மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூன்றாம் உலகப் போர் - 06

மூன்றாம் உலகப்போர்
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாம் உலகப்போர் ( மூன்றாம் உலகப்போர் )

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

மெரிக்கா சென்ற விமானம் திரும்பி வந்ததைப் போல 47 மணி நேரத்தில் பதில் மின்னஞ்சல் வந்தது எமிலியிடம் இருந்து.

 ''அன்புள்ள சின்னப்பாண்டி...

உங்கள் அழைப்புக்கு நன்றி.

நீங்கள் யார்? தெரியாது எனக்கு.

உங்கள் மொழி நான் அறிந்திருக்கவில்லைஎன்பது என் குற்றமாக மட்டும் இருக்க முடியாது.

உங்கள் பல்கலைக்கழகத்தின் பெயர் காந்தி என்று தொடங்கக் கண்டேன். என் அறிவும் உணர்வும் ஒன்றாக இயங்குமாயின், அரசியல் துறவி - இந்திய தேசத்தந்தை - விடுதலைப் போராளி என்ற அளவில் நான் அறிந்துவைத்திருக்கும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகத்தான் அது இருக்க முடியும்.

மூன்றாம் உலகப் போர் - 06

உங்கள் கடிதத்தில் ஒரு வாக்கியம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. என் கட்டுரை யைப் பன்னாடுகளிலிருந்தும் பாராட்டிய வர்கள் என் அறிவையே வியந்தார்கள். அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு; வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல். அறிவை மட்டும் கொண்டாடுவதில்லை நான். அது ஒரு தகவல் போதை; அல்லது மூளைச் சாராயம்.

என் கட்டுரையை மனிதகுலத்தின் மீதான கருணையின் கசிவு என்று குறிப்பிட்டுஇருந்தீர்கள். அப்போதுதான் என் இதழ்க்கடையில் பொய்யில்லாத புன்னகை ஒன்று பூத்து விழுந்தது.

மனிதநேசம் இல்லாத அறிவு யாருக்கு வேண்டும்? மண்ணின் மீது விழாத மழையாலும் மனிதன் மீது விழாத கண்ணீராலும் யாது பயன்? உங்கள் பல்கலைக்கழகத்துக்கான என் வருகையால் உங்கள் மண்ணுக்குச் சிறுபயன் விளைந்தாலும் பெருமகிழ்வு பெறுவேன் நான்.

என்னைப் பற்றி எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். அது பல்கலைக்கழகத்தின் கோரிக்கையல்ல; கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஒரு வாசகனின் யாசகம் என்று அழகான, ஆனால் அதீதப் பணிவான மொழியில் எழுதியிருக்கிறீர்கள்.

சொல்லப்படுகிற அளவுக்குச் சுவை கொண்டதில்லை என் பால்யம்.

மூன்றாம் உலகப் போர் - 06

அமெரிக்காவில் பலருக்கும் வாய்ப்பதுபோல் எனக்கும் அழகான தாய் - அன்பான தந்தை. அட்லாண்டாவில் பிறந்தவள் நான். ஏரிகளைத் தலைக்கு வைத்து உறங்கும் காடுகளின் தலைநகரம் அது.

எங்கள் வீடு என்பது ஒரு துண்டுக் காடு. மனிதர்களின் மொழியைவிடப் பறவைகளின் மொழியே முதலில் பரிச்சயமானது எனக்கு. நான் கண்விழித்த உலகத்தின் முதல் ஆச்சரியம் பறவைதான். கூடுதான் என் வீடு; வீடு என்பது நான் தடம் மாறி வந்த இடம் என்றே தோன்றிக்கொண்டேஇருக்கும் எனக்கு. பறவைகளின் குடில் என்பதனாலேயே மனசார நேசித்தேன் மரங்களை. அப்படித்தான் திறந்ததெனக்கு இயற்கை நேசத்துக்கான முதல் பாதை.

அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும். மிருகக்காட்சிச் சாலைக்கு அழைத்துச்

சென்றார்கள் என்னை அப்பாவும் அம்மாவும். அந்த வளாகத்தை நான் ரசிக்கவில்லை. எந்த மிருகத்தின் முகத்திலும் சிரிப்பில்லை; பறவைகளுக்கு உடல் நலமில்லை. மிருகங் களைப் பார்க்க வந்த மனிதர்களையெல்லாம் கூண்டிலடைத்து - அவர்களை வேடிக்கை பார்க்க மிருகங்களைத் திறந்துவிட வேண்டும் என்று தோன்றியதெனக்கு.

அங்கே பெரிதும் என்னை ஈர்த்தது சிவப்புக் கொண்டைக் குயில் ஒன்று. அது வேண்டும்என்று அடம்பிடித்தேன். கடிந்தார்கள் என்னை; கண்டித்தார்கள். முதன்முதலாய் அம்மா என்னை அடித்ததாகவும் ஞாபகம். உண்ணவில்லை - உறங்கவில்லை - பள்ளி செல்லவில்லை. அம்மா அடித்த அடியில் காய்ச்சலுற்றுக்கிடந்தேன்.

அந்த வாரம் என் பிறந்த நாள் வந்தது.

''என்ன வேண்டுமோ... கேள் மகளே!'' என்றார் அப்பா.

''சிவப்புக் கொண்டைக் குயில் வேண்டும்; எனக்கு மட்டுமல்ல... என்னோடு வகுப்பில் படிக்கும் எல்லாருக்கும்'' என்றேன்.

இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.

என்னோடு சேர்த்து என் வகுப்புத் தோழர் கள் அனைவருக்கும் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டது ஆளுக்கொரு சிவப்புக் கொண்டைக் குயில். அன்றுபோல் நான் அவ்வளவு மகிழ்ந்ததுமில்லை; அதற்கடுத்த வாரம் போல் அழுததுமில்லை.

ஒரு மாலையில் வந்து பார்த்தால் கூண்டுக்குள் இறந்துகிடந்தது என் உலகம். அழுதேன் - விம்மி விசும்பி அழுதேன். முதன்முதலில் எனக்காக அல்லாமல் இன்னோர் உயிருக்காய் அழுதேன். ஆள் செத்தால்கூட அப்படித்தான் அழுவார்கள் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். என் ஜியோமெட்ரிக் பாக்ஸில் சவப்பெட்டி தயாரித்துத் தோட்டத்தில் புதைத்தேன்.

என்னைப் பாதித்தது அந்தப் பறவையின் சாவு. இந்த உலகத்தை நான் பார்க்கத் தொடங்கியதே மரணத்தின் ஜன்னல் வழியாகத்தான். இந்த உலகத்தைப் பிறப்பிலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் சோகத்தில் முடிகிறான்; மரணத்திலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் ஞானத்தில் முடிகிறான்.

இதை வாசிக்கும்போது உங்கள் இந்திய இதயமும் அழுதிருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால், கடவுளுக்குப் பக்கத்தில் பறவைகளை வைத்திருக்கும் பண்பாடு படைத்தவர்கள் நீங்கள் என்று படித்திருக்கிறேன்.

வளர்ந்தேன்.

நான் விரும்பிய கல்வி வாய்த்தது எனக்கு. உயிர்களின் மீதும் பூமியின் மீதுமான நேசத்தில் சுற்றுச்சூழலில் பட்டம் பெற்றேன்; பட்டயப் படிப்பும் கற்றேன்.

சுதந்திரப் பறவையாய்ச் சுற்றிக்கொண்டி ருக்கிறேன். என் தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் என் வங்கிக்கணக்கி லிட்டிருக்கும் பெரும்பணம் போதுமெனக்கு. இன்னும் அதைத் தொடவில்லை; ஊடகங்களின் ஊதியத்தில் ஓடிக்கொண்டிருக் கிறேன்.

இன்னும் என்ன வேண்டும் என்னைப் பற்றி?

உயரம் 170 செ.மீ.

கடைசியாய்ப் பார்த்தபோது எடை 58 கிலோ கிராம். (அது அடிக்கடி ஏறும் இறங்கும் எங்கள் டாலர் மதிப்பைப் போல)

நிறம் - ரோஜாவில் கரைந்த மஞ்சள்.

வயது இருபத்துமூன்றும் சில மாதங்களும்.

இவ்வளவும் சொன்ன பிறகு என் காதல் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வம் காட்டலாம். அதை நீங்களாய்க் கேட்பது நாகரிகமாய் இருக்காது உங்களுக்கு; சொல்லா மல் விடுவது நேர்மையாய் இருக்காது எனக்கு.

அது என்னவோ தெரியவில்லை... என் பருவம் குறுகுறுக்கத் தொடங்கிய நாளிலிருந்து என் ஈர்ப்பெல்லாம் மூத்தவர்கள் மீதுதான்.

அந்த வகையில் முதலில் என் கவனம் கவ்வியவன் அட்லாண்டா சென்டரில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லர்காரன். எவ்வளவு கூட்டத்திலும் அவன் புன்னகை என் மீது மட்டும் வந்துவிழும். அவன் வழுக்கைத் தலையின் மீது எனக்கு இனம் புரியாத கிலேசம் இருந்தது; அதன் பளபளப்பில் எனக்கொரு பால்கிளர்ச்சி இருந்தது.

இரண்டாவது என்னை ஈர்த்தவர் விவாகரத்தான என் பேராசிரியர். என்னைப் பார்த்து மட்டுமே பாடம் சொல்வார்; என் கையெழுத்தைப் பாராட்டுவார். அவர் மீது எனக்கு மெல்லிய மோகம் உண்டாக்கியதெல்லாம் அவர் உடல்மொழிதான். அவரைப் பார்க்கும்போதெல்லாம் தந்தையைப் போலொரு காதலர் - காதலர் போலொரு தந்தை என்றே தோன்றுமெனக்கு.

மூன்றாவது ஈர்ப்பு என் தோழியின் தந்தை மீது. எனக்கும் என் தோழிக்கும் பாடம் சொல்வார். அப்போதெல்லாம் என் கூந்தல் கடந்து கழுத்தடியில் கதகதக்கும் அவர் கரம். அதில் எனக்கொரு இதம் இருந்தது; அது காதல் இல்லை என்று அறிந்தேன்; ஆனால் அந்தக் கிளர்ச்சியின் பரவசத்தை நான் ஆசையோடுதான் அனுபவித்தேன்.

அது இனக்கவர்ச்சியா? அல்லது நான் மனநோயாளியா?

பின்னொரு நாள் கற்றறிந்தேன்.

மூன்றாம் உலகப் போர் - 06

யாருக்கெல்லாம் மூளையில் 'ஆக்சிடோசின்’ அதிகம் சுரக்குமோ அவர்களுக்கெல்லாம் நேருமாம் இது. பகிர்தலும் பாதுகாப்பும் உள்ள இடத்தில் மனசு கூடாரம் கட்டுமாம். ஆக்சிடோசின் அதீதமாய்ச் சுரக்கும் பெண்ணொருத்தியாம் நானும். எனக்கெதிராய்ச் சுரக்கும் மூளைக்கு நானென்ன செய்வேன்?

என் சம வயது கொண்ட இளைஞர் சிலரால் நான் காதலிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் என் மனசுக்குள் இயங்கும் திசைகாட்டும் கருவி அவர்களின் யார் பக்கமும் திரும்பியதே இல்லை. காதலுக்கு மிகவும் முக்கியமானது காரணம் இல்லாத ஒரு காரணம் என்றே தோன்றுகிறது. அந்தக் காரணம் உள்ளவர்கள் இன்னும் எனக்குக் காணக் கிடைக்கவில்லை. ஆனால் ஒருபோதும் நான் அவமதித்தது இல்லை என்னைக் காதலிக்க வந்தவர்களை.

இரண்டு கேள்விகள் வைத்திருக்கிறேன்.

''என்னைக் காதலிக்க வந்தவனே! உன்னைக் காதலிக்கும் முன் எனக்கு ஒரு காதல் இருந்தால்..?'' இந்தக் கேள்விக்குப் பலரும் பதில் சொல்லியிருக்கிறார்கள் - ''பரவாயில்லை'' என்று.

இரண்டாம் கேள்வி எறிவேன். ''உன்னைக் கல்யாணம் செய்த பிறகு எனக்கு இன்னொரு காதல் வந்தால்..?'' அதற்குப் பதிலே இருப்பதில்லை; போய்விடுகிறார்கள்.

காதலைவிட அதிகமான பிரதேசங்களைக் கொண்டது வாழ்க்கை.

காதல் என்ன என்பதை என் தாய் எனக்கு விளக்கிவிட்டுப் போய்விட்டாள்.

ஒரு மருந்து நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என் தந்தை. ஓரிடத்தில் உட்கார மாட்டார். மன்ஹாட்டன் - சின்சினாட்டி - டேட்டன் - டல்லஸ் - ஒக்லஹோமா - லாஸ்ஏஞ்சலீஸ் - வாஷிங்டன் டி.சி என்று பறந்துகொண்டேயிருப்பார். ஒருமுறை மருத்துவமனையில் இருந்த என் அம்மாவை ஒரு வாரம் அவர் வந்து பார்க்கவில்லை என்பதில் ஆரம்பித்தது ஊடல் அவர்களுக்குள்; நான் விடுதி யில் சேர்க்கப்பட்டேன்.

ஆண்டுகள் சில கரைந்தன.

வார விடுமுறை ஒன்றில் வீடு சென்றேன்.

திறந்த அடுப்படியில் முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் கோழி சுட்டுக்கொண்டிருந்தான்.

''ஹலோ'' என்றேன்.

''ஹாய்'' என்றான்.

''என் பெயர் எமிலி'' என்றேன்.

''என் பெயர் ராக்'' என்றான்.

''நீங்கள்..?'' என்று நீட்டினேன்.

''உன் தந்தை போன்றவர்'' என்றாள் குளியலறை விட்டுவந்த அம்மா.

அழுகை வந்தது எனக்கு; கண்ணீர் வரவில்லை.

''இனி விடுதி வேண்டாம்; வீட்டில் இரு'' என்றாள்.

நான் எழுந்துகொண்டேன்.

''உனக்கு மாறி மாறிக் கணவர்கள் இருக்க முடியும் மம்மி; எனக்கு மாறி மாறி டாடி இருக்க முடியுமா?''

வெளியேறினேன்.

ஒன்று புரிந்தது - வாழ்க்கை என்பது அவரவர் பக்கத்து நியாயம்.

ங்கள் அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா என் தூரத்துக் கனவு.

எங்கள் அமெரிக்கா அறிந்தவரையில் வித்தியாசமான தேசம் இந்தியா.

உயர்ந்த ஞானம் தொட்டது இந்தியா;

அதிக மூடநம்பிக்கை கொண்டதும் அதுவேதான்.

வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ளதும் இந்தியா;

வெளிநாடுகளில் அதிகப் பணம் பதுக்கி வைத்திருப்பதும் அதுவேதான்.

தனி மனிதனுக்கு நிறைய நீதி சொன்னதும் இந்தியா;

ஊழல் என்பதை ஒரு வாழ்க்கை முறை என்று பழக்கி வைத்திருப்பதும் இந்தியா.

இந்து-பௌத்தம்-சமணம் என்ற முப்பெரு மதங்களை ஈன்று கொடுத்ததும் இந்தியா;

மதச்சார்பற்ற தேசம் என்று மார்தட்டுவதும் இந்தியா.

ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத் தியதும் இந்தியா;

எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா.

காமத்தின் வழி கடவுளைக் கண்டதும் இந்தியா;

கடவுளின் வழி காமத்தைக் காண்பதும் இந்தியா.

இத்தனைக்குப் பிறகும் மனித வளத்தோடு, ஜீவ துடிப்போடு, உடல் வருத்தும் உழைப்போடு உலகப் போட்டியில் ஓயாது ஓடிக்கொண்டிருப்பதும் இந்தியா.

இந்தியாவின் குடும்பக் கட்ட மைப்பு பிடிக்கும் எனக்கு.

தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்து போராடும் விவசாயிகளின் தீராத நம்பிக்கை பிடிக்கும் எனக்கு.

தெருவில் போகும் யானை, திறந்தவெளி மயில்கள், வழிபடுபொருளாய் மரங்களையும் போற்றி வளர்க்கும் கோயில்கள் எல்லாம் ஆச்சரியம் எனக்கு.

இங்கிலாந்தின் செயின்ட்பால் கதீட்ரல் போல இந்தியாவின் தாஜ்மகாலும் அழகழிந்துகொண்டே வருகிறதாம் அமில மழையில். அதன் பூரணம் கழிவதற்குள் ஒருநாள் கண்டுகளிக்க ஆசைப்பட்டேன். உங்களால் ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது - நன்றி.

உங்கள் கருத்தரங்கில் கலந்துகொள்வதோடு என் கனவுகள் சிலவும் நிறைவேறும்.

சிறிது காலம் இந்தியாவில் வாழ வேண்டும்என்று தோன்றுகிறது எனக்கு.

இந்தியாவின் நதிகளையும் வனங்களையும் இந்தியர்கள் எவ்விதம் கையாள்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆசை எனக்கு.

இந்திய விவசாயிகளோடு கொஞ்சநாள் குடியிருக்க வேண்டும்.

மிதந்து வரும் பிணங்களைப் புறந்தள்ளிக்கொண்டே கங்கையில் ஒருநாள் நீராட வேண்டும்.

சாமியார்களோடு ஒருநாள் கஞ்சா புகைக்க வேண்டும்.

உங்கள் நாட்டில் இறுதி ஊர்வலமே ஒரு கொண்டாட்டமாமே!

நானும் கூத்தாட வேண்டும்.

இன்னுமோர் ஆசை.

ஒருநாள்... ஒரே ஒருநாள் இந்தியாவில் பிச்சையெடுக்க வேண்டும்.

உயர்ந்த மலைக் குன்றுகளில் தியானிக்க வேண்டும்.

வாழ்வின் விரிந்த சிறகுகளில் நான் பயணம்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னைப் பற்றி இவ்வளவு உண்மை களை உங்களிடம் சொல்ல வைத்தது - உங்களைப் பற்றி நீங்கள் சொன்ன ஓர் உண்மை. உங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுபவன் ஒரு பல்கலைக் கழகத்து மாணவனும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளனும் மட்டுமல்லன்; விவசாயத் தோல்வியில் தற்கொலை செய்துகொண்ட ஒரு தாத்தாவின் பேரன் என்று சொல்லியிருந்தீர்கள். ஒளிக்கப்படாத அந்த உண்மை நெகிழவைத்தது என்னை.

உண்மைதான் உண்மை வாங்கும் எப்போதும்.

உங்களுக்கு வாழ்த்துக்கள்.

துணைவேந்தருக்கு என் வணக்கம்.

முறைப்படியான அழைப்பு வந்த பிறகு என் பயண விவரங்களைத் தெரிவிக்கிறேன்.''

- எமிலி

கிழ்ந்து போனான் சின்னப்ப£ண்டி.

'உண்மையே! உன் மறுபெயர்தான் எமிலியா?’ சிலிர்த்து சிலாகித்துக்கொண்டான்.

எமிலியின் தன் வரலாற்றைத் தனக்கு வைத்துக்கொண்டு ஒப்புதல் கடிதம் மட்டும் துணைவேந்தருக்குத் தந்தான்.

'செயல்வீரன் சின்னப்பாண்டி’ என்று அரசியல்வாடையோடு துணைவேந்தர் பாராட்டியபோது சின்னப்பாண்டியின் கைத் தொலைபேசி சிணுங்கியது.

துணைவேந்தரைப் பார்த்து, ''அய்யா மன்னிக்கணும்'' என்றபடி தொலைபேசி எடுத்தான்.

''சின்னப்பாண்டி! உங்கப்பனுக்கும் அண்ணனுக்கும் பெரிய தகராறு. ஒடனே வந்து சேரப்பா.''

அவன் முகத்திலிருந்த புன்னகை போய்விட்டது.

மனசால் அவன் அட்லாண்டாவில் இருந்தான்; எழுந்தான்.

அட்லாண்டாவிலிருந்து புறப்பட்டான் அட்டணம்பட்டிக்கு.

- மூளும்