
அஞ்ஞானச் சிறுகதைகள் - 25
''பெருவெடிப்பு... அதாவது 'பிக்பாங்’ என்பது ஒரு நொடியில் நடந்தது. அதிலிருந்துதான் நமது யுனிவர்ஸ் தோன்றியது. அது விரிந்துகொண்டே செல்கிறது. அந்த ஒரு நொடிக்கு முன்னால் என்ன இருந்தது. 'ஒரு புள்ளி மட்டும்’ என அறிவியல் சொல்கிறது. அப்படித்தானே?'' - கேட்டான் ஸ்டீபன், கேள்விகளையே மூளையாகக்கொண்ட மேற்கத்திய மாணவன். புரொஃபஸர் புன்னகைத்தார்.

அவர் மேஜை மீது இருந்த சிறிய வெண்கலச் சிற்பத்தைச் சற்று நகர்த்திவைத்தபடி ஸ்டீபன் மீண்டும் கண்களில் சந்தேகத்தைத் தேக்கிக் கேட்டான், ''சார்... அந்தப் புள்ளி என்ன வடிவில் இருந்திருக்கும்? அது அந்தரத்தில் மிதந்துகொண்டு இருந்திருக்குமா? ஏனென்றால், 'பிக்பாங்’க்குப் பிறகுதான் ஸ்பேஸ் என்பதே உருவானதாக அறிவியல் சொல்கிறதே?''
''இல்லை... எதுவுமே தானாக உருவாக வாய்ப்பு இல்லை. 'கிரியேட்டிவ்’ என்ற ஒன்று இருந்தால், கிரியேட்டர் என்ற ஒருவரும் இருந்தாகணும்'' என்றார் புரொஃபஸர்.
''கடவுள் எனச் சொல்கிறீர்களா சார்?' - சந்தேகமாகக் கேட்டான் ஸ்டீபன்.
''இல்லை. அந்தப் புள்ளி உருவாகக் காரணமாக இருந்த ஏதோ ஒன்று அல்லது அந்தப் புள்ளியுடன் தொடர்புள்ள ஏதோ ஒன்று. தானாகவே எதுவும் உருவாகும் என்பதை அறிவியல் நம்பவில்லை'' எனச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
ஸ்டீபன் குழப்பத்துடன் என்ன செய்வது எனத் தெரியாமல், மேஜை மீது இருந்த அந்தச் சிறிய சிற்பத்தைக் கைகளில் எடுத்து மேலும் கீழும் பார்த்துக்கொண்டே யோசித்தான். அதன் சிறிய வெண்கல இடது பாதத்தில் சின்னப் புள்ளியாக எதுவோ ஒட்டிக்கொண்டிருந்ததை உற்றுப்பார்த்தான். அது, கண்ணாடித் துகள்போல மின்னியது. ஒரு கணம் தன்னுடைய பிம்பம் சிறியதாக அதில் பிரதிபலிப்பதைப் பார்த்தான். சிலையை உதறிவிட்டு எடுத்த இடத்தில் வைத்தான்.
''இது என்ன சிற்பம் சார்?'' புரொஃபஸரிடம் கேட்டான்.
''ஆடல் வல்லான். அதாவது நடராஜர்'' என்றார் புரொஃபஸர்.

விளம்பரங்களில் செக்ஸ்
தொண்ணூறுகளில் மிலிந்த் சோமனும் மது சாப்ரேவும் நிர்வாணமாக நடித்த ஷூ விளம்பரம் சர்ச்சையைக் கிளப்பியது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இந்தி நடிகை பூஜாபட் பாடிபெயின்ட் பண்ணிய தன் தேகத்தை விளம்பரங்களில் காட்டி இன்னொரு சர்ச்சை கிளப்பினார். பாலியலை பூச்சாண்டி ரேஞ்சுக்கு ஒளித்துவைத்து கண்ணாமூச்சி காட்டும் நமது சமூகத்தில், இந்தச் சர்ச்சைகளும் அதற்குக் கிளம்பும் எதிர்ப்புகளும் புதிது அல்ல.
மேலை நாடுகளில் செக்ஸ் என்கிற விளம்பரப் பொட்டலத்தில் கட்டி, பொருட்களை சந்தையில் விற்பது சகஜமான ஒன்று. உதாரணம், ஆக்ஸ் பெர்ஃபியூம் விளம்பரங்கள், கேன்ஸ் விளம்பர விழாக்களில் பலதடவை விருதுகளை அள்ளியவை. அதனுடன் ஒப்பிடும்போது ஆக்ஸ் இந்திய மார்க்கெட்டில் பண்ணுகிற விளம்பரங்கள் ரொம்பவும் கண்ணியமாக இருக்கின்றன.
இந்திய விளம்பரங்களைப் பொறுத்தவரை காமசூத்ரா ஆணுறை மிகவும் தைரியமாகக் கொஞ்சமே மறைக்கப்பட்ட தேகங்களுடன் விளம்பரங்களை வெளியிட்டது. கலைக்கும் ஆபாசத்துக்கும் இடையே ஒரு நூலிழைதான் இடைவெளி. சில வருடங்களுக்கு முன்பு பார்த்த டேவ் சாண்டர்ஸ் தொகுத்த செக்ஸ் இன் அட்வெர்டைஸிங் ஆங்கிலப் புத்தகம், விளம்பரங்களில் செக்ஸ் பற்றி படங்களுடன் (விளம்பரப் படம்) கூடிய ஒரு பதிப்பு. கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கு உலகில் வெளியிடப்பட்ட முக்கியமான விளம்பரங்களின் தொகுப்பு. ஆண் - பெண் உடல்களை வைத்து அழகாகக் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்கள். மிகுந்த படைப்புத்திறனுடன் உருவாக்கப்பட்டு சர்வதேச விருதுகள் பல பெற்ற விளம்பரங்களின் தொகுப்பு இது. இந்த விளம்பரங்களை இந்திய ஊடகங்களிலும், நமது சாலையோர விளம்பரப் பலகைகளிலும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தேன். மூடி மறைக்கப்பட்ட சமூகத்தில் இருந்துவரும் ஒரு மனம் அதை எப்படி எதிர்கொள்ளும்? அதை ஆதரிப்பதா... எதிர்ப்பதா?

பி.கு: பீச் பட விளம்பரத்தில் செக்ஸ், இல்லூஷனாக ஒளிந்துள்ளது. புரிந்துகொள்பவர்கள் பாக்கியவான்கள்!
''கிரெடிட் கார்டு வாங்கினா இப்போ 10 பாயின்ட் ஃப்ரீ'' என்றாள் தொலைபேசி வங்கிப்பெண்.

''கிரெடிட் கார்டே வாங்கலேனா, நான் எப்பவுமே ஃப்ரீ'' என எஸ்கேப் ஆனான் கார்ப்பரேட் சித்தன்!
''கிரெடிட் கார்டு வாங்கினா இப்போ 10 பாயின்ட் ஃப்ரீ'' என்றாள் தொலைபேசி வங்கிப்பெண்.
''கிரெடிட் கார்டே வாங்கலேனா, நான் எப்பவுமே ஃப்ரீ'' என எஸ்கேப் ஆனான் கார்ப்பரேட் சித்தன்!
மினி மியூசியம்
பள்ளிப் பிராயத்தில் மியூசியத்துக்குச் சென்றிருப்பீர்கள். ஆதிகாலத்து விலங்கின் பயமுறுத்தும் எலும்புக்கூடோ, காலங்கள் பாசியாகப் படர்ந்த ஒரு கல்வெட்டோ, பாடம் செய்யப்பட்ட பழங்காலத்துப் பறவையின் பஞ்சடைக்கப்பட்ட இறகுடலோ, புரியாத ஜிலேபி மொழியில் கதை பேசும் கல்வெட்டோ... ஏதோ ஒன்றைக் கைகட்டியபடி அடக்கமாக வியந்து பார்த்திருப்பீர்கள்!
அப்படி ஒரு மியூசியம் உங்கள் கைக்குள்ளேயே அடக்கமாக இருந்தால் எப்படி இருக்கும்? ஏதோ ஸ்மார்ட்போன் ஆப் என நினைத்துவிடாதீர்கள். நிஜமாகவே ஒரு குட்டியூண்டு மியூசியம். கற்பனையே சுவராஸ்யமாக இருக்கிறதுதானே? இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார் வெர்ஜீனியாவைச் சேர்ந்த ஹான்ஸ் ஃபெக்ஸ்.
ஆய்வு விஞ்ஞானியான தன் தந்தை டாக்டர் ஜோர்கன் ஃபெக்ஸ், மால்டா தீவில் இருந்து கொண்டுவந்த உறைய வைக்கப்பட்ட 'ரெசினி’ல் ஒட்டிய சில ஆராய்ச்சி துணுக்குகள் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் ஹான்ஸ். அப்போது அவருக்கு வயது ஏழு. 'இந்த முறையைப் பின்பற்றி ஏன் குட்டிக் குட்டியாக மியூசியம் உருவாக்கக் கூடாது?’ என்ற எண்ணம் அப்போதே அவருக்குள் தோன்றியதாம்.

கடந்த 35 வருடத் தேடலில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் முதல் மியூசியம் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரது உதவிகளையும் நாடிய ஹான்ஸ், இப்போது அதைச் சாத்தியமாக்கிவிட்டார்.
டைனோஸர் முட்டையின் சிறு துண்டு முதல் நிலாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 'லுனார் ராக்’ வரை கிட்டத்தட்ட பூமியின் வரலாற்றையே சின்னச்சின்ன 'சாம்பிள் பீஸ்’களாக உறைந்த ரெசின் என்கிற கண்ணாடிப்பேழைக்குள் பதித்து விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டார் ஹான்ஸ்.
மேலே புகைப்படத்தில் குட்டிக் குட்டியாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பார்த்தால் வியப்பீர்கள்; திகைப்பீர்கள். அறிவியலிலும் வரலாற்றிலும் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றை வாங்கி படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டால், இண்டியானா ஜோன்ஸில் வரும் 'ஹாரிசன் ஃபோர்டு’ மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சியாளனாக கனவில் ஃபீல் பண்ணலாம்!
சந்தோஷ் நாராயணன்