கலக்கல் வருமானம் தரும் க்ளே கிராஃப்ட்!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்
தாய்லாந்தில் வசிக்கிறார், பிரியா நந்தகுமார். க்ளே வேலைப்பாடுகளில் கலக்குபவர். இது சம்பந்தமாக சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக வந்திருந்தவரைச் சந்தித்தோம்!

''சென்னைப் பெண்ணான நான், திருமணத்துக்கு அப்புறம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் செட்டில் ஆகி 10 வருஷம் ஆயிடுச்சு. அஞ்சு வருஷத்துக்கு முன்ன க்ளே வொர்க் கத்துக்கிட்டேன். ஆன்லைன்ல இது சம்பந்தமான பயிற்சிகள் எடுத்தேன். அப்பப்போ சென்னை வரும்போது, இங்க க்ளே வொர்க்ஷாப் நடத்துறது வழக்கமாச்சு. ஒரு ஹாபியா கத்துக்கிட்ட இந்த ஆர்ட், இப்போ எனக்கு பிசினஸ் ஆகியிருக்கு. விதவிதமான பூக்கள், மாலைகள், பார்பி டால்னு நிறையப் பொருட்களை க்ளே பயன்படுத்தி செய்வேன். இங்கே உங்களுக்கு என்னோட கிஃப்ட்... க்ளே வாடாமல்லிப் பூந்தொட்டி!'' என்று ஆர்வமானார் பிரியா!
தேவையான பொருட்கள்:
ஏர் ட்ரை க்ளே, ஆயில் கலர், ரோலர், இலை வடிவத்துக்கான பேஸ் பொருட்கள், பாலித்தீன் ஷீட், கம்பி, காட்டன் பட் ரவுண்ட், ஃபெவிக்கால், கட்டர், வெய்னர், வாஸ்லின், கத்தரிக்கோல் (Fine Tip Scissors), கட்டிங் ப்ளையர்.

செய்முறை:
படம் 1: சிறிதளவு க்ளேயில் வெள்ளை மற்றும் ரோஸ் நிற ஆயில் கலர்கள் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
படம் 2. காட்டன் பட்'ஐ, படத்தில் காட்டியுள்ளபடி கம்பியில் சுற்றி, அதைச் சுற்றி ஃபெவிக்கால் தடவிக்கொள்ளவும்.
படம் 3: சிறிதளவு க்ளேயை அதன் மீது பூசவும்.
படம் 4: க்ளேயை நன்றாக ஸ்மூத் செய்த பின், கத்தரிக்கோல் கொண்டு படத்தில் உள்ளது போல், ஊமத்தங்காய் மாதிரி சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
படம் 5: வாடாமல்லிப் பூவின் தண்டு மற்றும் இலைகள் செய்ய, தேவையான அளவு ஏர் ட்ரை க்ளேயில் பச்சை நிற ஆயில் கலர் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
படம் 6: பாலித்தீன் ஷீட்டில் வாசலினை தடவிக் கொள்ளவும். இது, பேப்பரில் க்ளே ஒட்டாமல் தவிர்க்கும்.
படம் 7: ரோலர் கொண்டு சப்பாத்திமாவுக்கு உருட்டுவதுபோல் க்ளேயை உருட்டிக்கொள்ளவும்.
படம் 8: கட்டரைப் பயன்படுத்தி இலைகளை படத்தில் உள்ளது போல் கட் செய்து, ஓரங்களை ஸ்மூத் செய்யவும்.
படம் 9, 9A: தண்டுப் பகுதிக்கு கம்பியில் ஃபெவிக்கால் தடவி, அதன் மீது பச்சை கலர் கலந்த க்ளேயை ஒட்டவும்.
படம் 10, 10A: இலைகளுக்கு வடிவம் அமைக்கவும். பின்பு, பூவின் அடியில் ஃபெவிக்கால் தடவி, இரண்டு சிறிய இலைகளை ஒட்டவும். தண்டுப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தில் இடைவெளிகள் விட்டு, ஹோல் செய்து, அதனுள் ஃபெவிக்கால் தடவி பெரிய இலைகளை செருகவும்.
படம் 11: தண்டில் இலைகளைச் சேர்த்து முடித்த பின், வாடாமல்லிப் பூவின் கீழ்பகுதியில் ரோஸ்கலர் ஆயில் கலரை அப்ளை செய்யவும். இதேபோல் அதிக எண்ணிக்கையில் செய்துகொள்ளவும்.

செய்து முடித்தவுடன், "எப்படி இருக்கு... கலர்ஃபுல் க்ளே வாடாமல்லிப் பூக்கள்! இதை ஒரு பூந்தொட்டியில ரசனைக்கு ஏற்ப செட் செய்துக்கலாம்! பூக்கள், தண்டுகள், இலைகள்னு எண்ணிக்கையைப் பொறுத்து விலையை நிர்ணயிக்கலாம். குறைஞ்சது 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விலை வெச்சு விற்கலாம். வீடு, ஹோட்டல் வரவேற்பறைனு ஆர்டர் வாங்கி செய்து கொடுக்கலாம். இன்னிக்கு இந்த க்ளே கிராஃப்ட்டுக்கு மார்க்கெட்ல நல்ல வரவேற்பு இருக்கு. இந்தத் துறையில ஆர்வமுள்ளவங்க, இதைப் பயன்படுத்தி முன்னேறலாம்'' என்றார் பிரியா நந்தகுமார் உற்சாகத்துடன்!
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...