மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஓவியங்கள்: சேகர்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

 200   

கிண்டல்காரர்கள் உதவுவார்களா?

ன் தோழியைப் பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டினர் வந்து சென்றார்கள். மாப்பிள்ளை கொஞ்சம் உயரம் குறைவு என்பதால், அதற்குப் பிறகு மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்காமலே வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். பிறகு, மாப்பிள்ளையைப் பற்றி எதார்த்தமாக தெரிய வந்த விஷயங்கள்... ’மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கிறார். எந்த கெட்டபழக்கமும் இல்லை'. இது தெரிந்ததும் தோழியின் வீட்டில் கொஞ்சம் தடுமாறினார்கள். ஆனாலும், ”இவரைத் திருமணம் செய்தால் பார்ப்பவர்கள் கிண்டல் செய்வார்கள்'' என்று சொல்லி, அந்தப் பேச்சுக்கே தடைபோட்டுவிட்டாள் என் தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன!

எதற்கெடுத்தாலும் கிண்டல் செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம், வறுமையில் வாடினால், இப்படி கிண்டல் செய்பவர்கள் வந்து உதவுவார்களா என்ன? தேவையில்லாத விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தாமல், திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டால், வாழ்க்கை இனிதாகும்தானே!

- இரா.நந்தினி, வந்தவாசி

தொ(ல்)லைக்காட்சி யோசனை!

அனுபவங்கள் பேசுகின்றன!

சென்னையில், ஐ.டி துறையில் பணிபுரியும் தோழியைப் பார்த்து, என் திருமண அழைப்பிதழை நேரில் தருவதற்காக ஒரு நண்பகலில் அவளைச் சந்தித்தேன். அழைப்பிதழை தந்துவிட்டு சிறிது நேரம் அவளுடைய அறையில் இருந்த டி.வியை பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தோம். கிளம்புகிற சமயம், தானும் வெளியே வருவதாகக் கூறியவள், டி.வி. ரிமோட்டை என்னிடம் தந்துவிட்டு முகம் கழுவச் சென்றாள். அவள் வந்ததும் டி.வியை ஆஃப் செய்து கிளம்பினேன். உடனே, டி.வியை ஆன் செய்து ரிமோட்டில் வால்யூமை பூஜ்யத்தில் வைத்த பிறகு ஆஃப் செய்தாள் தோழி. காரணம் கேட்டதற்கு, ”ஷிஃப்ட் முடித்து வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடுவது வழக்கம். உடனே தூக்கம் வராது என்பதால், சிறிது நேரம் டி.வி பார்ப்பேன். அப்போது டி.வியை ஆன் செய்யும்போது, பகலில் வைத்திருந்த வால்யூம் இரவில் மிகவும் சத்தமாக ஒலிக்கும். என்னதான் சுதாரித்து உடனே வால்யூமை குறைத்தாலும், நொடி நேர சத்தம்... வயதான பெற்றோர், தம்பி, தங்கைகளின் தூக்கத்தைக் கலைத்துவிடும்'' என்றாள்.

நல்ல முன்யோசனைதானே!

- ஏ.சௌமியா, சேலம்

பொழுதுபோக்காக ஒரு வருமானம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

குழந்தைகளுடன் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஹாலில் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் அழகான பெயின்ட்டிங் கவர்ந்து இழுத்தது. ”எங்கே வாங்கினாய்?'' என்று கேட்டேன். இதற்குத் தோழி சொன்ன பதில், ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ”மகன் ப்ளஸ் டூ படிக்கிறான். அவன் இரவில் படிக்கும்போது, அவனுக்கு கம்பெனி கொடுப்பதற்காக நானும் அமர்ந்திருப்பேன். ’அவனை டிஸ்டர்ப் செய்யாமல் நாம் என்ன செய்வது?' என்று யோசித்து பெயின்ட்டிங் செய்ய ஆரம்பித்தேன். இது எனக்கு பொழுதுபோக்காக மாறி, இப்போது வருமானத்தையும் தருகிறது. அவனும் நன்றாக படிக்கிறான்'' என்றாள் தோழி.

நாமும் குழந்தைகளுடன் அமர்வோமே!

- அனுராதா ரமேஷ், பாண்டிசேரி

பூ கொடுக்காத சாமீ!

அனுபவங்கள் பேசுகின்றன!

சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு பெண்களுக்கெல்லாம் பூ, குங்குமம் கொடுத்துக்கொண்டிருந்த அர்ச்சகர், சின்ன வயது பெண் ஒருத்திக்கு மட்டும் கொடுக்கவில்லை. ”சாமீ... எனக்கு பூ தரல'' என்று அவள் வாய்விட்டுக் கேட்டபோதும், கண்டுகொள்ளாமலேயே நகர்ந்துவிட்டார் அர்ச்சகர். அவளுடைய முகம் வாடிப்போக, இரண்டு ரூபாய் காயினை கொடுத்து தட்டில் போட சொன்னேன். உடனே, அவளுக்கும் பூ கொடுத்தார் அர்ச்சகர். சின்னப் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, எனக்குள்ளும் தொற்றிக்கொண்ட அதே சமயம், அந்த அர்ச்சகரின் செயல் வேதனைப்படவும் வைத்தது!

- பி.கவிதா, சிதம்பரம்