மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

அஞ்ஞானச் சிறுகதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்ஞானச் சிறுகதைகள்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

''எனது சுயநலத்துக்காகத்தான் இந்தக் கண்டுபிடிப்பு. ஆனால், மனிதகுலத்துக்கே இது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக இருக்கும்' என்றான் ஷான் சிரித்தபடி ஆதிஷிடம். இவர்கள், அட்வான்ஸ்டு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சென்டரின் முதல் தர மாணவர்கள். 

'ஈகா என்னை உண்மையில் காதலிக்கிறாளா? அவள் எனக்காகப் பிறந்தவள்தானா என்பதைக் கண்டறியும் ஒரு காஸ்மோ ரேடியோடிக் கருவி இது. இதற்கு 'பைடன்’ எனப் பெயர் வைத்திருக்கிறேன்' - உள்ளங்கையை விரித்து, நீல நிற ஸ்கிரீன் ஒளிரும் மெட்டாலிக் பாக்ஸ் ஒன்றைக் காட்டினான். ஆதிஷ், ஆச்சர்யமாக அவனைப் பார்த்தான். ஈகா, அவர்களின் சக மாணவி; தோழி.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

'ஆதாமின் விலாவில் இருந்துதான் ஏவாள் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பது நமக்குத் தெரிந்த கதை. ஆனால், அந்த புராசஸ் அச்சுப்பிசகாமல் இந்தப் பிரபஞ்சத்தில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே பல தம்பதிகளை வைத்து ரகசியமாக இதைச் சோதனை செய்துவிட்டேன். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான விலா எலும்பின் மேட்ச்சை, ரேடியேஷன் வழியாக நானோ டிஸ்கிரிப்ஷன்களாக கன்வெர்ட் பண்ணிக் கண்டுபிடித்துவிடும் இந்த பைடன். எனது விலாவின் விவரங்களை காலையில்தான் பதிவுசெய்தேன்' - சொல்லிவிட்டு ஷான் நிமிரவும், ஈகா தூரத்தில் தங்களை நோக்கி வருவதைப் பார்த்தான்.

'எனக்கு வயிற்றுப் பசி; உனக்கு காதல் பசி. இதை இப்போது ஈகாவிடம் சோதித்துப்பார்க்கப்போகிறாய் அப்படித்தானே? உன்னுடைய விலாவுடன் அவளுடையது மேட்ச் ஆனால், அவள் உனக்காகத்தான் பிறந்திருக்கிறாள் என்பது கன்ஃபார்ம் ஆகிவிடும் அல்லவா?'

'ஆமாம்’ என்பதுபோல புன்னகைத்தான் ஷான்.

'ஹாய்’ என்றபடி வந்து அமர்ந்தாள் ஈகா.

'பசிக்கிறது ஈகா. கேன்டீனில் ஏதாவது ஆர்டர் பண்ணலாமே!' என்றான் ஆதிஷ்.

ஷான் ரகசியமாக உள்ளங்கைக்குள் பைடனைச் செயல்படுத்தி, ரேடியேஷனை ஈகாவின் விலா எலும்பில் செலுத்தினான். நீலத் திரை சில நொடிகள் அலைவுற்று 'நோ மேட்ச்’ என ஒளிர்ந்து அணைந்தது.

'நான் இல்லையா! வேறு யாராக இருக்கும்?’ என, ஒரு கணம் அதிர்ந்து யோசித்தான்.

''இப்போதைக்கு என்னிடம் இதுதான் இருக்கிறது' என்றபடி ஈகா தன் கைப்பையில் இருந்து ஆதிஷிடம் எதையோ எடுத்துக் கொடுத்ததை ஷான் பார்த்தான்.

அது, ஏற்கெனவே கடிக்கப்பட்ட ஒரு சிவப்பு நிற ஆப்பிள்.

லவ் ஊரு

'சொர்க்கமே என்றாலும்... அது நம்மூரைப் போல வருமா..?’ என, ஊர் மீதான லவ் இல்லாத யாரேனும் உண்டா? எந்த ஊர் சொந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரின் மேல் ஒரு 'பாசப்பயபுள்ளையாக’த்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். இந்த பில்ட்-அப்புக்குக் காரணம், இங்கே நீங்கள் பார்க்கும் 'ஐ லவ் நியூயார்க்’ லோகோதான். உலகத்திலேயே மிக அதிகமாக ரீமேக் செய்யப்பட்ட லோகோ இது.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

இதை வெவ்வேறு வடிவங்களில் டி-ஷர்ட்டிலோ அல்லது ஏதோ ஒரு பப்ளிக் நிகழ்விலோ நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த லோகோவை வடிவமைத்தவர், மில்டன் கிலேஸர் என்கிற வடிவமைப்பாளர்; விளம்பர ஆர்ட் டைரக்டர். 1929-ல் பிறந்த மில்டன், நியூயார்க்கின் கலை மற்றும் இசைப் பள்ளியில் பயின்றவர். 1977-ம் ஆண்டு நியூயார்க் மாநில பிரசிடென்ட்டாக இருந்த வில்லியம் எஸ் டோயல், சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகரிக்கச் செய்ய, விளம்பரங்களை உருவாக்கும் பொறுப்பை கிலேஸரிடம் ஒப்படைத்தார்.

அதற்காக மில்டன் உருவாக்கியதுதான் இந்த லோகோ. அன்றைய அமெரிக்க பாப் ஆர்ட் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த லோகோ, இன்று உலக பாப் கலாசாரத்தின் ஒரு சின்னம்.

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டபோது, இந்த லோகோ மறுஉயிர் கொண்டு நியூயார்க் மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது. இன்று நம் ஊர் முதல் பாலஸ்தீனம் வரை போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் டி-ஷர்ட்களில்

'ஐ லவ் பாலஸ்தீன்’ போன்ற லோகோக்களை அணிந்துவருவதைப் பார்க்கலாம்.

இந்த லோகோவின் வெவ்வேறு வடிவங்களை, I Love NY parody என கூகிளிட்டால் காணலாம்.

நம்ம ஊரு சினிமாவில் வேண்டுமானால் ஐ லவ் மதுரை, ஐ லவ் நெல்லை... என டி-ஷர்ட்டில் வாசகங்கள் பதித்த ஹீரோக்களை ஆரம்ப சீனில் ஆடவிடலாம். நேட்டிவிட்டியை ஒரே ஷாட்டில் ஓ.கே பண்ணலாமே.  

ஐ லவ் ராதா, ஐ லவ் கீதா என மரத்தில் பெயர் எழுதிக்கொண்டிருந்தது எல்லாம் 'சின்னபூவே மெல்ல பேசு’ காலத்தோடு முடிந்துபோயிற்று. அதையே இப்போது ஒரு காபி கப்பில் பதித்துக்கொடுப்பது கலக்கலாகத்தான் இருக்கும்... அப்பாக்கள் அந்தக் கப்பில் காபி கலக்காத வரை!

கூதல் பருவம்.

தலைவி, தோழியிடம் சொல்லி அனுப்பியது.

''யானைகளின் மத்தகம் போன்ற முன்நெற்றியை உடையவனே... செங்குருதிப் போரில் அனல் எரியும் கண்களுமாய், முற்றிய காட்டுமரத்தைப் போன்ற உறுதியும், காட்டு எருதின் வலிமையும்கொண்ட உன் கால்களில் எதிரி நாட்டுப் போர் வீரனின் நச்சரவம் போன்ற அம்புகள் பாய்ந்ததினால், களமாட முடியாமல் போர்க்களத்தில் இருந்து உன்னைத் திருப்பி அனுப்பியதாக அறிகிறேன். கூதல் பருவத்தின் பெருங்காற்றில் ஆடும் சுடர்போல என் மனம் நடுங்கி... நிம்மதி இழந்துள்ளது. உடல் வற்றி, நோயுற்று நீ திரும்பி வந்தாலும் கன்றிற்காய் சொரியும் பசுவின் பால் முலைபோல உனக்காக நான் காத்திருக்கிறேன் என் தலைவனே!'

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

இரண்டாம் உலகப் போர், 1943.

உமையம்மாள், சிதம்பரதாணுவுக்கு எழுதிய மடல், ஆனி மாதம்.

'அன்பும் பாசமும்கொண்ட அத்தானுக்கு, உமையம்மாள் எழுதிக்கொள்வது.

ஜப்பானியப் படைகளிடம் இருந்து ரங்கூனை இந்தியா கைப்பற்றிவிட்டதாக அப்பா பேசிக்கொள்வதைக் கேட்டேன். நீங்கள் தற்போது எங்கே இருக்கிறீர்கள் என்ற தகவலை சரியாக அறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். வருகிற ஆவணி மாதம் சிதம்பரம் கோயிலுக்கு குடும்பத்துடன் மறுபடியும் செல்கிறோம். வேறு வரன் பார்ப்பதில் முன்பைவிட அதிதீவிரமாக இருக்கிறார் அப்பா. கும்பகோணத்தில் இருக்கும் எங்கள் ஒன்றுவிட்ட அத்தை பையன் மதராஸ் பிரசிடன்சியில் அரசாங்கக் காரியாலயத்தில் ஏதோ வேலையில் இருக்கிறானாம். அவனையே பேசி முடிக்கச் சொல்லி அம்மா வேறு வற்புறுத்துகிறாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜன்னல் வழியாகத் தெரியும் பிள்ளையார் கோயிலின் வேப்ப மரத்தின் உச்சியைப் பார்த்தபடி பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறேன், அதன் நிழலில் நாம் சந்தித்துகொண்ட நாட்களை நினைத்தபடி. சீக்கிரம் பதில் தாருங்கள். என்னால் இந்தப் பாரத்தைத் தாங்க முடியவில்லை!’

இங்ஙனம்,

தங்கள் உமையம்மாள்.

1980 காஞ்சனா, விஜயசங்கருக்கு எழுதிய தபால், டிசம்பர்.

'என் அன்புக்குரிய விஜயசங்கருக்கு,

காஞ்சனா எழுதிக்கொள்வது.

வேலை தேடி நீங்கள் சென்னைக்குச் சென்ற நாள் முதல் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 'சென்னைக்குச் சென்றால் ஏதாவது கம்பெனியில் வேலை கிடைப்பது சுலபம்’ என நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், உங்கள் குருவிக்கூடு தலைமுடியை கோதிவிடும் என் கைவிரல்கள், தனிமையில் என்னிடமே பேசிக்கொண்டிருக்கின்றன. அன்று உங்கள் வீட்டுக் கொடியில் இருந்து நான் திருடிவந்த பூ போட்ட பெரிய காலர் வைத்த டெர்லின் சட்டையைத்தான், தற்போது தலைக்கு வைத்துப் படுத்துக்கொள்கிறேன். இருந்தாலும் தூக்கம் என் கண்களைத் தழுவ மாட்டேன் என அடம் பிடிக்கிறது. 'சிப்பி இருக்குது... முத்தும் இருக்குது... திறந்து பார்க்க நேரம் இல்லடி ராசாத்தி...’ என்ற பாடல் உங்களையே எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது. விரைவில் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டு, என்னைப் பெண் கேட்டு வாருங்கள்... காத்திருக்கிறேன்!’

இப்படிக்கு,

உங்கள் காஞ்சனா.

2001 கவிதா, ஆனந்துக்கு அனுப்பிய இமெயில், ஃபெப் 20.

'டியர் ஆனந்த், பெங்களூரில் குளிர் எப்படி இருக்கிறது? நீ போன பிறகு, உன்னைப் பார்க்க முடியாமல் வருத்தமாக இருக்கிறது. எனது கல்லூரிக்குப் பக்கத்திலேயே இப்போது ஒரு இன்டெர்நெட் சென்டர் ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு இருந்துதான் இதை அனுப்புகிறேன். என் தோழிதான் எனக்கு மெயில் ஐ.டி கிரியேட் பண்ணித் தந்தாள். 'மின்னலே’ என ஒரு படம் வந்திருக்கிறது. அதன் பாடல்  கேசட்டை, தம்பி வாங்கி வந்தான். அதில் 'வசீகரா...’ எனத் தொடங்கும் பாடலை ரீவைண்ட் செய்து செய்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். உனக்கு வேலை மிகவும் கஷ்டமாக இருப்பதாக உன் அம்மாவைப் பார்த்தபோது சொன்னார்கள். அதைக் கேட்க எனக்கும் கஷ்டமாக இருந்தது. இந்த வருடம் என் கல்லூரிப் படிப்பு முடிந்த உடனே என் கல்யாணப் பேச்சை எடுப்பார்கள். நீ அடுத்த முறை ஊருக்கு வரும்போது உன் அம்மாவிடம் சொல்லி என் வீட்டில் பேச முயற்சிசெய். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நல்லா சாப்பிடுறியா? உடம்பைப் பாத்துக்கோ!

யுவர்ஸ் லவ்லி,

கவிதா.

2015 மின்னு, சித்தார்த்துக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ். வெட்னஸ்டே 7:20

'ஹாய் சித்து... ஹவ் ஆர் யூ? ஒய் டோண்ட் யூ ரிப்ளை மீ? ரிஷசன் என எம்ப்ளாயீஸை வேலையைவிட்டு அனுப்பியதாக கார்த்தி சொன்னான். நீயும் இரண்டு நாட்களாக ஒழுங்காக ரிப்ளை எதுவும் பண்ணலை. இந்த வேலை போனால் என்ன, இன்னொரு வேலை பார்த்துக்கலாம். இப்போதைக்கு நான் சம்பாதிக்கிறதை வைத்துகூட சில காலம் ஓட்டலாம். இந்த மாதம் ஊருக்குப் போகும்போது உன்னைப் பற்றி அப்பாவிடம் பேசலாம் என இருக்கிறேன். 'டென்ஷனில் இருக்கிறேன்’ எனச் சொல்லி ஓவரா தம் அடிக்காதே. நாளையில் இருந்து எனக்கு ஷிஃப்ட் மாறுது. உன் ரூம் பக்கம் வருகிறேன். பேசணும். ப்ளீஸ் ரிப்ளை. லவ் மின்னு. :)’

கார்ப்பரேட் சித்தன்

அஞ்ஞானச் சிறுகதைகள் - 27

'மீதி முத்தம் நாளைக்கு' என்றாள் காதலி.

'காதலிலுமா இன்ஸ்டால்மென்ட்?' என்றான் கார்ப்பரேட் சித்தன்.

சந்தோஷ் நாராயணன்