஏறி நிற்கும் எல்லா எழுத்துகளுக்கும் கால் வழுக்கும்; காகிதத்தின் வழுவழுப்பு அப்படி!
நாற்பதாண்டுகள் முன் நான் படித்த கட்டுரையன்று, பாசி படர்ந்த படித்துறைபோல் - என் நினைவில் படர்ந்து நிற்கிறது.

'LIFE’- ல் வெளிவந்ததுதான்; கட்டுரையின் தலைப்பு:
'NINE REASONS TO BELIEVE IN GOD!’
- அதாவது,
கடவுளை நம்புவதற்கான காரணங்கள் ஒன்பது!
கட்டுரை ஆசிரியர் கூறப் புகுவது யாதெனில் -
கோள்களாகட்டும்; நாள்களாகட்டும்; ஆள்களாகட்டும்;
இப் படிமிசை இயங்கும் எல்லாவற்றிற்கும், அவற்றை இயக்குகின்ற ஓர் - INVISIBLE HAND - இருக்கிறது என்பதுதான்!
பகுத்தறிவாளர் எனப்படுவோர் - அந்தக் கையை, இயற்கை என்கின்றனர்; 'அது இயற்கையாயின், அவ் இயற்கையையும் இயக்கும் கை இறைக்கை!’ என்று...
காரண காரியங்களோடு நிறுவுகிறார் கட்டுரையாசிரியர்.
கண்ணுக்குத் தெரியாத கையின் கையில் கயிறு; அந்தக் கயிறு வழி கூத்தாடும் -
தோற்பாவைகள்தாம் -
தொல்புவியும்; மாந்தரும்; மற்றவையும்!
இவ் அரிய உண்மையைத்தான் அறிந்திருக்கிறார்; அறிந்ததை அகிலத்திற்கு அறிவித்திருக்கிறார் அருட்பாவில் -
வடலூர் வள்ளல்;
'ஆட்டு வித்தால் ஆரொருவர் ஆடாதாரே!’ என்று.
அருமைச் சகோதரனே!
ஆறு கைகளில் நீயும் ஒரு கையாய் அமர்ந்து ஆடுகிறாய் சீட்டு.
கலைத்துப் போட்ட பதின்மூன்று சீட்டு களையும், கையில் வைத்து நீ அடுக்கு கையிலேயே -
ஆட அவசியமின்றி ஆகிவிடுகிறது RUMMY!
அடுத்தவர் கைகளெல்லாம் 'FULL’ ஆக நிற்க, நீ அள்ளுகிறாய் காசை!
அதற்கென்ன காரணம்? ஆடியது நீயல்ல; ஆண்டவன்!
இதுதான் - வள்ளலார் முதல், திருமுருக வாரியார் வரை சொல்லிவைத்த விழுமிய கருத்தாயினும் -

'தகுதியுடையார் ஏன் தகவுடையாராய் ஆகவில்லை?’ என்று நான் சிலரைப் பற்றிச் சிந்திக்க நேர்கையில் -
என் வினா விடையற்று நிற்கிறது. 'இது தான் தெய்வசங்கல்பம்’ என்று ஏற்றுக் கொள்வேனாயின் -
உழைப்பிற்கும் வேர்வைக்கும், உலகுமிசை மரியாதை இல்லை என்றாகிவிடும். அது உண்மையுமல்ல.
எல்லா உழைப்புகளும் ஏன் மரியாதை பெறவில்லை என்பதுதான் -
விடையறியா என் வினா!
திருவரங்கத்திலும்; திருச்சி தேவர் ஹாலிலும் -
நான் ஏராளமான நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த நாள்கள்.
ஆரம்பத்தில் நான் சமூக நாடகங்கள்தான் எழுதி அரங்கேற்றினேன்.
திருச்சி - 'கெயிட்டி’ டாக்கீஸில் ஒரு படம் வந்தது.
படத்தின் பெயர் 'மருத நாட்டு இளவரசி’; எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி நடித்த படம்.
சரித்திரக் கதை.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக் குப் பின்னணி பாடியவர் -
அந்தக் காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கிய திரு. எம்.எம்.மாரியப்பா அவர் கள்.
'வாராய்! நீ வாராய்!’ எனும், காருள்ள வரையும்; கடல் நீருள்ள வரையும் - இறவாது துலங்கவல்லதும் - அண்ணன் திரு. மருதகாசி அவர்கள் எழுதியதுமான அந்தப் பாட்டைப் பாடிய -
திரு. திருச்சி லோகனாதன் அவர்களின் தாய் மாமன்தான் திரு.மாரியப்பா அவர்கள்.
எப்பொழுதாவது - நான் உடன் பேசிக்கொண்டிருக்கையில், திரு. சிவாஜி அவர்களுக்கு நல்ல MOOD வந்தால் -
என் தொடையில் தாளம் தட்டிப் பாடுவார் ஒரு பாட்டை.
'இந்த உலகினில்
இருக்கும் மாந்தருள் -
எழிலுடையோன்
எங்கள் தமிழன்!’ - என்பதுதான் அந்தப் பாட்டு.
கோவை திரு. அய்யாமுத்துக் கவுண்டர் அவர்கள் எழுதியது. இந்தப் பாட்டுதான் சிவாஜிக்கு மிக மிக இஷ்டமான பாட்டு. இதைப் பாடியவர் திரு. எம்.எம். மாரியப்பா அவர்கள்.
மாரியப்பா அவர்களும் நானும் - மிக நெருங்கிய நண்பர்கள். ஆகவே - அவர் தயவில் தினமும் கெயிட்டி டாக்கீஸில், அவர் பாட்டு இடம் பெற்ற படமான -
'மருத நாட்டு இளவரசி’யைப் பார்ப்பேன். குறைந்தது பத்து தடவையாவது பார்த்திருப்பேன்.
எனக்குத் திகட்டவில்லை. தமிழ் எப்படித் திகட்டும்?
உரையாடல்கள் ஒவ்வொன்றும், உறையிலிருந்து உருவி எடுத்த வாளின் கூர்மையோடும்; சிற்றன்ன வாசலில் செதுக்கிவைக்கப்பெற்ற சிற்பங்களின் சீர்மையோடும்; கொற்கை முத்துக்களைக் கோவையாய் ஒரு நூற்சரட்டில் கோத்துவைத்தாற்போன்ற நீர்மையோடும்; எல்லாவற்றிற்கும் மேலாக எடுத்துவைத்த வாதங்களில் நெறி பிறழா நேர்மை யோடும் -
விளங்கி, என்னை வியப்பில் விழுத்தின. தமிழின் தகவுகள் யாவையும் அந்தத் திரைப்படம் எனக்குக் கற்பிக்க -
நான் - சமூக நாடகங்களை விடுத்து, கற்கண்டுத் தமிழுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சரித்திர நாடகங்களை எழுதலானேன்.
'மருதநாட்டு இளவரசி’யின் மறக்கவொணா உரையாடல்கள் மூலம் -
என் மனத்தை மணித் தமிழை நோக்கி மடைமாற்றம் செய்த பெரியவர்; அரியவர்; என் வணக்கத்திற்கு உரியவர் -
திரு.கலைஞர் அவர்கள்தான். HE SIMPLY ELECTRIFIED ME OUT OF HIS MOST MEMORABLE DIALOGUES!
அம்பிகாபதி அமராவதி கதையை - 'கவிஞனின் காதலி’ என்ற பெயரில் நாடகமாக எழுதியிருந்தேன்.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கனாதஸ்வாமி கோயிலில், வெள்ளைக்காரன் காலத்தில் EXECUTIVE OFFICER - ஆக இருந்த திரு. ராஜகோபால் நாயுடு அவர்களின் புதல்வன் -
திரு.சௌந்தரராஜன்தான், நாடகத்தில் அம்பிகாபதி. அவன் என்னுடைய சீடன் எனலாம்.
நாடகம், திருச்சி வட்டாரத்தில் மிகப் பெரிய வெற்றியை எட்டியிருந்தது.
அதை - சென்னையில் நடந்த சௌந்தரராஜனின் தந்தை திரு.ராஜகோபால் நாயுடு ஆசைப்பட்டார். அது, அவருடைய பையன் சினிமாவில் புக - ஒரு VISITING CARD ஆக இருக்குமே என்று.
நாடக வாத்தியார் நான் என்பதால், நாயுடு அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்திருந்தார். ஆனால், என்னால் அப்போது ஸ்ரீரங்கத்தைவிட்டு வர இயலவில்லை.
நாடகம் - தியாகராய நகர், கிருஷ்ணகான சபாவில் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகான சபா - இப்போது நல்லி கடை இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் - பனகல் பார்க் அருகே ஒரு கீற்றுக் கொட்டகையாக இருந்தது.
அங்குதான் என்னுடைய 'கவிஞனின் காதலி’ நாடகத்தை நடத்தினார்கள். சௌந்தரராஜன், அம்பிகாபதி; புலியூர் சரோஜா, அமராவதி!
திரு. எம்.ஜி.ஆர். தலைமை வகிக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் - நாடகத்தன்று மாலை -

திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனைவியார் திருமதி சதானந்தவதி அவர்களுக்கு உடல் நிலை சற்று கவலைக்கிடமாகிவிட்டது. அந்த அம்மையார், ஓரிரு வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்.
மனைவி உடல்நிலை மோசமாக இருக்கும் தகவல் 'மாடப்புறா’ ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆருக்குத் தெரிய வந்ததும் -
ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டுப் புறப்படலானார். இந்த நிலையில் நாடகத்திற்கு எப்படி அவரால் வர முடியும்?
இருப்பினும் - நாடகம் நடத்துவோர் தன்னால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகக்கூடும் என்று -
ஸ்டூடியோவிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில், பத்து நிமிஷம் இருந்து நாடகம் பார்த்துவிட்டுப் போவதாக அறிவித்துவிட்டு, நாடகத்திற்கு வந்தார்.
சௌந்தரராஜனை இன்னொரு சிவாஜி என்றே நான் சொல்லுவேன். அப்படி ஓர் உருவம்; தீர்க்கமான நாசி; தமிழ் உச்சரிப்பு; தகத்தகாயமான நடிப்பு!
பத்து நிமிஷம் மட்டுமே இருப்பதாகச் சொன்ன எம்.ஜி.ஆர் - முழு நாடகமும் இருந்து பார்த்துவிட்டு மேடையில் பேசும்போது -
'இந்த நாடகத்தின் வசனங்கள், பாரதிதாசன் கவிதைபோல் இருந்தது. எழுதியவர் யாரென்று கேட்டேன்... ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் - பெயர் வாலி என்று சொன்னார்கள்... அவரை இங்கிருந்தே அழைக்கிறேன்... சென்னை வந்தால் அவர் என்னைச் சந்திக்க வர வேண்டும். அவரை வரவேற்க ஆவலாக இருக்கிறேன்!’ என்று குறிப்பிட்டார்.
மிகப் பெரிய நடிகனாகத் திரையில் கொடிகட்டிப் பறப்பான் என்று நான் எண்ணிய திரு.சௌந்தரராஜன் பல படங்களில் நடித்திருந்தாலும் - எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை!
ஆனால் - எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருமுறை மந்திரியாக இருந்தார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் இருந்த நான் - எம்.ஜி.ஆரின் பிரதான கவிஞனாகவும், நெருங்கிய நண்பனாகவும் மாறிப்போனேன்.
இதற்குக் காரணம் - AN INVISIBLE HAND!
'திருச்சி வாசு’ என்றும் சொல்லலாம்; 'பொன்மலை வாசு’ என்றும் சொல்லலாம், என் நெஞ்சுக்கு இனிய நெருக்கமான சினேகிதன் திரு.வாசுவை.
என் நாடகங்களில் - திருச்சி சௌந்தரராஜன் வில்லன்; பொன்மலை வாசு, கதாநாயகன்!
பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த வாசு -
என் வாழ்க்கைப் பயணத்தில் உடன்வந்த உயிர்த் தோழன்.
பரம்பரையாய், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவனாயினும் - நாடகத்தின் பால் உள்ள மாளாக் காதலால் - இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டவன்.
என்னுடைய நடிகர்களிலேயே - கவிதை நடையிலான என் உரையாடல்களை -
வாசுபோல் பிறிதொருவர் பேசி நானறியேன். தமிழ் உச்சரிப்பும், உணர்ச்சிப் பெருக்கான நடிப்பும், - நாடகம் பார்ப்போரையும் என்னையும் பிரமிக்கவைத்ததுண்டு.
வாசு - சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும்; வருவதற்கான தகுதிகள் நூறு விழுக்காடு உள்ளவன் - என்று நான், என் தமிழ் மேல் ஆணையாகச் சொல்லுகிறேன் - மனப்பூர்வமாக அவாவினேன்.
நாகேஷும், நானும் சேர்ந்திருந்த CLUB HOUSE - ல் வாசுவையும் உடன் வைத்துக்கொண்டேன். வாசு, நாகேஷின் நெருங்கிய நண்பரில் ஒருவனானான்.
அது தவிர - மெல்லிசை மன்னர் திரு.விஸ்வநாத அண்ணனிடமும் வாசுவை அறிமுகப்படுத்திவைத்தேன். விஸ்வநாத அண்ணனும், வாசுவை
நெடுநாள் நண்பனாகப் பாவித்துப் பழகினார்.
'நாளை நமதே’ படத்தில்கூட, வாசு, ஒரு நல்ல வேடத்தில் தோன்றியும் -
பெரிதாக வரவில்லையே என்பது இன்றளவும் என்னை வருத்திக்கொண்டிருக்கும் விஷயம். தகுதியுடைய வாசு, ஏன் தகவுடைய வாசுவாக ஆகவில்லை? நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் நாவில் அடுக்கிவைத்திருக்கும் வாசுவிடம் கேட்க வேண்டும் -
'கன்னலடு பாகு மலர்க் கள்ளை’ வெறுக்கவைக்கும் தமிழின் ஆளுமையை, அவனது வசன உச்சரிப்பில்!
வாசு, சினிமாவில் - அதுவும் நிறைய S.VE.சேகர் நாடகங்களில் நடித்தும் - ஏன் பெரிய இடத்தை எட்டவில்லை?
நான் கஷ்டப்பட்ட காலங்களில் உதவிய வண்மை குணம் மிக்கவன் வாசு. வயிற்றுப் பசியை நான் அவன் வீட்டில் - ஆற்றிக்கொண்டிருக்கிறேன் அனேக நாள்கள்.
பழைய மாம்பலம் - கோதண்டராமர் கோயில் தெருவில் வாசு இருந்தபோது-
மாதக்கணக்காக முகம் சுளிக்காமல், அன்றலர்ந்த கமலம்போல் -
எனக்குச் சோறு போட்ட - என் தாயனைய உத்தம ஸ்திரீ -
திரு.வாசுவின் வாழ்க்கைத் துணைவியார்!
வாசுவை ஏன் உயர்த்திவிடவில்லை. எல்லாவற்றையும் இயக்கும் அந்த INVISIBLE HAND? காரண காரியங்களைக் கடவுளே அறிவான்!
- சுழலும்...