சிறப்பு கட்டுரை
Published:Updated:

நல்லாசிரியர்

நல்லாசிரியர்

நல்லாசிரியர்

விழிகள் நிறையக் கண்ணீரைத் தேக்கி நிற்கிறான் விகடன்!

அரை நூற்றாண்டு காலமாக ஆனந்த விகடனின் முதல் தொழிலாளியாக இருந்த விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79), டிசம்பர் 19-ம் தேதி இரவு 7:30 மணியளவில் நம் அனைவரையும் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிவிட்டார்.

எஸ்.பாலசுப்ரமணியன், விகடனின் வரமும் உரமுமாக இருந்தவர். விகடனை தமிழகத்தின் செல்லமாக வளர்த்தெடுத்தவர். 'விகடன் எழுத்து வித்தையை’ கைக்கொள்ள ஒவ்வொரு பத்திரிகையாளனையும் ஏங்கச் செய்தவர். விகடனின் முதல் ரசிகர்; விகடனின் தீவிர விமர்சகர்.

எளிமைதான் அடையாளம். எழுத்துதான் இயக்கம். அன்புதான் ஆயுதம். பணிவுதான் கேடயம். துணிவுதான் துணை. முழுக்கை கதர்ச் சட்டை, வேட்டி, துண்டு, ஏறிய நெற்றி, அதில் நெற்றிக்கண்ணைப்போல சிவந்த பொட்டு, உள்ளம் ஊடுருவும் கண்கள், கோயில் மணிக் குரல்,  'சபாஷ்’ சொல்லும் ஆதரவு, பிழை திருத்தும் அதட்டல்... என, கறார் கரிசனத்தோடு வலம்வந்தவர். தன் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும், இதழியல் அறத்தையும் செய்நேர்த்தியையும் செம்மையாகப் பயிற்றுவித்த தாயுமானவர். சமகாலத் தமிழ்ப் பத்திரிகையுலகின் சரித்திர நாயகர்.

நல்லாசிரியர்

புதுமையான உள்ளடக்கம், நவீனத் தொழில்நுட்பங்கள், பிரமாண்டமான பரிசுப் போட்டிகள், வாசகர் திருவிழாக்கள்... என எப்போதும் பேசுபொருளாக விகடன் இருக்க இவரே காரணம். அரசியல் விமர்சனங்களையும், கடைக்கோடி மக்களின் பிரச்னைகளையும் பேச தமிழின் முதல் சமூக, அரசியல், புலனாய்வு இதழான 'ஜூனியர் விகடன்’ இதழைத் தொடங்கியவர். 'விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’, இவர் நனவாக்கிய நல்ல கனவு. இந்தத் திட்டத்தின் கீழ் உருவான பத்திரிகையாளர்கள், இன்று உலக ஊடகப் பரப்பெங்கும் நிறைந்துள்ளனர்.

ஆசிரியர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விவசாயி... என இவருக்குத்தான் எத்தனை முகங்கள். மனிதருக்கு, பறவை வளர்ப்பிலும் அலாதி ஆர்வம்.

விகடன் பிரசுரத்துக்கு வரும் படைப்புகளின் தரத்தை மதிப்பிடுவதிலும், அதன் கருப்பொருள் உணர்ந்து திருத்துவதிலும், இவரின் தனித்தன்மையை இலக்கிய உலகம் அறியும். தமிழ்ச் சிறுகதைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய 'முத்திரைக் கதைகள்’ இவருடைய ரசனையின் அடையாளம். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட படைப்பாளிகளுக்கு வெகுஜனப் பரப்பில் தனி மேடை அமைத்துத் தந்தவர்.                   முதல் தலைமுறையினர், புதிய திறமையாளர்கள், அபூர்வமான கலைஞர்கள் எனத் தேடித் தேடிக் கண்டறிந்து களங்கள் அமைத்துக் கற்றுத்தந்த ஆசான்.

எஸ்.பாலசுப்ரமணியன், தன் வாசகர்களைத்தான் ஆசிரியர்களாக மதிப்பார். பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரை ஒன்று, ஏதோ ஒருவகையில் தன்னைப் பாதிப்பதாக எங்கோ ஒரு மூலையில் இருந்து           ஒரு வாசகர் கடிதம் எழுதினாலும், அவர் விசாரணையில் மொத்த அலுவலகமும் ஸ்தம்பிக்கும். தவறு நேர்ந்திருந்தால், அதற்காக முழுமனதுடன் மன்னிப்புக் கேட்கவும் தயங்க மாட்டார். தன் வாசகர்களை போராளிகளாக, பொதுநல விரும்பிகளாக, சமூக ஆர்வலர்களாக மாற்றிய மாமனிதர்.

நல்லாசிரியர்

பத்திரிகை ஆசிரியர் என தன் அறையோடு நின்றுவிடாமல், களமிறங்கிப் பணியாற்றியவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி தாண்டவமாடியபோது, விவசாயிகள் பசி, பட்டினியில் வாடினர். மனம் பதைபதைத்தவர், ஏழை விவசாயிகளின் பசியைப் போக்க அரிசி வழங்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை, அரசாங்கத்தின் காதுகளுக்குக் கொண்டுசென்றார். எவ்வளவோ கேட்டும் எழுதியும் அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில், விகடன் சார்பில் கிராமங்களைத் தத்தெடுத்து, அங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம்தோறும் அரிசி வழங்கினார். விவசாயிகளின் துயரத்தை உணர்ந்து தக்க சமயத்தில் வாசகர்களுடன் கைகோத்து உதவிசெய்த ஈர மனசுக்காரர்.

பத்திரிகை உலகில் உன்னத நெறிகளையும் லட்சியங்களையும் கொண்டிருந்த எஸ்.பாலசுப்ரமணியன், ஆனந்த விகடனின் தாரக மந்திரமான 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்பதை, எப்போதும் தன் மனதில் இருத்தியவர்.

சாதி-மதப் பிரிவினைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகள், சடங்குகள் அனைத்தையும் அறவே ஒதுக்கியவர். மரணத்துக்குப் பிறகும் தனது உடலை மருத்துவ மாணவர்கள் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தானமாகத் தந்திருக்கிறார்.

தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னோடியாகவும், அறநெறிகளின் வழிகாட்டியாகவும் திகழ்ந்த எங்கள் ஞானத் தகப்பனை இழந்து தவிக்கிறோம். அவர் வகுத்துத் தந்த பாதை எங்கள் முன்னே நீண்டிருக்கிறது. இது நீண்ட நெடிய பயணம். தமிழ் கூறும் நல்லுலகத்தின் அன்பு எப்போதும் ஆதரவாக இருக்க, கண்களில் கனவுகளுடன் உள்ளத்தில் ஒளியுடன் தனது நூற்றாண்டை நோக்கி இதோ வீறுநடை போடுகிறான் விகடன்.

எங்களின் அன்பை, நன்றியை, எங்கள் பிதாமகன் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் ஆன்மாவுக்குக் காணிக்கையாக்குகிறோம்!