
இப்படித்தான் ஒருநாள் மூலக்கொத்தளத்தில் முத்துக்குமாரை எரித்துவிட்டுத் திரும்பினோம்.
"மச்சான்... போன வருஷம் நம்ம அரசன் கல்யாணத்துக்கு வந்த கலைக் குழுவுல இந்தப் பொண்ணு வந்துச்சு மச்சான். பறையடிச்சுக்கினு இன்னாமா பாடி ஆடுச்சுங்கிற... சிரிச்சுச் சிரிச்சு விளையாடிக்கினு இருந்தது இன்னும் கண்ணுக்குள்ளய நிக்குது மச்சான்... இன்னாடா இப்பிடிப் பண்ணிக்கிச்சு..!''
காஞ்சிபுரம் பொது மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் போது, குமுறி அழுகிறான் பரமு. யார் யாரோ அழுகிறார்கள். கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் கறுப்பாக, கெச்சலாகப் புன்னகைக்கும் செங்கொடியை நானும் எங்கேயோ பார்த்து இருக்கிறேனே..?
செங்கொடிக்கு அப்படியே என் தங்கை தாரிணியின் சாயல். ஊருக்குப் போனால், ஓடி வந்து எண்ணெய்த் தலையை என் நெஞ்சில் அழுத்தும் தாரிணியின் சாயல். உள்ளங்கையை இறுக்கிக் கோத்துக்கொண்டு தோளில் கோலம் போடும் அதே அவளின் சாயல். தாரிணி 10-வது படிக்கிறாள். தஞ்சாவூர் ஈ.பி. காலனி சாலையில் இருந்து லேடி பேர்டு சைக்கிளில் தினமும் வீட்டுக்கு அந்தியை அழைத்து வருவது அவள்தான்.

அலைபேசியோடு கலகலத்து மொட்டை மாடிக்கு ஓடுகிறாள். சன் மியூஸிக்கில் பாடல்வைத்துக் கூடவே பாடுகிறாள். சித்தப்பாவுக்கு பட்டப் பெயர்கள் வைக்கிறாள். எங்கிருந்தோ அவள் கொண்டுவந்து கொட்டும் ஜோக்குகளும் கமென்ட்டுகளும்தான் வீட்டை நிறைக்கின்றன. காலையில் அவளுக்குத் தலை வாருவது என்பது தினசரித் திருவிழா. அவள் பருவங்களைக் கடப்பதை அச்சமும் பெருமையுமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் நாங்கள். அவள் கல்யாணத்துக்கு என்று வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி இருக்கிறார் சித்தப்பா. 'இந்த வயதைக் கடந்துவிட்டோமே’ என்ற ஏக்கத்தை விதைத்தபடி, ஒரு பூச் செடியைப்போல வளர்ந்துகொண்டு இருக் கிறாள் தாரிணி.
நீ ஏன் செத்துப்போனாய் செங்கொடி? இப்படித் தீவைத்துக்கொண்டு வலித்துத் துடித்து ஏன் செத்துப்போனாய்? கனவுகளோடு தூங்கி இருக்க வேண்டிய இரவில், தீக்குளிப்பதற்குத் திட்டமிடும் துணிவை ஏன் கொண்டாய்? உடலைத் தீ தின்னும் நொடி களை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத போது, எப்படியடி அதைச் செய்தாய்? அணையவே அணையாமல் நினைவில் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது உன் செயல். மருத்துவமனையில் இருந்து பாலிதீன் பையில் சுருண்டு வந்த உன்னைப் பார்த்தபோது, என் கண்களில் தளும்பி வழிந்தது தாரிணிதான் தங்கச்சி.
மங்கலபாடியில் செங்கொடி வளர்ந்த மக்கள் மன்றத்துக்கு உடல் போனபோது, நிறைய சின்னப் பிள்ளைகள், ''அக்கா... அக்கா'' எனக் கதறி அழுதார்கள். ''அய்யோ... இந்தப் புள்ளைகளுக்கு எல்லாம் தெனமும் செங்கொடிதான் டூஷன் எடுக்கும். எப்பமும் 'அக்கா... அக்கா’ன்னு இதுங்க அதுகூடயேதான் கெடக்கும்...' என்றார் ஒரு பெரியவர். 'ஓர் உயிர் எல்லாவற்றையும்விட மேலானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதைவிடவும் பெரிது எமது உரிமை, விடுதலை, பெருமிதம்’ என்ற வாசகங்களோடு பிரபாகரன் தீபம் ஏற்றும் புகைப்படத்துக்கு எதிரே கண்ணாடிப் பெட்டிக்குள் கிடந்த செங்கொடிக்கு இப்போது என் அம்மாவின் சாயல் வந்திருந்தது!
செங்கொடியை எரித்துவிட்டுத் திரும்பும் போது, பரமு கோபமாகச் சொன்னான், ''ச்சே... என்ன சொசைட்டி மச்சான் இது. இப்போ போய்ப் பாரு... தியாகராஜா தியேட்டர்ல 'மங்காத்தா’வுக்கு நிக்கிற கூட்டம்கூட இங்க வரலியேடா!'
இப்படித்தான் ஒருநாள் மூலக்கொத்தளத்தில் முத்துக்குமாரை எரித்துவிட்டுத் திரும்பினோம்.
வடபழனி டிராஃபிக்கில் சிக்கி நிற்கும்போது, அருள்எழிலன்தான் பதற்றமாக அலைபேசினான், ''முருகா... முத்துக்குமார்னு ஒரு பையன் சாஸ்திரிபவன் வாசல்ல தீக்குளிச்சுச் செத்துட்டான்டா...'
எழுதிவைத்த அத்தனை தீர்க்கமான கடிதத்தை விநியோகித்துவிட்டு, சாஸ்திரி பவன் வாசலில் கருகிக்கிடந்தான் முத்துக்குமார். அப்படியே குரு அண்ணன் சாயலில் இருந்தான். மெரினா கடற்கரையில் ஐஸ்க்ரீம் விற்கும் ஏழைத் தகப்பனுக்குப் பிறந்தவன். என்னைப்போல் ஒரு பத்திரி கைக்காரன். என்னைப்போல் சினிமா உதவி இயக்குநன். மனசுக்குப் பிடித்த பெண்ணுக்கான ஆசைகளை முத்துக்குமாரும் சேமித்துவைத்து இருப்பான். சன் டி.வி-யில் சோபாவில் அமர்ந்து பேட்டி கொடுக்கும் கனவுகள் அவனுக்கும் இருந்திருக்கும். பெற்றவர்களையும் சகோதரியையும் அழைத்துப் போய் போத்தீஸில் திருநாளுக்குத் துணி எடுத்துத் தரும் ஒரு நாள் அவனுக்கும் வாய்த்திருக்கும். பிள்ளைத்தாச்சியாக இருந்த தங்கச்சியின் சீமந்தத்தில் புதுச் சட்டையோடு உலவி, அவள் பிள்ளைக்குக் கொலுசு போட்டு, பிரபாகரன் என்றோ... ஆதிரை என்றோ பெயர்வைக்கும் ஒருநாள் வந்திருக்கும். சாஸ்திரி பவன் பக்கத்து காலேஜ் ரோட்டில் பைக்கில் பறந்து, இஸ்பஹானியில் குழுமிக் கொண்டாடி, எம்.ஓ.பி. பஸ் ஸ்டாப்பில் சைட் அடித்தபடி... ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருந்தபோது, இவன் மட்டும் இன அழிப்புக்கு எதிராகத் தன்னைத்தானே எரித்துக்கொண்டது ஏன்?

அன்று, முத்துக்குமாரை எரியூட்டிவிட்டுத் தாள முடியாத மன அழுத்தத்தில் திரும்பும்போது அருள்எழிலனிடம் கேட்டேன், ''அது ஏன் மச்சான், முத்துக்குமாரைப் பாக்கறதுக்கு இந்த ரஜினி, கமல்லாம் வரலை?''
''அடப் போடா இவனே... கலைஞர், ஜெயலலிதாவே வரலை. வெளில யாருக்குமே தெரியலைனு வெச்சுக்க... இந்நேரம் கார்பரேஷன் வண்டில அள்ளிப் போட்டுப் போயிட்டே இருப்பானுங்க. ஒருத்தன் ஏன்டா தீக்குளிக்கிறான்? நெஞ்சு நிறையக் கோபம். ஆனா, எதுவும் பண்ண முடியலைங்கிற இயலாமை... கண்ணு முன்னாடி ஆயிரக்கணக்கான அண்ணந்தம்பி, அக்கா தங்கச்சிக சாவுதுங்க... நம்மால ஒண்ணும் பண்ண முடியலையேங்கிற துக்கம் பெருசுடா... தூக்கம் இல்லாம, டிப்ரஷன் அதிகமாகி தன்னைத்தானே எரிச்சுக்கிட்டு சாவுறான் பார்த்துக்க. என் உடம்பையே உயிர் ஆயுதமாக்கி போராட்டத்தைத் தொடருங்கனு சொல்லிட்டுப் போயிட்டான்டா... ஏன்? ஏனா, இங்கே எல்லாரும் எல்லாத்துக்கும் எப்பவும் ஒண்ணு திரள மாட்டான். எல்லாத்துக்கும் காரணம், இந்த நாட்டோட கேவலமான பாலிடிக்ஸ்... இந்தத் தலைவருங்களோட கேவலமான சுயநலம்... எல்லாத் தலைவர்களும் ஒண்ணா நின்னு இதை எல்லாம் எதிர்த்துக் கேட்டா, எவனும் செத்து இருக்க மாட்டான் பார்த்துக்க!'
முத்துக்குமாரும் செங்கொடியும் சாக முழு முதற்காரணம் இந்தத் தேசம்... இதன் அதிகார மையங்கள்!
உண்மையில் இன்றைய எங்கள் தலைமுறைக்கான அரசியல் என்பது, உலக மயமாக்கலுக்குப் பிறகான குழப்பமான அரசியல். ஊடகங்களும் பொழுதுபோக்குகளும் மலிந்துவிட்ட நாட்டில், பொதுமக்களுக்கான அரசியல் ஈர்ப்புகளும் மழுங்கடிக்கப்படுகின்றன. வசதி வாய்ப்புகளும் அநீதிகளும் பெருகிவிட்ட சமூகத்தில் எந்த அரசியலைத் தேர்ந்தெடுப்பது? எவர் பின்னே போவது? என்ன செய்வது என்ற குழப்பமும் கலக்கமும் இந்தத் தலைமுறைக் குச் சாபம்போல் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊழலும் அலட்சியங்களும் பெருகிவிட்ட சமூகம். 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்... இந்தத் தலைமுறையின் வரலாற்றை, எங்களைத் தாளாத துயரமாக அழுத்திக்கொண்டு இருக்கிறது!
மே 17 அன்று பிரபாகரன் கொல்லப்பட்டதாக, அவரது உடல் என்று காட்டப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சியில் விரிந்தபோது எங்கே போவது? யாரைக் கேட்பது? என்ன செய்வது? எனத் தவித்துஅலைந்த பெரும் இளைஞர் கூட்டத்தை நான் அறிவேன். எங்கெங்கு இருந்தோ போன் பண்ணிக் கோபம் பொங்கிய நண்பர்கள், கூட்டம் போட்டுக் கொந்தளித்தவர்கள், எங்கே என்ன போராட்டம் என்றாலும் ஓடிப் போய் நின்றவர்கள், போராட்டத்துக்கும் பொருளுக்கும் உதவிய ஐ.டி. தோழர்கள், அவ்வளவு பேரும் இளைஞர்கள். சிதறிக்கிடந்த கோப நெருப்பைக் குவிக்க ஒரு மையம் இல்லையே. இலக்கு இல்லாமல், தலைமை இல்லாமல், குமுறிக் குமுறி கனலும் நெருப்பு. அதை ஒன்று சேர்க்க முடியாததுதானே இன்று வரை தொடரும் துயரம். அதுதானே இந்தத் தலைமுறைக் கான சாபம். அதனால்தானே முத்துக்குமாரும் செங்கொடியும் உயிரை மாய்த்துக் கொண்டனர்!
செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் பேசிய டி.எஸ்.எஸ்.மணி, ''செங்கொடி நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது. நாங்கள் தீவிரமான உணர்வுகளைச் சொல்லிச் சொல்லி வளர்த்து, உங்களை இப்படி ஒரு மரணத்தில் தள்ளிவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி வருகிறது...'' என்றார்.
இது நேர்மையான குற்ற உணர்ச்சி. இது நம் எல்லாத் தலைவர்களுக்கும் இப்போதா வது வர வேண்டும். காலங்காலமாக பேசிப் பேசி, எங்களைத் தெருவில் இறக்கி விட்டு, நீங்கள் உங்கள் மாளிகைகளை உள் பக்கமாகச் சாத்திக்கொண்டுவிட்டீர்கள். அநீதிகளுக்கு எதிராக அணி திரட்ட, வழி நடத்த, ஒன்று சேர்க்க முடியாத அத்தனை தலைவர்களுக்கும் இந்தக் குற்ற உணர்வு வர வேண்டும்.
மலையாளத்தில் ஜான் ஆபிரகாம் இயக்கிய 'அம்ம அறியான்’ என்ற திரைப்படம் இருக்கிறது. கேரளாவில் நக்சல்பாரி இயக்கம் வேகமாக வளரத் தொடங்கிய காலகட்டத்தில், நிறைய இளைஞர்கள் அதில் இழுக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில், அரசியலும் வாழ்க்கையும் பந்தாட, வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை ஒரு அம்மாவுக்கும் மகனுக்குமான உறவை மையமாக வைத்துப் பேசுகிற படம் இது. ஒரு வகை யில் 40 ஆண்டு காலத் திராவிடக் கட்சி களின் வழி நடத்துதல், நம்மைக் குழப்ப மான அரசியல் சூழலில்தான் தள்ளி விட்டு இருக்கிறது. இந்தத் தலைமுறைக்கு அவர்கள் தந்திருப்பது இயலாமையும் கோபமும் கையறு நிலையும்தான்!

முத்துக்குமாரும் செங்கொடியும் இதை அறுத்தெறியத் தங்கள் உயிர்களையே தந்துவிட்டார்கள். மிகுந்த அரசியல் அறிவு நிலையில் முத்துக்குமார் அந்த முடிவை எடுத்ததை அவனது கடிதம் சொன்னது. உண்மையில் இந்தத் தலைமுறையின் இன, அரசியல் எழுச்சி முத்துக்குமாரும் செங்கொடியும் தந்ததுதான். உண்மையில் அவர்கள் நெருப்புவைத்தது அநீதிக்கு எதிராக ஒன்று திரளாத சமூகத்தையும், வறட்டு மௌனம் காக்கும் போலி ஜனநாயகத்தையும் பொசுக்கும் நெருப்பு என்பதை அதிகார மையங்கள் புரிந்துகொள்ளட்டும். முத்துக்குமாரும் செங்கொடியும் சொல்லி விட்டுப்போன மானுட அன்பையும் கோபத்தையும் உயிரை மாய்த்துக்கொள்வதில் அல்ல... ஒன்று திரள்வதிலும் உண்மையான போராட்டங்களினாலும் முன்னெடுப்போம் நண்பர்களே!
காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பும்போது சித்தி போன் பண்ணியது, ''ஏம்ப்பா... நெனப்பிருக்குல்ல, காரண காரியம் சொல்லாம ஒழுங்கு மரியாதையா வந்து சேரு...'
ஆமா, அடுத்த வாரம் பெரிய தங்கச்சி நந்துவுக்கு வளைகாப்பு. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தால் முத்துக்குமார் என்றும், பெண் குழந்தை பிறந்தால் செங்கொடி என்றும் பெயர்வைத்து, என் ஆயுள் முழுக்கக் கொஞ்சித் தீர்ப்பேன்!
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan