மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

முதுகின் பின்னணி அழகு!

எஸ்.அமராபரன், மதுரை-9.

 வெளி நாடுகளில் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் இல்லையே, ஏன்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

தமிழர்கள்தான் முதன்முதலில் கோலம் போட ஆரம்பித்தார்கள். காரணம் 1. வீடு மங்களகரமான நிலைமையில் இருப் பதைஎடுத்துச் சொல்ல. 2. அரிசி மாவை பறவைகளும் எறும்புகளும் உண்ண. 3.பெண்களுக்கு தேகப் பயிற்சி. வெளி நாடுகளில் இந்த மூன்றையுமே வேறு வகையில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். உதாரணமாக, 'வீட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்பதை அங்கே யாரும் யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!

##~##

அம்மா பிரியன், சிந்தாமணி.

திரைப்படத்தில் வரும் பெண்களாகட்டும் சின்னத் திரையில் வரும் பெண்களாகட்டும் விளம்பரங்களில் வரும் பெண்களாகட்டும்... எல்லோருமே தலை விரித்தபடி வருகிறார்களே, ஏன்?

முடியை நீளமாக வளர்த்து, வகிடு எடுத்து இழுத்து வாரி, ஒற்றை அல்லது ரெட்டையாகப் பின்னிக்கொள்வது...தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்... பழங்குடி மக்களின் பழக்கம்! தற்காலத்திய பெண்கள் மேல்நாட்டுப் பெண்களைப்போல முடியை அப்படியேவிடுகிறார்கள். அல்லது 'பாப்’ செய்துகொள்கிறார்கள். இது ஒரு சுதந்திர 'ஸ்டேட்மென்ட்’!

சுமாரான அழகு உள்ள சில பெண்கள், தலைமுடியைப் 'பரவலாக’விட்டால், மேலும் அவர்கள் அழகாகத் தெரிவது உண்டு. இது எல்லாம் முகத்தைப் பொறுத்தது. ஆகவே, 'தலைவிரி கோலமாக’ என்பதன் அர்த்தம் இன்று 'தலை’கீழாக மாறிவிட்டது உண்மை!

எஸ்.சண்முகசுந்தரன்,வைதீஸ்வரன்கோவில்.

விதிக்கும் சதிக்கும் என்ன வேறுபாடு?

யார் மீதாவது சந்தேகம் வந்தால், அது சதி. யார் மீதும் சந்தேகம் வராவிட்டால், அது விதி!

ஹாய் மதன் கேள்வி - பதில்

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

பெண்களின் முதுகு எப்படி, ஏன் கவர்ச்சிப் பிரதேசமாயிற்று?

முதுகின் 'பின்னணி’யின் அழகை மற்றவர் கற்பனை செய்துகொள்ள அது ஒரு தூண்டுகோலாக அமைவதால்!

எஸ்.இராமதாஸ், சேலம்-30.

மூப்பும் இறப்பும் இல்லையெனில் மனிதன் பக்தி, ஆன்மிகம் இவற்றில் நாட்டம்கொண்டு இருப்பானா?

மாட்டான்! கடவுளான பிறகு எதற்கு பக்தியும் ஆன்மிகமும்?!

வெ.கா., கடையநல்லூர்.

திகில் - த்ரில் வேறுபாடு என்ன?

முதலாவது நெகட்டிவ். ரெண்டாவது பாசிட்டிவ்!

திகில் என்பது - 'உங்க ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தேன்...’ என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் டாக்டர் மௌனமாக இருக்கும்போது; குழந்தையை ஸ்கூலில் இருந்து அழைத்து வரச் சென்றபோது, 'உங்க பொண்ணு அப்பவே போயிடுச்சே...’ என்று வாட்ச்மேன் சொல்லும்போது; 'அம்மா உங்களை உடனே வந்து பார்க்கச் சொன்னாங்க...’ என்று போனில் அமைச்சருக்குத் தகவல் வரும்போது...  ஏற்படும் உணர்வு!

த்ரில் என்பது - திருப்பதிக்குப் போக, ரேணிகுண்டாவில் நீங்கள் இறங்கும்போது, அங்கே சற்றுத் தொலைவில் உங்கள் மனம் கவர்ந்த எதிர் வீட்டுப் பெண் தென்படும்போது; நட்சத்திர ஹோட்டலுக்குள் நீங்கள் நுழைய, திடீர் என அங்கே ரஜினி எதிர்ப்பட்டு, அவர் உங்களைப் பார்த்துப் புன்னகைக்கும்போது; உங்கள் முதல் சிறுகதை விகடனில் பிரசுரமாகி, அந்தப் பக்கத்தை நீங்கள் புரட்டிப் பார்க்கும்போது... ஏற்படும் உணர்வு!

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

ஒரே நேரத்தில், இரண்டு கைகளிலும் பேனா பிடித்து உங்களால் எழுத முடியுமா? அதுவும் வெவ்வேறு மொழிகளில்? உலகில் யாருக்காவது அந்தத் திறமை இருந்து இருக்கிறதா?

என்னால் முடியாது. ட்ரை பண்ணேன். ரொம்ப மோசம்! உலகில் சுமார் 95 சதவிகிதம் பேர் 'வலது கை’க்காரர்கள்தான். ஏன், என்பதற்குக் காரணம் இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை. மொழி, எழுத்து எல்லாம் தோன்றுவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வலது கைப்பழக்கத்துடன்தான் வளைய வந்தான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மூளையின் இடது பக்கம்தான் உடலின் வலது பக்கத்தை இயக்குகிறது என்பது தெரிந்த விஷயம். ஆனால், அதற்கும் வலது கைப் பழக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு வயது வரை குழந்தை இரு கைகளையும் Equal ஆக எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறது. போகப் போக வலது கைப் பழக்கம் வந்துவிடுகிறது. ஏன் இப்படி?! கலாசாரப் பழக்கமா? தெரியவில்லை!

இரு கைகளையும் பயன்படுத்துவதற்கு Ambidexterity என்று பெயர். லியனார்டோ டாவின்சி இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் எழுதுவார், ஓவியம் வரைவார். வித்தியாசமே தெரியாது. இப்போதும்கூட ஏராளமானவர்களுக்கு இந்தத் திறமை இருக்கக்கூடும்!

எஸ்.சேதுகுமாரி, துவரங்குறிச்சி.

ஊழல் பேர்வழிகளைச் சிறையிலிட்டுப் பாதுகாக்காமல் தண்ணீர் மட்டும் கொடுத்து பாலைவனத்தில் விட்டுவிட்டால் என்ன?

சரி, தண்ணீர் எதற்கு?